நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (04-06-2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களான உங்கள் மூலமாக நான் முதலில் கூறிக்கொள்ள விரும்புவது, இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமான அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கும் கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
'பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவைக் காப்போம்' என்ற முழக்கத்தோடு பரப்புரைப் பயணத்தைச் செய்த தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பதையும் தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியை ஜனநாயகச் சக்திகள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினோம். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறி, தங்களுக்கு யாருமே எதிரியாக இல்லை என்ற பிம்பத்தை பா.ஜ.க. ஏற்படுத்தியது.
ஆனால், ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கூட பெற முடியாத அளவுக்கு பா.ஜ.க. இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. அது மாதிரிதான் இப்போதுவரை செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்புகூட கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ.க. தொடுத்தது.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் என்பது, அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு! இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி!
பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றியாக; வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக அமைந்திருக்கிறது!
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு - இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழா ஆண்டு இது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தலைவர் கலைஞருக்குக் காணிக்கை ஆக்குவோம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே 75 ஆண்டுகளைக் கடந்த ஒரே மாநிலக் கட்சியான தி.மு.க.வின் இந்தத் தேர்தல் வெற்றியை - இந்த இயக்கத்தை ஐம்பது ஆண்டுகாலம் கட்டிக்காத்து இயக்கிய தலைவர் கலைஞருக்கு நான் காணிக்கை ஆக்குகிறேன்.
இதுதான் தற்போதைக்கு உங்களிடத்திலே நான் சொல்லக்கூடிய செய்தி.
கேள்வி: அதிக இடங்களில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அதனால், இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக உங்களை முன்னிருத்துவார்களா?
முதலமைச்சர் அவர்களின் பதில்: நான் ஏற்கனவே, பல முறை பதில் சொல்லி இருக்கின்றேன். கலைஞர் சொன்னதை தான் நான் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன். என் உயரம் எனக்கு தெரியும். முதலில், தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அது வெளிவந்த பிறகு அந்தக் கருத்தைப் பற்றிப் பிறகு பேசலாம்.
கேள்வி: தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆளும் என்று தேர்தலுக்கு முன்பு வரை சொல்லியிருந்தார்கள். அதற்கு நீங்கள் கூறும் பதில்.
முதலமைச்சர் அவர்களின் பதில்: கால் ஊன்றும்போது சொல்கிறேன். தாமரை மலரும், மலரும், மலரும் என்று சொன்னார்களே, அது எப்படி மலராமல் போனதோ, அதே போலதான் அதுவும்.
கேள்வி: நாற்பதுக்கு நாற்பது என்பது எப்படி சாத்தியம். நாங்களே எதிர்பார்க்கவில்லை.
முதலமைச்சர் அவர்களின் பதில்: நாங்கள் எதிர்பார்த்தோம். மோடியின் எதிர்ப்பு அலை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. அதே போல், இன்று தமிழ்நாட்டில் முழு அளவிற்கு எதிர்ப்பு அலை இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
கேள்வி : தமிழ்மொழியைப் பற்றி தமிழ்நாட்டில் பெருமையாக பேசியவர், அவருடைய அடுத்தடுத்த வருகை பெரிய மாற்றத்தை மக்கள் மனதில் கொண்டு வரவில்லையா? வாக்கு வங்கியாக மாறவில்லையா?
முதலமைச்சர் அவர்களின் பதில் : ஏற்கனவே, அவர் ஒடிசாவிற்கு சென்று என்ன பேசினார்? தமிழ்நாட்டில் பல இடங்களில் திருக்குறளைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அடையாளம் காட்டி பேசியிருக்கிறார். அவையெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காகப் பேசப்பட்ட பேச்சுக்கள். ஒடிசாவிற்குச் சென்று அதே தமிழர்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
நாளைய தினம் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் தில்லியில் கூடவிருக்கிறார்கள். நானும் அந்தக் கூட்டத்துக்குச் செல்கிறேன். அதில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.