மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மே தின கொடியேற்றிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறியதாவது: இன்றைக்குத் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள்.கார்ப்ரேட் கம்பெனிகளின் அரசாக மோடி அரசு செயல்படுகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேளையின்றி தவித்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலவிரோத அரசாகவே மாறியுள்ளது
.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க 44 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அதில் பலவற்றை இந்த மத்திய அரசாங்கம் நீக்கிவிட்டு வெறும் 4 சட்டங்களை மட்டும் கொண்டுவந்துள்ளது. அதற்கு உடந்தையாக மாநில அரசும் செயல்படுகிறது. மே தினம் முழக்கம் எழுப்பும் இந்த வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் அரசு தொழிலாளர்கள் பாதுகாக்கும் அரசாகத் திராவிட முன்னேற்றக் கழகம் வரவேண்டும் என்ற உணர்வோடு மதிமுக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
பொன்பரப்பியில் தலித் மக்களின் உரிமை பறிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயகத்தின் அக்கறை உள்ள அனைத்து தோழமைக் கட்சிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எந்த வித தவறான கருத்தும் பேசவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. பேசாத வார்த்தைகளைப் பேசியதாகக் கூறி மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மிகக் கடுமையான வார்த்தைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மோசமான துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளனர். அதில் வன்முறை தூண்டும் விதத்திலும் ஆத்திரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
முத்தரசன் பகைமைக் காட்டிக் கொள்ளத் தெரியாத பன்மையானவர். அவருக்கே அலைபேசியில் அவதூறு வசைபாடுகளும், மிரட்டள்களும் வந்துகொண்டுள்ளது. இதுபோன்ற போக்கு தமிழகத்திற்கு நல்லதல்ல. எனவே ராமதாஸ் அவர்கள் இந்த நிலைமை வாராமல் தடுக்கவேண்டும். தமிழகத்தின் நலனை கொண்டு அவர் தற்போது எடுத்துள்ள அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்தார்.