முரசொலி தலையங்கம் (24-07-2024)
“யாரு சாமி, இந்த மனுஷன்?”
எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனை அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நினைப்பது இல்லை. களத்துக்குச் சென்று அந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். கள ஆய்வில் முதலமைச்சர் என்பது அவரது முக்கியமான திட்டங்களில் ஒன்று. கோட்டையில் மட்டுமல்ல, களத்தில் எப்போதும் இருக்கக் கூடிய முதலமைச்சரா- கத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ‘அம்மா உணவகத்தை' மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். இடம் சுத்தமாக இருக்கிறதா, உணவு
தரமானதாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தார்கள். ஒரு இடத்தை ஆய்வு செய்வதன் மூலமாக அனைத்து இடங்களும் சரியாகும் என்பதற்காகத்தான் இது போன்ற ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
‘அம்மா உணவகத்தை' முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்த தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. "யாரு சாமி இந்த மனுஷன்? எதிர்க்கட்சி கொண்டு வந்த திட்டத்தை
அவர்களை விடச் சிறப்பாக செயல்படுத்தி வராரு. இதுவே ஜெயலலிதாவா இருந்திருந்தா எல்லாத்தையும் மொத்தமா இழுத்து மூடிட்டு ஆளுமை டாவ்னு நாலு பேரை பேச வச்சிட்டு போயிருக்கும்” என்று மீம்ஸ் போட்டு விட்டார்கள். “அம்மா உணவகத்தின் பெயரைக்கூட மாற்றாத ஜனநாயக ஆட்சி தி.மு.க. ஆட்சி” என்று பாராட்டுகள் குவிந்தது. இதை எல்லாம் பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘19 அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள்' என்று எரிந்து விழுகிறார் பழனிசாமி. அம்மா உணவகத்தை ஜெயலலிதா உருவாக்கினார். அதனை ஒழுங்காக நடத்தத் தெரியாமல் படிப்படியாக தனது ஆட்சி காலத்தில் மூடிக் கொண்டிருந்தவர் தான் பழனிசாமி.
16.3.2018 ஆம் நாள் அன்றைய நிதித்துறை செயலாளர் ஒரு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டுக்கான 2018--19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அளித்த பேட்டி அது. அப்போது, ‘பல இடங்களில் அம்மா உணவகம் மூடப்படுவதற்கு என்ன காரணம்?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதித்துறை செயலர், “அம்மா உணவகத்துக்கு அரிசி இலவசம். மற்ற பொருட்கள் பொது விநியோக திட்ட விலையில் கொடுக்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படாது என்று சொன்னார்கள். ஆனால் இப்போது நஷ்டம் வந்து விட்டது என்கிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளே அம்மா உணவகங்களை நிர்வகிக்கிறார்கள். நஷ்டம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார். நஷ்டம் ஏற்பட்டதால் சில உணவகங்கள் மூடப்பட்டது” என்று சொன்னார். அப்போது முதலமைச்சராக இருந்தவர் இதே பழனிசாமிதான்.
‘அம்மா' உணவகத்தை நஷ்டம் ஆகிவிட்டது என்று சொல்லி படிப்படியாக தனது ஆட்சியில் மூடிக் கொண்டு இருந்தவர்தான் இந்த பழனிசாமி. இவருக்கு 'அம்மா' உணவகத்தைப் பற்றிப் பேச யோக்கியதை இருக்கிறதா?
2021 ஆம் ஆண்டு நவசுந்தர், சுரேந்திரன் ஆகிய இருவர், ‘அம்மா உணவக'த்தின் பெயர் பலகையை உடைத்துவிட்டார்கள். உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்யச் சொன்னவர் முதலமைச்சர் அவர்கள். அவரைத்தான் பழனிசாமி குறை சொல்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கட்டியது என்பதற்காக சட்டசபையுடன் கூடிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனை ஆக்கிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. கலைஞர் உருவாக்கியது என்பதற்காக பேரறிஞர் அண்ணா பெயரிலான நூலகத்தை பத்தாண்டு காலம் சிதைத்து வைத்திருந்த ஆட்சி
அ.தி.மு.க. ஆட்சி. அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டே அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தவர்கள் அவர்கள். நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, நீதிமன்றத்தால் காப்பாற்றப்பட்டது அந்த நூலகம். தி.மு.க. அரசு வந்த பிறகுதான், அது நூலகமாக உருவெடுத்தது. இல்லாவிட்டால் அனைத்து புத்தகங்களையும் பழைய விலைக்கு எடைக்குப் போட்டு நாசம் செய்திருப்பார்கள். இந்த மகா யோக்கியர்கள்தான் இன்றைய முதலமைச்சரைக் குறை சொல்கிறார்கள். வெட்கமாக இல்லையா?
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ‘அம்மா உணவகம்' என்ற பெயரை எடுத்துவிடுவார்கள் என்று வதந்தி கிளப்பியது அ.தி.மு.க.. எடுக்கவில்லை தி.மு.க.!
‘அம்மா உணவகம்' என்ற திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என்று பொய்ச்செய்தி பரப்பியது அ.தி.மு.க.. அப்படி எதையும் செய்யவில்லை தி.மு.க.!
‘அம்மா உணவக’த்தை ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்கள், உணவகங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள், கருவிகளை மாற்றவும், சுவையான, தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார்கள். அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். புதிய பாத்திரங்கள், கருவிகள் வாங்க ரூ.7 கோடியும், புனரமைப்பு பணிகளுக்காக ரூ.14 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக- ளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல- மைச்சர் அவர்கள். இதைப் பாராட்டி இருக்க வேண்டும் பழனிசாமி. பாராட்டும் குணமில்லாவிட்டாலும் தூற்றாமலாவது இருந்திருக்கலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 250 கோடி ரூபாய் இந்த அம்மா உணவகங்களுக்கு மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போதுதான்
21 கோடி ரூபாயை முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார் என்று குறை சொல்லவும் முடியாது. அனைத்துத் திட்டங்களும் முறையாக, சிறப்பாக செயல்படுத்தப்படுவதைப் போலவே அம்மா உணவகமும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது, பழனிசாமி ஆட்சியை விட!