முரசொலி தலையங்கம் (31-08-2024)
'அமலாக்க' அரசியல்
“சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது” என்று அரசியல் களத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அதனை உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தி விட்டது.
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகளும் அந்த மாநில எம்.எல்.சி.யுமான கவிதா கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை ஏப்ரல் 11ஆம் தேதி சி.பி.ஐ.யும் கைது செய்தது. டெல்லி மாநில அரசில் தனியார் மட்டுமே மதுபானம் விற்கலாம் என்று எடுத்த முடிவில் முறைகேடும், ஊழலும் நடந்திருப்பதாகச் சொல்லப்படும் வழக்கு இது. இதில் கைது செய்யப்பட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார். துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதினைந்து மாதங்கள் சிறையில் இருந்து சில வாரங்களுக்கு முன்தான் பிணையில் வெளியில் வந்துள்ளார்.
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கவிதாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. “சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. எனவே கவிதாவை விசாரணைக்காக இனியும் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் காரணமாக அவருக்குப் பிணை அளிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக மட்டுமல்ல; அமலாக்கத்துறை – - சி.பி.ஐ. ஆகிய அமைப்புகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீதிபதிகள் தங்களது கடுமையான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். “தேவையில்லாமல் சிறையில் அடைத்துவைப்பது ஒரு தண்டனையாக அமைந்துவிடக் கூடாது. அதனால் கவிதாவுக்கு பிணை வழங்கப்படுகிறது. அவர்தொடர்பான இரண்டு வழக்குகளிலும் 493 சாட்சிகள் இருக்கிறார்கள். 50 ஆயிரம் பக்கங்களுக்கு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் விசாரிக்கத் தொடங்கினால் இப்போதைக்கு இந்த வழக்குக்கு முடிவு வராது. அதுவரையில் அவரை சிறையில் வைத்திருக்க முடியாது” என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
கவிதாவுக்குப் பிணை வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்கறிஞர் வாதிட்டார். இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. “இந்த வழக்கில் அரசுத் தரப்பு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. குற்றம் சாட்டப்பட்டவராக கைதானவர் அப்ரூவராக மாறி இருக்கிறார். அந்த அப்ரூவர் அளித்த சாட்சியை வைத்து கவிதாவை கைது செய்துள்ளீர்கள். இப்படிப் போனால் நாளை யாரை வேண்டுமானாலும் கைது செய்வீர்களா? தேடித் தேடி கைதுசெய்து யாரை வேண்டுமானாலும் குற்றவாளிகளாக மாற்றிவிடுவீர்களா? சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை” என்றும் நீதிபதிகள் கடுமையான விமர்சனத்தை வைத்தார்கள்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என்றோ, குற்றவாளி அல்ல என்றோ பதிவு செய்ய அதிகாரம் இருக்கிறதா? -– என்பது தான் நீதிபதிகள் எழுப்பிய கேள்வி. அதனைத்தான் கேட்டார்கள் நீதிபதிகள்.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான பிரேம் பிரகாஷ் என்பவரையும் கைது செய்து அடைத்துள்ளார்கள். அவருக்குப் பிணை வழங்கும் வழக்கில் நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளிலும் பிணை வழங்குவது எழுதப்படாத விதி, சிறை என்பது விதிவிலக்கு” என்று சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள்.
பா.ஜ.க. அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இதனை பலமுறை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. ‘அமலாக்கத்துறை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு பிணை வழங்காமல் சிறையில் வைத்திருந்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தார்கள். கைதுக்கான எந்த ஆதாரமும் தரவில்லை. “டெல்லி கலால் கொள்கை வழக்கில் 100 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றால் அந்தப் பணம் எங்கே? அதற்கான ஆதாரம் எங்கே?” என்று கேட்டது உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறையால் ஆதாரம் தர முடியவில்லை.
“இந்த வழக்கில் இதுவரை ஏதாவது சொத்து முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?” என்று நீதிபதிகள் கேட்டார்கள். அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
“மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குநரிடம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்தல் நன்கொடை பத்திரத்தைப் பெற்றுள்ளது. ரூ.55 கோடி மதிப்பிலான பணத்தை பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கிய பின்னர் அரவிந்தோ ஃபார்மா இயக்குநர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மதுபான வழக்குக் குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் விளக்கம் அளிக்க வேண்டும். நட்டாவை கைது செய்ய வேண்டும். இது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்” என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. இதுவரை பா.ஜ.க. வாயே திறக்கவில்லை.
சி.பி.ஐ., அமலாக்கத்துறையால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட 30 நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கிய தகவலும் பொதுவெளியில் வெளியானது. அதனையும் பா.ஜ.க. தலைமையால் மறுக்க முடியவில்லை. இதை அரசியல் தலைவர்கள் பொதுமேடைகளில் குற்றம் சாட்டி வருகிறார்கள். இத்தகைய அமலாக்க அரசியலைத்தான் அம்பலப்படுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம்.