10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை சர்வதேச தமிழாய்வு சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இதன் இணை அமைப்புகள் வட அமெரிக்காவின் தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செயல்படுகிறது.
கடந்த 9 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கிவருகிறது. இந்நிலையில், 10-வது உலக தமிழ் மாநாட்டிற்கும் ரூ.5 கோடி நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வந்தது. இந்த மாநாடு வெளிநாடுகளில் நடைபெறுவதால் அதற்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். தமிழக மக்கள் வரிப்பணத்தில் தமிழ் மொழியை வளர்க்க மாநில அரசு நிதி அளிக்கிறது. இதற்கு அனுமதி அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
உலக தமிழ் மாநாட்டிற்கு, தமிழக அரசு சார்பில் பலமுறை அனுமதி கேட்ட்க்கப்பட்ட போதும் தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து நிதி அளிக்க தமிழக அரசும் முன்வரவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத் தமிழ் மாநாட்டுக்கு செல்ல வேண்டியவர்களில் 40 பேருக்கு விசா இன்னும் கிடைக்கவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஜுன் 20 அன்றே சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ‘பயோ மெட்ரிக்’ பதிவு முறைகளை முடித்தவர்க்கு நேர்முக தேர்வுக்கு அனுமதி வராமல் உள்ளது. இதனால் தமிழ் ஆர்வலர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த மாநாட்டை நடத்தும் சர்வதேச தமிழாய்வு சங்கத்தினர் சார்பில், தமிழக அரசின் நிதியை பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுத்தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசனின் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,"உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியை பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் நேரில் சென்று வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளோம்.
இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் நிதியுதவி அளித்துள்ளனர். எனவே இதனைக்கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு, பிரதமர் மோடியிடம் பேசி அனுமதியை உடனே பெற வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தேர்தலில் லாபம் அடைவது மட்டுமல்லாமல், தமிழ் மொழியை வளர்ப்பத்திலும் இருப்பது என்பது அவசியம், முக்கியமானதும் கூட என தெரிவித்தார்.
மேலும் மாநாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியுதவிக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகத்தின் மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், எஸ்.செந்தில் குமார், கே.நவாஸ்கனி மற்றும் ஏ.செல்லக்குமார் ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அனால், அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் பா.ஜ.க கூட்டணியில் உள்ளார். ஆனால் இதைப்பற்றி அவர் கிஞ்சிற்றும் கவலைப்படுவதாக இல்லை. ஆனால் எதிர்க்கட்சி எம்.பிகள் இதற்காக அரும்பாடுப்படுவது சமூக வலைதளங்களில் வரவேற்பையும், பாராட்டுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.