முரசொலி தலையங்கம்
05.06.2024
உயர்ந்த கலைஞருக்குச் சிறந்த விழாக்கள்
அனைத்திலும் உயர்ந்த தமிழினத் தலைவர் கலைஞருக்கு மிகச் சிறந்த விழாக்களை நடத்திக் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடைந்த உயரம் என்பது மிகமிக அதிகம். ஐந்து முறை தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சர். 13 முறை சட்டமன்ற உறுப்பினர். இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர். இந்தியக் குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர். இந்தியாவின் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளம் அமைத்தவர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டின் ஆட்சி ஆவணங்களில் அதிகக் கையெழுத்துகளை இட்டவர். இந்த பூமிப்பந்தில் 95 ஆண்டுகள் வாழ்ந்து அதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்!
இத்தகைய கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒரு விழாவாக நடத்துவது என்பது சாத்தியமில்லை. பன்முக ஆற்றல் கொண்ட தலைவருக்கு பன்முக விழாவாக நடத்தத் திட்டமிட்டதில்தான் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது பன்முகச் சிந்தனை வெளிப்பட்டது.
* இதழாளர் - – கலைஞர்
* எழுத்தாளர் -– கலைஞர்
* கலைஞர் - – கலைஞர்
* சமூகநீதிக் காவலர் - – கலைஞர்
* பண்பாட்டுப் பாசறை - – கலைஞர்
* ஏழைப் பங்காளர் - – கலைஞர்
* சட்டமன்ற நாயகர் - – கலைஞர்
* பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் - – கலைஞர்
* நவீன தமிழ்நாட்டின் சிற்பி -– கலைஞர்
* நிறுவனங்களின் நாயகர் - – கலைஞர்
* தமிழ்த்தாயின் தவப்புதல்வர் - – கலைஞர்.
* தொலைநோக்குச் சிந்தனையாளர் - – கலைஞர் – ஆகிய 12 தலைப்பு களில் குழுக்களை அமைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் – அரசுத் துறை செயலாளர்கள் - – அலுவலர்கள் - – எழுத்தாளர்கள் – - பேச்சாளர்கள் - – கல்வியாளர்கள் - – தொழில் அதிபர்கள் – - சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் இக்குழுக்களில் இடம் பெற்றிருந்தார்கள். அரசுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் விழாக்களாக இவை இருக்க வேண்டும், கலைஞரின் ஆற்றலை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் விழாக்களாக இவை அமைய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டு காலம் என்பது கலைஞர் ஆண்டைப் போலவே அமைந்திருந்தது.
கலைஞரின் நூற்றாண்டு வாழ்க்கையை மனதில் பதிய வைக்கும் புகைப்படக் கண்காட்சிகள் பல்வேறு நகரங்களில் இடம் பெற்றன.இவை அனைத்தும் படங்களாக மட்டுமல்ல; பாடங்களாக அமைந்திருந்தன. கலைஞர் என்றாலே பேனா. அவருக்கு மிகமிகப் பிடித்ததும் எழுதுகோல்தான். எழுதுகோல் உருவத்தில் முத்தமிழ்த் தேர் உருவாக்கப்பட்டு அது கன்னியாகுமரி முதல் தலைநகர் சென்னை வரை வலம் வந்தது. ஒவ்வொரு நகரத்திலும் அந்த முத்தமிழ் தேருக்கு கிடைத்த வரவேற்பு என்பது மீண்டும் கலைஞர் உயிர்த்தெழுந்த உணர்வை ஏற்படுத்தியது. துறை சார்ந்த சிறப்பு மலர்கள் வெளியிடப்பட்டன. இவை கலைஞரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் கலைக் களஞ்சியங்களாக அமைந்துள்ளன.
காலத்தால் அழியாத கலைஞரின் பாடல்கள் கொண்ட மாபெரும் மெல்லிசை நிகழ்ச்சி - – அனைவர் மனதிலும் நின்று நிழலாடும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. மாவட்டங்கள் தோறும் கலை நிகழ்ச்சிகள் - – பேச்சுப்
போட்டிகள் -– கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞரான கலைஞர் பெயரால் மாநில அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட்டு மூன்று சிறந்த கவிதைக்கு பரிசளிக்கப்பட்டது. கருத்துச்
செறிவுள்ள சொற்பொழிவுகள் இடம்பெற்ற கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவையும் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்று மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை மூன்றையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
‘முரசொலி எனது மூத்த பிள்ளை’ என்று சொல்லியவர் கலைஞர். ‘முரசொலி’ நாளிதழின் சார்பில் வெளியிடப்பட்ட மலர் என்பது கலைஞரின் கருவூலமாக அமைந்திருக்கிறது. ‘முரசொலி’ ஆசிரியர் குழுவுக்கு மிக முக்கியமான ஒரு ஆலோசனையை தலைவர் அவர்கள் வழங்கினார்கள். ‘தலைவர் கலைஞர் அவர்கள் சூன் 3 ஆம் தேதியன்று பிறந்தார்கள். ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதி என்று ஒவ்வொரு துறை சார்ந்தவர்களை கலைஞர் குறித்து எழுதச் சொல்லுங்கள். மாதம் தோறும் இந்தச் சிறப்பு பக்கங்களைக் கொண்டு வாருங்கள்.
12 மாதங்கள் வந்தபிறகு அதை மொத்தமாகத் தொகுத்து மலராகக் கொண்டு வரலாம் என்ற ஆலோசனையைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.12 மாதம் வெளியான சிறப்புப் பக்கங்களின் தொகுப்புதான் கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர் ஆகும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - – பொதுச் செயலாளர் - – பொருளாளர் - – முதன்மைச் செயலாளர் –- துணைப் பொதுச் செயலாளர்கள் - ஆகியோர் நினைவுகளோடு பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் இதில் எழுதி இருக்கிறார்கள். உணர்வுத் தலைவராக எப்படி இருந்தார் கலைஞர் என்பதை உடன்பிறப்புகளின் பார்வை வெளிப்படுத்துகிறது. பத்திரிகையாளர்கள், கலையுலகத்தினர், கவிஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகளும் தங்கள் பார்வையில் தலைவர் கலைஞரின் ஆற்றலை எடுத்துரைத்துள்ளார்கள். எல்லார்க்குமான தலைவராய் தலைவர் கலைஞர் எப்படி எல்லாம் இயங்கி இருக்கிறார் என்பதைச் சொல்லும் கருவூலமாக இந்த மலர் அமைந்துள்ளது.இது கையில் இருந்தால் கலைஞரோடு வாழும் உணர்வு ஏற்படும்.
ஒரு தலைவர் இத்தனை சாதனைகளைச் செய்ததில்லை என்று பெயர் வாங்கியவர் தலைவர் கலைஞர். ஒரு தலைவருக்கு இத்தகைய விழாக்கள் நடைபெற்றதில்லை என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான, உயர்ந்த, பன்முக விழாக்களை நடத்திக் காட்டியவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இருவரையும் போற்றுவோம்.