பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கொலையை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுடன் இணைத்து பேசியதாக ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக ராகுல் காந்தி இன்று மும்பை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நேற்று இரவு ஒரு நீண்ட விளக்க கடிதத்தை ராகுல் வெளியிட்டிருந்தார்.
இந்த விளக்க கடிதம் வெளியான மறுநாளான இன்று ராகுல் காந்தி ஆஜராவதால் காங்கிரஸ் தொண்டர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே அதிகளவில் குழுமியிருந்தனர். விசாரணை முடிவில், ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' பா.ஜ.க , மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிரான எனது போராட்டம் தொடரும். கடந்த 5 ஆண்டுகளாக போராடியதை விட 10 மடங்கு அதிக வீரியத்துடன் நான் தொடர்ந்து எதிர்த்து, போராடுவேன். அவர்கள் என்னை தாக்கி பேசுவதை, நான் ரசிக்கிறேன் '' என்று கூறினார்.