முரசொலி தலையங்கம்

இதெல்லாம் பூஜ்யங்களுக்கு ஒன்றுமே புரியாது : அ.தி.மு.க , பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய முரசொலி!

பூஜ்யமும் பூஜ்யமும் சேர்த்தால் கணக்கிலும் பூஜ்யம் ஆகுமே தவிர, ஒன்று ஆகாது.

இதெல்லாம் பூஜ்யங்களுக்கு  ஒன்றுமே புரியாது : அ.தி.மு.க , பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-06-2024)

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்...?

தோற்ற அ.தி.மு.க. வேலுமணியும் தோற்ற பா.ஜ.க. தமிழிசையும் சேர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள்.

‘அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் 35 இடங்கள் வெற்றி பெற்றிருப்பார்களாம்’. இரண்டும் இரண்டும் கணக்கில்தான் நான்கு ஆகும். அரசியலில் அது 0 கூட ஆகலாம். தேர்தல் என்பதே வெறும் கணக்கில் இல்லை. கொள்கையில், நிலைப்பாடுகளில்தான் இருக்கிறது.

யாரும் யாரும் சேர்கிறார்கள், என்ன அடிப்படையில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதற்கு அரசியல் களத்தில் மதிப்பும் மரியாதையும் அமையும். எடப்பாடிக்கு விழுந்த வாக்குகளில் மோடி எதிர்ப்பு வாக்குகளும் இருக்கின்றன. பா.ஜ.க. வாங்கிய வாக்குகளில் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு வாக்குகளும் உள்ளன. எனவே, இவற்றைச் சேர்ப்பதே அரசியல் அறியாத்தன்மை ஆகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன.

கூட்டணியாகத் தான் தோற்றன. எனவே, அதுவும் இதுவும் சேர்ந்திருந்தாலும் தோல்விதான். பிரிந்து நின்றாலும் தோல்விதான். தி.மு.க. கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடுதான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. இதுகூட, தோற்ற அந்த இரண்டு கட்சிக்கும் தெரியவில்லை.

அ.தி.மு.க.வை தனித்து நிற்க வைத்ததே பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைமைதான். மோடி எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக தி.மு.க.வுக்குப் போய்விடாமல் பிரிக்கவும், சிறுபான்மையினர் வாக்குகள் முழுமையாக தி.மு.க.வுக்குப் போய்விடாமல் தடுக்கவும் பா.ஜ.க. உருவாக்கிய ‘கள்ளக் கூட்டணி’ தான் அ.தி.மு.க. அணி ஆகும்.

“222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்­டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது” என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது என்றும், 222 சட்டமன்றத் தொகுதிகளில் மற்ற கட்சிகளை காட்டிலும் தி.மு.க. கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது என்றும், 32 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 192 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாக தி.மு.க. கூட்டணியே அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்றும், திருவள்ளூர், தென்சென்னை, அரக்கோணம், பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது என்றும் ‘தி இந்து’ சொல்லி இருக்கிறது.

மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின்படி 8 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. 3 தொகுதிகளில் பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். பா.ஜ.க. எந்த சட்டமன்றத் தொகுதியிலும் கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை.

இதெல்லாம் பூஜ்யங்களுக்கு  ஒன்றுமே புரியாது : அ.தி.மு.க , பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய முரசொலி!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வரலாறு என்ன?

1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் 1989 தேர்தலில் 3 இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. முதன்முறையாக 1996 சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் வென்று, சட்டசபைக்குள் நுழைந்தது. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. 3 தொகுதிகளில் பா.ஜ.க. வென்றது.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க. அந்த கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட, 4 இடங்களில் பா.ஜ.க. வென்றது. 2001 சட்ட சபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் வென்றது. அடுத்து அ.தி.மு.க.வுக்கு தாவிய பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது பா.ஜ.க. 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை.

2011 சட்டசபைத் தேர்தல் 200-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. தனி அணியாகப் போட்டியிட்டது. 198 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. 2016 சட்டசபைத் தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டு 180 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது பா.ஜ.க. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது பா.ஜ.க. இந்தக் கட்சியும் முழுமையாகத் தோற்றது. அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வென்றது. இதுதான் பா.ஜ.க.வின் தோல்விச் சரித்திரம் ஆகும்.

பழனிசாமியின் அ.தி.மு.க. சரித்திரமும் தோல்விச் சரித்திரம்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பழனிசாமி, அனைத்துத் தேர்தல்களிலும் தோற்றே வந்துள்ளார். இதுதான் அவர் வாங்கிய தோல்விப் பட்டயங்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. இதுதான் இவர்களது யோக்கியதை ஆகும். பூஜ்யமும் பூஜ்யமும் சேர்த்தால் கணக்கிலும் பூஜ்யம் ஆகுமே தவிர, ஒன்று ஆகாது. தேர்தலிலும் பூஜ்யம் ஆகுமே தவிர, ஒன்று ஆகாது. இதெல்லாம் பூஜ்யங்களுக்கு ஒன்றுமே புரியாது.

banner

Related Stories

Related Stories