தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் எதிர்பார்த்ததை விட மிகக்குறைவான வாக்குகளையே பெற்றுத் தோல்வியடைந்த நிலையில், தனது கட்சியினர் தேர்தல் பணி செய்யவில்லை எனக் குறை கூறி வந்தார்.
இதையடுத்து, தினகரன் மீது அதிருப்தியில் இருந்துவரும் தங்கதமிழ்செல்வனிடம் அ.தி.மு.க.வில் இருந்து ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார்.
தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் அ.ம.மு.க மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட அ.ம.மு.க-வினர், அ.தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்த தங்கதமிழ்செல்வன், தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தினகரனின் உதவியாளருக்கு போன் செய்து தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார் தங்கதமிழ்ச்செல்வன். அவர் பேசிய அந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கதமிழ்ச்செல்வன் தேனியில் அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில் கட்சி மேலிடம் நிர்வாகிகளை அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த தங்கதமிழ்ச்செல்வன் கோபமாகப் பேசியதாகவும் தகவல்கள் கசிகின்றன.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குமிடையே பனிப்போர் இருந்து வரும் நிலையில், அ.ம.மு.க-விலும் விரிசல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.