நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் பேட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.செல்வராஜ் வெற்றி பெற்று நாகை தொகுதி எம்.பி ஆனார். இதனையடுத்து வெற்றி வாய்ப்பை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து எம்.பி., செல்வராஜ் நேற்று திறந்த வேனில் ஊர்வலம் சென்றார்.
அகஸ்தியன்பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் இரவு 8 மணியளவில் திறந்த வேனில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பிற கட்சித் தொண்டர்கள் மற்றும் போலிஸார் எனத் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் திடீரென மர்ம நபர் ஒருவர், எம்.பி., செல்வராஜ் மீது கத்தியை வீசினார். இதில் அதிர்ஷ்டவசமாக கத்தி வேனில் பட்டு கீழே விழுந்தது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் கத்தி வீசியவர் யார் என தெரியாமல் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கடைசிவரை, கத்தி வீசிய மர்ம நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை. இவ்வளவு போலிஸ் பாதுகாப்பு இருந்தும் எம்.பி., செல்வராஜ் மீது தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளி யார் என்பதனைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலிஸாரிடம் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தையொட்டி எம்.பி., செல்வராஜுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கூட்டணி கட்சித் தலைவர்கள் கோரியுள்ளனர்.