முரசொலி தலையங்கம் (11-06-2024)
நீட் - நீடிக்கவே கூடாது
நீட் தேர்வு ஒரு ஆட்கொல்லி தேர்வு என்பதை அனைவரும் அறிவோம். அது ஒரு மோசடித்தனமான தேர்வு என்பதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக வரத் தொடங்கி இருக்கிறது. லட்சம் கோடி ரூபாய் புரளும் பயிற்சி மையங்களின் ஆதாயத்துக்காக நடத்தப்படுவதே நீட் தேர்வு என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.
* ஜூன் 14 ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக வெளியாகிவிட்டது. அதாவது இதில் நடைபெற்ற மோசடிகள் வெளியில் வரக் கூடாது என்பதால் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் நீட் மோசடிகளை மறைக்க ஒரு கும்பல் முயற்சிகள் எடுத்துள்ளது.
* தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள்.
* இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன.
* எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 64 பேர் 720 என்ற முழுமையான மதிப்பெண்ணை எடுத்துள்ளார்கள்.
* ஒரு கேள்விக்கு தவறாக மதிப்பெண் அளித்தால் 4 மதிப்பெண்ணும், 1 மைனஸ் மதிப்பெண்ணும் போகும். ஒருவர் 720 – 715 - 710 என்ற அடிப்படையில் மதிப்பெண் பெறலாம். ஆனால் இப்போது 719,718 என்றெல்லாம் தவறான மதிப்பெண்கள் வந்துள்ளது.
* கருணை மதிப்பெண் அளித்ததாகச் சொல்கிறார்கள். எந்த அடிப்படையில் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.
“சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், “இந்த ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சை கிளம்பி உள்ளது. இனியும் இந்த மோசடித்தனமான தேர்வு முறை அறவே கூடாது.
இத்தேர்வு முறையையே முழுமையாக விலக்க வேண்டும். அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
நீட் தேர்வை தமிழ்நாடு தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. ‘தமிழ்நாடு மட்டும்தான் எதிர்க்கிறது’ என்று சொல்லி வந்தார்கள் நீட் ஆதரவாளர்கள். ஆனால் இம்முறை இந்தியாவே எதிர்க்கத் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் போன்றவர்களும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். 2024 மக்களவைக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘நீட்’டிலிருந்து விலக்கு வேண்டும் என்று விரும்பும் மாநிலங்களுக்கு, அந்த உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
“நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் மராட்டிய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அசன் முஷ்ரிப் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலம் ஆகும்.
வட மாநிலத்து இளைஞர்கள் இப்போது சமூக வலைதளங்களில் நீட்டுக்கு எதிராக எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். பிரதமரின் வாரணாசி தொகுதியில் நீட்டுக்கு மறுதேர்வு கோரி ஊர்வலம் நடந்துள்ளது. ஏனென்றால் அதிகப்படியான மோசடிகள் வட மாநிலங்களில்தான் நடக்கிறது. இங்கே மாணவிகளை அவமானப்படுத்தும் வகையில் சோதனை செய்து தேர்வு அறைகளுக்குள் அனுப்புகிறார்கள். ஆனால் வட மாநிலங்களில் ஆள் மாறாட்டமே நடக்கிறது. இதில் இருந்தே வேற்றுமையை அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கு முந்தைய நாளே சிலருக்கு கேள்வித் தாளைக் கொடுத்து படிக்க வைத்து - அதற்காக ஒவ்வொருவரிடமும் பல லட்சம் பெற்றதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் தாமதமாக வந்தவர்களை அனுமதிப்பதும் இந்த மோசடித்தனத்தின் ஒரு செயல் ஆகும். இப்படி தாமதமாக வந்தவர்களுக்கு கடைசியாக நேர நீட்டிப்புத் தருவதும் இதே மோசடித்தனத்தின் ஒரு அங்கம் ஆகும்.
எதையுமே எழுதாமல் வினாத்தாளைக் கொடுத்ததாகவும், அதை தேர்வு அறையில் இருந்த ஆசிரியரே இறுதியாக நிரப்பி சேர்த்துவிட்டதாகவும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘நீட் தேர்வு எத்தகைய தில்லுமுல்லு தேர்வாக நடைபெற்று வருகிறது என்பதற்கு இவை அனைத்தும் ஒருசில உதாரணங்கள்தான். லட்சம் கோடி புரளும் வர்த்தகத் தொழிலுக்கு ஒன்றிய அரசாங்கம் உடந்தையாக இருக்கிறது. அவ்வளவுதான்.
குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தார். ஏற்றுக் கொள்ளவில்லை. குஜராத் மாநில அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ‘நீட்’ தேர்வு எதிர்ப்புக் கடிதம் அனுப்பியது. 2011 ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ஜெயநாராயணன் வியாஸ் எழுதிய கடிதத்தில், ‘‘எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமையாகும். இந்திய மருத்துவக் கவுன்சில் எங்களை ‘நீட்’டுக்காகத் தயாராகுமாறு கூறியிருந்தது. ஆனால், எங்களால் ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்திற்கென்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நாங்கள் ‘நீட்’ பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத் திட்டத்தின்படி படிக்கும் மாணவர்களுக்கு ‘‘நீட்” தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆகவே, நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாக எதிர்ப்பை பதிவு செய்தார். இந்தக் கடிதத்தையாவது மறுபடி எடுத்து இன்றைய பிரதமர் மோடி படிக்க வேண்டாமா?