தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரின் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 29-ம் தேதி நகரில் சான் பிரான்ஸிஸ்கோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக முதலீட்டாளர்களுக்கு 'தடம்' பெட்டகத்தை அளித்து வருகிறார். 'தடம்' திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் சந்திக்கும் முதலீட்டாளர்களுக்கு 'தடம்' பெட்டகத்தை அளித்து வருகிறார்.
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த 'தடம்' பெட்டகத்துக்குள் என்னென்ன பொருட்கள் உள்ளது ? என்பது வருமாறு :
* திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
* புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
* விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
* கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு
* நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
* பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் ‘தடம்’ திட்டம் உருவாக்கப்பட்டது. பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும்.
அதேபோல் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல இத்திட்டம் உதவுகிறது. பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
’தடம்’ திட்டத்தின்கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு தடம் பெட்டகத்தை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.