அ.ம.மு.க-வில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்த தங்கதமிழ்செல்வன், தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தினகரனின் உதவியாளருக்கு போன் செய்து தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “தங்க தமிழ்செல்வனை கட்சியிலிருந்து நீக்குவதில் எந்தத் தயக்கமும், அச்சமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளரிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ குறித்துப் பேசிய டிடிவி தினகரன், “ஆடியோ விவகாரம் தொடர்பாக தங்கதமிழ்செல்வனிடம் கேட்டேன். தொலைக்காட்சிகளில் கண்டபடி பேசக்கூடாது எனவும் மீறினால் கட்சிப் பதவியில் இருந்து விலக்குவேன் எனவும் கண்டித்தேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “தங்கதமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது. விரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் யாரென அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க-வில் இருந்து பிரிந்து விஸ்வரூபம் எடுப்பாரா எனும் கேள்விக்கு, தங்கதமிழ்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார், என்னைப் பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்.” எனக் கூறியுள்ளார்.