தமிழ்நாடு

இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?

இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேனியை சேர்ந்த அபி பிரபா என்ற பெண் ஒருவர் சென்னை, தி நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே கடையில் வேலை பார்க்கும் பிரித்விராஜ் என்பவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்காக இரயிலில் நாகர்கோவில் சென்றுள்ளனர்.

அப்போது அதே இரயிலில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சிவா (24) என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. சென்னையில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் சிவாவும், அபியும் தங்கள் மொபைல் எண்களை மாற்றி, பின்னர் ஃபோனில் உரையாடி தங்கள் நட்பை வளர்த்தனர். நாளடைவில் நட்பு காதலாக மாறவே, அப்போது தனது வீட்டில் தனக்கு திருமணத்துக்காக அரசு வேலை, அதுவும் போலீஸ் பணியில் இருக்கும் பெண்ணை தேடி வருவதாக சிவா கூறியுள்ளார்.

இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?

இதையடுத்து இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி, அபி பிரபா சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாக கூறி, சிவாவின் தாயிடம் சம்மதம் கேட்க முடிவு செய்தனர். அதன்படி அபியும், தனது தெரிந்தவர் மூலம் போலீஸ் உடை வாங்கி, அதனை வைத்து ஃபோட்டோஷூட் மற்றும், வீடியோ ஷூட் எடுத்துள்ளார். இந்த ஃபோட்டோவை சிவா தனது குடும்பத்தில் காண்பித்து சம்மதம் வாங்கியுள்ளார்.

இவையேதும் அறியாத சிவாவின் குடும்பத்தினரும், போலீஸ் உடையில் இருக்கும் அபியின் ஃபோட்டோவை காண்பித்து, தனது மருமகள் என்று நெகிழ்ந்துள்ளனர். தொடர்ந்து அபியை நாகர்கோவில் அழைத்து வரும்படி கூறவே, சிவாவும் அவரை அழைத்து வந்துள்ளார். ஆனால் வரும்போதே அபி போலீஸ் உடையில் சுற்றித்திரிந்துள்ளார்.

அப்போது அங்குள்ளவர்களிடம், தான் சென்னை குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வர உள்ளதாகவும் அபி கூறியதோடு, அப்பகுதி இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?

அதோடு நாகர்கோவிலில் பியூட்டி பார்லர் வைத்துள்ள சிவாவின் நண்பரின் மனைவி கடைக்கு, அபியை போலீஸ் உடையில் தனது மருமகள் என்று கூறி சிவாவின் தாய் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ளவர்கள் விசாரித்த போது, அவர்களிடம், 2023 பேட்ஜ் என்றும், விரைவில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாறி விடுவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து முகத்தில் உள்ள மருக்களை நீக்கி, பேஷியல் செய்த அபி பிரபா, பணம் எதுவும் கொடுக்காமல் சென்ற நிலையில், மீண்டும் மற்றொரு நாள் (அக்.30) அதே கடைக்கு வந்த அபி, பேஷியல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும் அபியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த பெண், உடனே இவரது ஃபோட்டோவை தனக்கு தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இவர் 2023 பேட்ஜ் எஸ்.ஐ. தானா? என்று விசாரித்துள்ளார்.

அவர் தனக்கு தெரிந்த 2023 பேட்ஜ் எஸ்.ஐ.க்களிடம் அபி பிரபாவின் போட்டோவை அனுப்பி விசாரித்த போது, அப்படி ஒருவர் இல்லை என்றும், அவரது போலீஸ் உடையில் உள்ள பேட்ஜ் இடம் மாறி இருந்ததும், ஸ்டார்கள் இடம் மாற்றி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அபியை அங்கேயே இருக்க வைத்து விட்டு, இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் அந்த பார்லரின் உரிமையாளர்.

இரயில் நிலையம் To காவல் நிலையம்... 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு போலி எஸ்.ஐ -ஆன பெண் - நடந்தது என்ன?

இதைத்தொடர்ந்து பார்லருக்கு விரைந்த போலீசார், போலி பெண் எஸ்.ஐ. அபியை பிடித்து விசாரித்தனர். அப்போது, தான் தனது காதலனை திருமணம் செய்வதற்காக போலீசாக நடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரித்ததில், தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த அபி பிரபாவுக்கு வயது 34 என்றும், அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து ஒரு மகன் இருப்பதும், குடும்ப பிரச்னை காரணமாக அவர் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அபி பிரபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "அபி பிரபா சப் இன்ஸ்பெக்டர் என கூறி யாரிடமும் மிரட்டி பணம் மோசடி செய்ததாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தான் விரும்பிய வாலிபரை திருமணம் செய்ய, இவ்வாறு செய்ததாக கூறி உள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories