ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே நாட்டுக்கு எந்தவொரு நல்லதும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் மக்கள் நலனுக்கு பதிலாக பெரிய தொழிலதிபர்களின் நலன்களையே பேணி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விலைவாசி உயர்வு மட்டுமின்றி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
இதனை எதிர்க்கட்சிகள் மக்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையிலும், இதனை கண்டுகொள்ளாமல் ஒன்றிய பாஜக அரசு இருந்து வருகிறது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை ஆண்டுதோறும் அதிகரித்தே காணப்படுகிறது. இதுகுறித்து பேசச்சொன்னால், படித்தவர்களும் பக்கோடா விற்றுக் கூட பிழைக்கலாம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இவ்வாறு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துக் காணப்படும் நிலையில், தற்போது தனியார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக ஆளும் குஜராத்தில் கடல் போல் மக்கள் திரண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பரூச் என்ற பகுதியில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றுக்கான வேலைவாய்ப்பு முகாம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த நேர்காணலில் வேலை தேடுபவர்கள், நேரடியாக கலந்துகொள்ள வேண்டும். அதன்படி கடந்த ஜூலை 9-ம் தேதி நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலையில்லா ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் வெறும் 5 பிரிவில் 42 இடங்கள் மட்டுமே உள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இந்த தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் மட்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இளைஞர்கள் முண்டியடித்து செல்ல முயற்சி செய்த நிலையில், பலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இது தான் பாஜக ஆட்சியின் லட்சணம் என்றும், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலத்தில் இதுபோன்ற அவலநிலை ஒட்டுமொத்த பாஜக ஆட்சியையும் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி, "இந்தியாவில் 'வேலைவாய்ப்பின்மை' ஒரு நோயாக மாறி தொற்றுநோயாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள்தான் இந்த நோய்களின் மையமாக மாறியுள்ளன. இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக வரிசையில் நிற்பதுதான் நரேந்திர மோடியின் 'அமிர்தகால' யதார்த்தம்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிவ சேனா (உத்தவ்) பிரிவு எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, "இதயம் பதறுகிறது. வேலை தேடும் இந்திய இளைஞர்களிடம் அவநம்பிக்கையை விதைக்கிறது விஷ்வகுருக்களின் பொருளாதார மேதமைத்தனம்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.