முரசொலி தலையங்கம்

தொழிலாளர் கட்சியின் மாபெரும் வெற்றி : பிரிட்டன் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன ? - முரசொலி தலையங்கம் !

தொழிலாளர் கட்சியின் மாபெரும் வெற்றி : பிரிட்டன் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன ? - முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (12.7.2024)

பின்பற்றத் தகுந்த பிரிட்டன் மாற்றங்கள் !

பிரிட்டனில் மாபெரும் அரசியல் மாற்றம் நடந்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி அடைந்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கிறது தொழிலாளர் கட்சி. உலகம் உன்னிப்பாகக் கவனிக்கும் அரசியல் மாற்றமாக இது அமைந்துள்ளது. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆகி இருக்கிறார். ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்திருக்கிறார். 'இந்திய வம்சாவளி பிரதமர்' என அடையாளம் காட்டப்பட்ட ரிஷி சுனக்கின் தோல்வி கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு மகத்தான வெற்றி இது. 121 இடங்களை மட்டுமே பிடித்து மாபெரும் தோல்வியை அடைந்துள்ளது கன்சர்வேட்டிவ் கட்சி. லிபரல் டெமாக்ரடிக் கட்சியானது 71 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4.6 கோடி பேர் வாக்களித்தார்கள். 'இன்னமும்' வாக்குச் சீட்டு முறையைத்தான் பிரிட்டன் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியில் அமைச்சர்களாக இருந்த பலரும் படுதோல்வியைச் சந்தித்தார்கள். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸும் தோல்வியை அடைந்துள்ளார். இந்தத் தோல்வியை ரிஷி சுனக் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார். அதுதான் முக்கியமானது. "இந்தத் தேர்தல் தோல்விக்காக அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கோபம், ஏமாற்றம் ஆகியவற்றை நான் அறிந்து கொண்டேன். இந்த இழப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த முடிவுக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவேன்" என்பதை அறிவித்த பாங்கு அனைவரும் பின்பற்றத்தக்கது ஆகும். புதிய பிரதமர் ஆகி இருக்கும் கியர், "இப்போது மாற்றம் வந்து விட்டது. நீங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள். கட்சித் தொண்டர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது" என்று சொல்லி இருக்கிறார். இதுவும் அனைவரும் பின்பற்றத்தக்கது ஆகும். தோல்வி அடைந்தவர் தன்னையே அதற்குக் காரணமாகச் சொல்லிக் கொள்வது, வெற்றி அடைந்தவர், அந்த வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள்தான் காரணம் என்று சொன்னதும் பிரிட்டன் நாடு உலகுக்குச் சொல்லும் செய்தியாகும்.

தொழிலாளர் கட்சியின் மாபெரும் வெற்றி : பிரிட்டன் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன ? - முரசொலி தலையங்கம் !

தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த கியர் ஸ்டார்மர், இங்கிலாந்தின் பிரதமர் ஆகி இருப்பது அந்நாட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிலாளர் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளார் கியர். 2020ஆம் ஆண்டுதான் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு, இவர் தேர்தல் அரசியலுக்கு வந்தார். இரண்டு தொகுதிகளில் எம்.பி.யாக இருந்தார். கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார். கியர், மிகச் சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். செவிலியராக வேலை பார்த்தவர் அவரது தாய். தனது மகனை சட்டம் படிக்க வைத்தார் அந்தத் தாய். மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞராக கியர் செயல்பட்டார். மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்துபவராக கியர் இருந்தார். டோனி பிளேயர் தனது ஆட்சிக் காலத்தில் ஈராக் மீது படையெடுத்த போது அதனை கியர் கடுமையாக எதிர்த்தார். அத்தகைய சிந்தனை கொண்ட கியர், இங்கிலாந்து பிரதமர் ஆகி இருப்பது இந்தக் காலக் கட்டத்தில் மிக முக்கியமானது ஆகும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகிய தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்று முத்தான திட்டங்கள் தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அந்தக் கட்சி அடைந்துள்ள வெற்றிக்குப் பின்னால் உள்ள வெற்றிச் சூத்திரங்களில் ஒன்றாக இவையும் அமைந்துள்ளன என்பதும் நமக்குப் பெருமை அளிப்பது ஆகும். பிரிட்டன் தேர்தலில் மேலும் சில வரவேற்கத்தக்க செய்திகள் கிடைக்கின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 28 பேர், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆகி இருக்கிறார்கள். பதவி விலகி இருக்கும் இந்திய வம்சாவளி இனத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'எனது தாத்தா, பாட்டி ஆகியோர் இரண்டு தலைமுறைக்கு முன்னால் இங்கே வந்தார்கள். நானும் பிரதமர் ஆக முடியும் என்பதைக் காட்டி விட்டேன்' என்கிறார் சுனக்.

தொழிலாளர் கட்சியின் மாபெரும் வெற்றி : பிரிட்டன் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன ? - முரசொலி தலையங்கம் !

தொழிலாளர் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் டெமாக்ரட்டிக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளில் இருந்தும் இந்திய வம்சாவளி இனத்தைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகி இருக்கிறார்கள். இது பிரிட்டனின் பன்முகத் தன்மையையும், அந்நாட்டு மக்களின் பரந்த உள்ளத்தையும் காட்டுகிறது. உலகமானது 'அனைவர்க்கும் பொதுவானது' என்ற சிந்தனையை இது விதைத்துள்ளது. நாடுகளும், எல்லைகளும் 'அனைத்து மக்களுக்குமானது' என்பதன் அடையாளம் இவை. தூய்மைவாதத்தை துடைப்பவையாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன. இன்னொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி, ஈழத்தமிழினத்தைச் சேர்ந்த உமா குமரன், எம்.பி. ஆக ஆகி இருக்கிறார். பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி.யாகத் தேர்வாகி இருக்கிறார். இலங்கையில் நடந்த போருக்குப் பின்னர், இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். இனவாதம் அவரது குடும்பத்தை இலங்கையை விட்டுத் துரத்தியது. இங்கிலாந்து அரவணைத்தது. யாரும் அகதிகள் அல்ல, 'யாவரும் கேளிர்' என்பதை உணர்த்துகிறது உமா குமரனின் வெற்றி. "அரசியல் என்றால் பொதுசேவை மட்டும்தான்" என்று சொல்லி இருக்கிறார் பிரிட்டனின் புதிய பிரதமர் கியர். இதை மறுப்பார் உண்டோ?

banner

Related Stories

Related Stories