முரசொலி தலையங்கம்

ஆன்லைனில் நீட் தேர்வு : “ஆட்சியே அசிங்கமானாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது பா.ஜ.க.” - முரசொலி காட்டம்!

ஆன்லைனில் நீட் தேர்வு என்பது அதிகமான முறைகேடுக்குத்தான் வழிவகுக்கும். ஆள்மாறாட்டக் கோஷ்டிக்குத்தான் இது அதிகமான பயனளிக்கும்.

ஆன்லைனில் நீட் தேர்வு : “ஆட்சியே அசிங்கமானாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது பா.ஜ.க.” - முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

- முரசொலி தலையங்கம்

02.11.2024

தேர்வே முறைகேடு!

“முறைகேடுகளைக் களைய நீட் தேர்வையே ஆன்லைனில் நடத்தலாம்” என்று, இதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நீட் என்ற தேர்வே முறைகேடானது. முறைகேடான தேர்வை முறைகேடு இல்லாமல் எப்படி நடத்த முடியும்? அதுவும் ஆன்லைனில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேரடியாக வந்து தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லும் போதே வட மாநிலங்களில் ஆள் மாறாட்டம் செய்கிறார்கள். இதில் ஆன்லைனில் நடத்தினால், அவ்வளவுதான். அது ஆன்லைன் தேர்வாக இருக்காது. ஆள்மாறாட்டத் தேர்வாகத்தான் இருக்கும்.

மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைத்து, சிலர் மட்டுமே உள்ளே போக முடியும் என்ற நிலைமையை உருவாக்குவதே நீட் தேர்வு ஆகும். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், தாய்மொழியில் படித்தவர்கள் ஆகியோரை கோட்டுக்கு வெளியில் நிறுத்தும் தேர்வுதான் நீட் தேர்வு. சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மற்ற பாடத்திட்டக் கல்வித் திட்டத்தில் படித்தவர்கள் அதிகம் உள்ளே நுழைய வசதியாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு பாடத்திட்டங்களில் படித்த அனைவரையும் சமமாக நடத்தும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்படுவது இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணையே மதிக்காத தேர்வு இது. பன்னிரண்டு ஆண்டுகள் படித்த கல்வியையே மதிக்காத தேர்வு இது. அதனால்தான் பத்தாம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்குப் படிப்பவர் தொகை அதிகமாகி வருகிறது.

இதற்கான பயிற்சி மையங்கள், பள்ளிக்கூடங்களுக்கு இணையாகப் பரவி வருகின்றன. அவர்கள் வாங்கும் தொகையும், இதன் மூலமாக ஓராண்டுக்கு அந்த நிறுவனங்கள் ஈட்டும் தொகையும் மாநில அரசுகள், தங்களது துறைக்கு ஒதுக்கும் பணத்துக்கு இணையானவை. கோச்சிங் சென்டர்கள் கோடிகளைக் குவிக்கும் சென்டர்களாக வளர்ந்து வருகின்றன. இந்த கோச்சிங் சென்டர்களுக்குள் லட்சங்களைக் கட்டிச் செல்ல முடியாதவர்களின் மருத்துவக் கல்வி லட்சியங்களும் நிறைவேறாது என்பதே இப்போதைய நிலைமை.

இதனை இதற்கான புரோக்கர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேள்வித் தாள்களை லட்சங்களுக்கு விற்பது இதன் தொடக்கம். குறிப்பிட்ட சென்டர்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு விடைகள், வழங்கப்படுகின்றன. அவர்கள் மட்டும் மொத்தமாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். சொல்லிக் கொடுத்தும் எழுதத் தெரியாதவர்களாக இருந்தால், ஆள் மாறாட்டம் செய்து வேறு ஆட்களை வைத்து தேர்வே எழுத வைக்கலாம். இவை அனைத்தும் வட மாநிலங்களில் மிகமிக எளிதில் செய்ய முடியும் காரியங்கள்.

ஆன்லைனில் நீட் தேர்வு : “ஆட்சியே அசிங்கமானாலும் பரவாயில்லை என்று நினைக்கிறது பா.ஜ.க.” - முரசொலி காட்டம்!

