முரசொலி தலையங்கம்

”இனியாவது பா.ஜ.கவின் பாதை மாறட்டும், பழக்கம் மாறட்டும்” : முரசொலியின் ஆலோசனை என்ன?

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிப்பது இல்லை என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

”இனியாவது பா.ஜ.கவின் பாதை மாறட்டும், பழக்கம் மாறட்டும்” : முரசொலியின் ஆலோசனை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (23-07-2024)

பாதை மாறட்டும், பழக்கம் மாறட்டும்!

பாதையை மாற்றாதீர்கள் என்பதுதான் வழக்கமாகச் சொல்வது. ஆனால் அது தவறான பாதையாக இருக்குமானால், ‘பாதையை மாற்றுங்கள்' என்று சொல்வதே சரியானதாக இருக்கும். ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரையில் ‘பாதை மாறட்டும்' என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், தொடர்ந்து தவறான பாதையில் பயணிப்பவர்கள் அவர்கள்!

பெரும்பான்மை பலத்தை பா.ஜ.க.வுக்கு இந்திய நாட்டு மக்கள் வழங்க வில்லை. அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியவில்லை. மாநிலக் கட்சிகள் சிலவற்றைச் சேர்த்துக் கொண்டு ஆட்சியை அமைத்துள்ளது பா.ஜ.க. தன்னை கடவுளின் அவதாரமாகக் காட்டிக் கொண்ட மோடி, கூட்டணி அமைச்சரவைக்குத்தான் தலைமை தாங்க முடிந்தது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். இனியாவது தங்கள் பழக்கத்தையும் மாற்றி, பாதையையும் மாற்றிக் கொள்ள வேண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பதே நமது வேண்டுகோள் ஆகும்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் ஆக இருக்கிறது. அதில் தமிழ்நாட்டுக்கான திட்டங்களாக எவை எவை இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு தரவில்லை. அதற்கான காரணத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டங்களில் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்த திட்டத்-தின் நிதி ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் 50 : 50 விழுக்காடு பங்கிட்டுத் தர வேண்டும். மெட்ரோ இரண்டாம் கட்டப் பணி என்பது ரூ.63 ஆயிரம் கோடி செலவாகும். பா.ஜ.க. அரசு இதற்கு பணம் ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்து கடிதம் மேல் கடிதம் அனுப்பி விட்டார். பிரதமர் மோடிக்கு முன்னால் மேடையில் பலமுறை பேசியும் விட்டார் முதலமைச்சர் அவர்கள். மாநில அரசு செலவு செய்வதற்கான நிதியைத் திரட்ட பன்னாட்டு கடனுதவி பெறுவதற்கும் அனுமதி தரவில்லை. மாநில அரசு இந்த ஆண்டு 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. ஒன்றிய நிதி வரவில்லை என்றால் இந்த திட்டத்தை முழுமையாக மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடியை இதற்காக ஒதுக்கினால்தான் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்தி முடிக்க முடியும்.

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

”இனியாவது பா.ஜ.கவின் பாதை மாறட்டும், பழக்கம் மாறட்டும்” : முரசொலியின் ஆலோசனை என்ன?

'சில மாநில அரசுகள் இலவச பயணம் என அறிவிக்கிறார்கள், இதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை. எனவே மெட்ரோ திட்டங்களால் பயனில்லை' என்று தேர்தல் நேரத்தில் பேசியவர்தான் நமது பிரதமர் மோடி. இலவசப் பயணங்களுக்கும் மெட்ரோ ரயில்களுக்கும் என்ன தொடர்பு? மக்கள் தொகைப் பெருக்கமுள்ள நாட்டில் எத்தனை வகையான வசதிகள் செய்யப்பட்டாலும் அவை அனைத்திலும் கூட்டம் இருக்கத்தான் செய்யும். பேருந்து வசதி என்பது ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் இருக்கும் திட்டம் ஆகும். மெட்ரோ ரயில்கள் ஒரு சில பெருநகரங்களில் மட்டுமே சாத்தியமான திட்டம் ஆகும். இலவச பஸ் பயணத்தையும், மெட்ரோ ரயில் பயணத்தையும் பிரதமரால் எப்படி ஒப்பிட

முடிந்தது என்றே தெரியவில்லை. அதனால்தான் தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பணம் ஒதுக்க மறுக்கிறாரா பிரதமர்?

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்பட்டது பிரதமருக்கு பிடிக்கவில்லையா? அதனால்தான் மெட்ரோ திட்டங்களை முடக்கி வைக்க நினைக்கிறாரா பிரதமர்?

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத் திட்டத்துக்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். கிராமப்புற-- நகர்ப்புற வீட்டு வசதித் திட் டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும் என்பதும் முதலமைச்சரின் கோரிக்கை ஆகும்.

*மாநிலங்களின் நிதி உரிமையை - வலிமையைப் பறிப்பது என்பது அதன் ஆக்ஸிஜனை நிறுத்துவது ஆகும். அதனைத் தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது"என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை சொன்னார்.

அதனைத்தான் பா.ஜ.க. அரசு இதுவரை செய்தது. இனியும் அதைச் செய்யக் கூடாது.

‘அரசியல் சட்டத்தை காப்பேன்' என்று உறுதிமொழி அளித்துள்ள பிரதமர் அவர்கள், கூட்டாட்சித் தன்மையைக் காக்கும் செயல்களைச் செய்ய வேண்டுமே தவிர, அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்கும் செயல்களைச் செய்யக் கூடாது.

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிப்பது இல்லை என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.

banner

Related Stories

Related Stories