1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.
பாரம்பரிய நகரத்தின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல, அதனைக் காப்பதும் கூட நமது கடமை என்பதை உணர்த்தும் வகையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது புதுச்சேரி எனும் சின்னஞ்சிறு நகரம்.
ஒவ்வொரு நகரமும் எழுதப்படாத வார்த்தைகளால் நிரம்பி வழிகிறது. அந்த வார்த்தைகள் உணர்வின் அடிப்படையில் எழுந்தவை. நகரத்தின் தெருக்களால் கட்டி எழுப்பப்படும் வார்த்தைகளை உணர்வது சிக்கலுக்குரியது.
சிறப்பான, அழகான, நேர்த்தியான என பொருள்கொள்ளும் அவ்வார்த்தைகள் நகரத்தின் தன்மையை உயர்த்துபவை. அந்த வகையில் புதுச்சேரி நகரத்தின் சூழல், நகரமைப்பு, வீடுகளின் ஒழுங்கமைவு போன்ற வார்த்தைகளின் தரம் மேம்பாடுடையவை.
17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் புதுச்சேரி நகரம் நிர்மாணிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படப் தொடங்கின. இப்போது பாரதி பூங்கா இருக்கும் இடம்தான் அந்த நூற்றாண்டின் இறுதியில் கோட்டையாக உருமாறியது. கோட்டை என்றால் பெரிய கொத்தளங்களும்,மாடமாளிகைகளும் அமைந்ததல்ல. புதுச்சேரி கோட்டை நட்சத்திர வடிவில் மண்ணால் கட்டப்பட்டது. அதாவது, சுடப்பட்ட செம்மண் கலவையாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டது.
தொடர்ச்சியான கர்நாடகப் போர்களில் புதுச்சேரி கோட்டை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. மீண்டும் இடிக்கப்பட... மீண்டும் கட்டப்பட என ஆண்டுக்கணக்கில் சைக்கிள் சுற்றுகளாக இடிப்பதும்.. கட்டப்படுவதும் நிகழ்ந்தது. இப்போது கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை.
கோட்டை இருந்த காலகட்டத்தில் அதனை மையமாக வைத்து நகரின் சாலைகள் விரிவடைந்திருக்கின்றன. எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று வெள்ளை நகரம். மற்றொன்று கருப்பர் நகரம். ville blanche, ville noire என்ற பிரெஞ்சு வார்த்தைகளில் வெள்ளை நகரமும், கருப்பர் நகரமும் அழைக்கப்பட்டன.
வடக்கில் இருந்து, தெற்கு நோக்கிச் செல்லும் வாய்க்காலின் கிழக்காக வெள்ளை நகரமும், வாய்க்காலை ஒட்டிய மேற்குப்பகுதியில் கருப்பர் நகரமும் அமைக்கப்பட்டன.
வியாபாரம் செய்ய வந்து ஆட்சியைப் பிடித்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் அதாவது பிரெஞ்சுக்காரர்கள் வெள்ளையர்கள் எனப்பட்டனர். பூர்வீக தமிழர்கள், குடியமர்ந்த மற்ற திராவிட மொழி பேசுவோரும் கருப்பர் என அழைக்கப்பட்டனர். குப்பங்களும், பேட்டைகளும், சேரிகளும் உருவாக்கப்பட்டன. ஒருவித கோழி முட்டை வடிவில் அமைந்த நகரமாக புதுச்சேரி நிர்மாணிக்கப்பட்ட போது, நகர எல்லைகள் பூவரசு மரங்களால் 'அத்து' என அறியப்படும் சொல்லால் வரையறுக்கப்பட்டன.
'புல்வார்' என்ற பெயரால் நகரத்தின் பகுதிகள் பிரிக்கப்பட்டன. மேலண்டை புல்வார், கீழண்டை புல்வார், வடவண்டை புல்வார், தென்னண்டை புல்வார் என்று அவை அழைக்கப்பட்டன. 'மகிமை கொட்டாய்' என்ற பெயரில் நகரின் நாற்புறமும் நகர நுழைவு வரி வசூலிக்க சுங்க அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இப்படியாகத்தான் இந்த பாரம்பரியம் மிக்க புதுச்சேரி நகரம் உருவானது. வெள்ளை நகரில் வீடுகள் புதிய வடிவில், அதாவது தமிழர்கள் வீடுகளுக்கு சம்பந்தமில்லாத அமைப்புகளில் கட்டப்பட்டன. கருப்பர் நகரத்தில் தமிழர் வீடுகள் அமைந்திருந்த தெருக்கள், சாதிக்கு ஒரு தெரு என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டது. செட்டித்தெரு, கோமுட்டித்தெரு, வெள்ளாளத்தெரு, சாணாரத்தெரு, வண்ணாரத்தெரு என தெருக்கள் ஒன்றன்பின் ஒன்றாக மையத்தில் இருந்து பிரிந்து விரிந்தன. அதாவது நகரின் மையம் செட்டித் தெரு என்றால் நகரின் வடக்கு எல்லை வண்ணாரத் தெருவாக அமைக்கப்பட்டது.
பெரும்பாலும் கிழக்கும், மேற்குமாக நோக்கி அமைந்திருக்கும் வெள்ளைநகரத்து வீடுகள் அமைந்துள்ள தெருக்களின் பெயர் யார் வாயிலும் நுழைவது என்பது சிரமம் தான். பிரெஞ்சுத் தளபதிகள், மதகுருமார்கள், கவர்னர்கள் பெயரால் வெள்ளைநகர வீதிகள் அழைக்கப்படுகின்றன. புஸ்ஸித்தெரு, லல்லி தொலாந்தால் வீதி, சுய்ப்ரேய்ன் வீதி என ஏராளம்.
இங்குள்ள வீடுகளில் வாசல் என்பதை காண்பது அரிது. வெளியே இரும்புத் திரை அதாவது இரும்புக் கதவு அமைக்கப்பட்டு, அல்லது பெரிய மதில் சுவர்களுக்கு மத்தியில் மரக்கதவுகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாகவே இன்றும் காட்சியளிக்கின்றன.வெளியே எது நடந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. உள்ளே எது நடந்தாலும் வெளியே நடந்து செல்பவர்களுக்குக் கூட தெரியாது. ஏன் இந்த பாதுகாப்பு?
காலனி ஆதிக்க காலகட்டத்தில் பிரெஞ்சுக்காரர்களின் வீடுகளும், அலுவலகங்களும் வெள்ளை நகரத்தை ஆக்கிரமித்திருந்தன. தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு தங்களை தாக்க முற்பட்டால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அல்லது கடல்வழியாக ஊடுருவும் இங்கிலீஷ்காரர்களிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது.
சமவெளி நிலமாக இருந்த புதுச்சேரியின் வெள்ளை நகரத்தில் கட்டப்பட்டவீடுகளின் கதவுகள் பெரிய அளவுடையவை. பால்கனி எனப்படும் மேல்மாடத்து ஜன்னல்கள் உயரம் மிகுந்தவை. வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத நிலைதான் இன்றளவும் நிலவுகிறது.
வீடுகளின் வெள்ளை வண்ணமும், ஒருவித மங்கிய சாம்பல் வண்ணச் சுவர்களும், வாசல் இல்லாத வெளியும் வெள்ளை நகரில் அமானுஷ்ய அமைதியை தந்து கொண்டிருக்கின்றன. வெள்ளை நகரத்தின் மையமான பழைய டூப்ளே வீதியை (தற்போதைய நேரு வீதி ) செங்குத்தாக வைத்து தெற்காகவும், வடக்காகவும் பிரித்துப் பார்த்தால் வடக்குப்பகுதியின் பலதெருக்கள் வியாபார நிறுவனங்களுக்கு வழிவிட்டு இருக்கின்றன. இதனால்தெருக்களின் தன்மைகள் மாறத் தொடங்கியுள்ளன. ஆனால், தெருக்களின் வீடுகள் தங்கள் மரபையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றி வருகின்றன.
இருப்பினும், வெள்ளை நகரத்தின் வீடுகள் சில கொஞ்சம் கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றன. வெள்ளை நகரத்தின் பெரும்பாலான வீடுகள் மஞ்சள் நிறத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றன. பிரெஞ்சியர் காலத்தில் மஞ்சள் நிறம் என்பது நகராட்சிக்கு சொந்தமானது. நகராட்சி வண்டிகள், வாகனங்கள், சைக்கிள்கள் போன்றவை மஞ்சள் நிறத்திலேயே அமையப் பெற்றிருந்தன. அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஐவரி என சொல்லக்கூடிய இளமஞ்சள் நிறத்தில் அமைந்திருந்தன. பிரெஞ்சு தூதர் அலுவலகம், பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
கடந்த பத்தாண்டுகளில் மஞ்சள் வண்ணத்திற்கு பெரும்பாலான வீடுகள் மாறி வருகின்றன. கடற்கரையோரத்தில்இருந்து வீசும் 'மீன் கவிச்சை' காற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பிரெஞ்சியர் வைத்த வாசனைப் பூ மரங்களில் பெரும்பாலான மரங்கள் மஞ்சள் நிறமுடையவை. இப்போது மஞ்சள் கட்டிடங்களும், மஞ்சள் நிறப்பூக்களும் நிறைந்துள்ள வெள்ளை நகரம் இரவு வேளைகளில் சோடியம் ஒளியுடன் பெருமஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னுவது பேரானந்தத்தைத் தரும். அந்த ஒளியில் நகரத்தின் முற்றமாக தெருக்கள் வானத்தை நோக்கி விரியும் உள்வெளியாக பிரகாசிக்கின்றன. இன்னும் கொஞ்ச நாளில் வெள்ளை நகரம் மஞ்சள் நகரமென அழைக்கப்படும்.
இருப்பினும் நகரப் பகுதியில் இருந்த 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிக்கூட பிரமாண்ட கட்டிடங்களும் பராமரிப்பின்றி அரசமர, ஆலமர வேர்களை உள்வாங்கி இருக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள் கலாச்சாரத்தையும், மரபையும் சீர்குலைக்கின்றன. பாரம்பரியம்மிக்க புதுச்சேரி நகரம் தன்னை காணவரும் சுற்றுலாப்பயணிகளை இன்னும் கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
மரபையும், தொன்மையையும் தாலாட்டும் தொட்டிலாக புதுச்சேரி எனும் பாரம்பரியம் மிக்க நகரம் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது.