சென்னை அடையாறில் நேற்றைய தினம் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பத்திரிக்கையாளர்கள் குறித்து பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “பா.ம.க போராட்டத்தின் போது மரத்தை மரம் வெட்டியதை பற்றி நிருபர் ஒருவர், என்னிடம், `நீங்கள் மரம் வெட்டினீங்களாமே?’ என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன், 100 தடவை அதற்கு நான் பதில் கூறிவிட்டேன் என்றேன்
அதற்கு மீண்டும் சொல்லுங்கள் என்று அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். மீண்டும் கேட்பதன் நோக்கம் என்ன? ராமதாஸ் ஒரு ’மரவெட்டி’ என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தனும் அதுதானே! இனி அப்படிக் கேட்டால் ''மரத்தை வெட்ட மாட்டேன், மரத்தை வெட்டுனியானு கேள்வி கேட்பவனை வெட்டுவேன்” என்று பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இந்த பேச்சுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது," தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசி உள்ளார்.
டாக்டர் ராமதாஸ் அவர்களின் தரக்குறைவான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தனது பேச்சுக்காக டாக்டர் ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும். வயதின் காரணமாக கண்டனத்தை கவனத்துடனே சென்னை பத்திரிகையாளர் மன்றம் பதிவு செய்கிறது”. என அதில் குறிப்பிட்டுள்ளது.