தமிழில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் முதலில் இயக்கிய திரைப்படம்தான் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளான இவர், தனது சொந்த வாழ்க்கையில் நடந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பரியேறும் பெருமாள் படமும் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த படத்தில் ‘கருப்பி’ என்ற கதாப்பாத்திரத்தில் கருப்பு நிற சிப்பிபாறை நாய் ஒன்று வரும். குறுகிய நேரத்தில் வந்தாலும் இந்த நாய் அனைவரது கவனத்தையும் ஈரத்தது. படத்தில் கதாநாயகன் அந்த நாயை தனது வீட்டில் ஒருவராக வளர்த்து வரும் சூழலில், பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டி வைத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த இழப்பை தாங்க முடியாமல் படத்தின் கதாநாயகன் கதறி அழும் “கருப்பி... அடி கருப்பி...” என்ற பாடலும் அனைவரது கண்களையும் கலங்கச் செய்யும். இந்த படத்திற்கு பிறகு அந்த நாயை, அதே படத்தில் நடித்த விஜயமுத்து என்பவர் வளர்த்து வந்தார். இந்த சூழலில் தற்போது அந்த நாய், ஓடும் வண்டியில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளது.
அதாவது நேற்றைய முந்தினம் (அக்.31) தீபாவளி கொண்டாட்டத்தின்போது, மக்கள் பலரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போது இந்த கருப்பி நாயானது விஜயமுத்து வீட்டு அருகே சுற்றி திரிந்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்தவர்கள் வெடி வைக்கவே, அதிர்ந்த பட்டாசு சத்தத்தை கேட்டு அந்த நாய் பயந்து தலைதெறிக்க ஓடியுள்ளது.
அந்த நேரத்தில் சாலையில் ஓடிய அந்த நாய் மீது, திடீரென அங்கு வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கருப்பி நாயை மோதிய அந்த வாகனமும் அங்கிருந்து விரைந்து சென்றதால், அது என்ன வாகனம் என்று தெரியவரவில்லை. வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் கருப்பி நாய் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த கருப்பி நாயின் உடலை, அதை வளர்த்து வந்த விஜயமுத்து மற்றும் அவரது நண்பர்கள் மீட்டு இறுதி சடங்குகள் செய்து, பரம்பு பகுதியில் அடக்கம் செய்தனர். தற்போது இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு நாய் பிரியர்கள் உள்பட பலர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.