இங்கே உள்ளாடைகளைக் களைந்தும், தலை கிளிப்பை அகற்றியும், கம்மலைக் கழற்றியும் சோதனை போடும், இந்த தேர்வு மையத்தினர், வட மாநிலங்களில் யார் யாரோ தேர்வு எழுதினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். இவை அனைத்தும் ஏழு வட மாநிலங்களில் நடந்த, நடக்கும் முறைகேடுதான். இவை அனைத்தும் ஏதோ அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் அல்ல. சி.பி.ஐ. அமைப்பால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள்தான்.

இத்தகைய மோசடித்தனமான - முறைகேடான ஒரு தேர்வை எதற்காக நடத்த வேண்டும்? மருத்துவக் கல்வியைக் காக்கவா? இல்லை. பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் குவித்துவரும் கோச்சிங் சென்டர்களைக் காப்பாற்றுவதற்காக நடத்துகிறார்கள். அதனால்தான் எத்தனை குற்றச்சாட்டுகள் வெளியாகி, பா.ஜ.க. ஆட்சியே அசிங்கமானாலும் பரவாயில்லை என்று நினைத்து வெட்கமில்லாமல் நீட் தேர்வை நடத்திவருகிறார்கள். ‘பேர் கெட்டாலும் பரவாயில்லை, பணம் வந்தால் போதும்’ என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது.

உச்சநீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டியபிறகும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தேர்வை நடத்துவதற்கு பல்வேறு குட்டிக்கரணங்களைப் போடுகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த உயர்மட்டக் குழு ஆகும். இத்தேர்வுகளை நடத்தும் தேர்வு முகமை நம்பகத்தன்மை இழந்த அமைப்பாக இருக்கிறது. இதனை முதலில் கலைத்தாக வேண்டும். அதை விட்டுவிட்டு, இதுபோன்ற உயர்மட்டக் குழு நாடகங்களை நடத்தக் கூடாது.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். இந்தக் குழு செய்துள்ள பரிந்துரைகளில் சில; ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. “நேரடியாகத் தேர்வு எழுதுவதைத் தவிர்த்து, ‘நீட்’ உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளும் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும். ஆன்லைனில் தேர்வு நடத்த முற்றிலும் சாத்தியமில்லாத பகுதிகளில், ‘ஹைபிரிட்’ முறையில் தேர்வை நடத்தலாம். அதாவது வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்பி, விடைகளை ஓ.எம்.ஆர். ஷீட்டில் குறிக்க வைக்கலாம்” என்று சொல்லப்பட்டுள்ளதாம். இவை இன்னும் அதிகமான முறைகேடுக்குத்தான் வழிவகுக்கும். ஆள்மாறாட்டக் கோஷ்டிக்குத்தான் இது அதிகமான பயனளிக்கும். ஒரே சென்டரில் படித்து, ஒரே தேர்வு மையத்தில் எழுதுபவர்களுக்குத்தான் இது பயனுள்ளதாக இருக்கும்.

அதைவிட இன்னும் ஆபத்தான இன்னொரு ஆலோசனையையும் இக்குழு சொல்லி இருக்கிறது. “அதிகம் பேர் ‘நீட்’ தேர்வை எழுதுவதால் ஜே.இ.இ. போல தகுதித் தேர்வு, மெயின் தேர்வு என ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தலாம்” என்று சொல்லி இருக்கிறது இக்குழு. ஏன் இரண்டு தேர்வுகளை நடத்த வேண்டும்? 12 விதமான தேர்வுகளை நடத்தலாமே? கோச்சிங் சென்டர்களும் லட்சங்கோடிகளைக் குவிக்கலாமே?

நீட் என்ற தேர்வே முறைகேடானது. அதனை ஒன்றிய அரசு நீக்காத வரை முறைகேடுகளுக்குத் துணைபோகும் அரசாகவே அது அடையாளப்படுத்தப்படும்.

banner

Related Stories

Related Stories