முரசொலி தலையங்கம்

“ஆணவக்காரர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும்...” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த முரசொலி !

அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை.

“ஆணவக்காரர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும்...” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தோல்வி பயத்தில் தப்பாட்டம்!

486 இடங்களைக் கைப்பற்றுவோம், 378 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பம்மாத்து காட்டும் பா.ஜ.க.வுக்கு உண்மையில் 168க்கும் குறைவான இடங்கள் தான் கிடைக்கும் என்று மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதை விட முக்கியமாக பா.ஜ.க.வின் கோட்டை என்று சொல்லப்படும் மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பின்னங்கால் பிடறியில் அடிபட தப்பித்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். குஜராத், உ.பி. போன்ற மாநிலங்களிலேயே பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் போட்டியில் இருந்து பா.ஜ.க.வே விலகிவிட்டது.

‘தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது வட மாநிலங்களில் வெற்றி பெற்றுவிடுவோம்' என்று சொல்லி வந்தார்கள் சில வாரங்களுக்கு முன்பு வரை. இப்போது, வட மாநிலங்களின் நிலவரமும் கலவரமாக இருக்கிறது பா.ஜ.க.வுக்கு. இதனால் ஏற்பட்ட ஆத்திரமும் கோபமும் கண்ணை மறைக்கிறது பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு. தோல்வி பயத்தில் எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது என்பதே தெரியாமல் மூர்க்கத்தனமான சர்வாதிகார நடவடிக்கைகளைச் செய்து வருகிறார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களைக் கைது செய்திருப்பது அத்தகைய நடவடிக்கைதான்.

அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு 13 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா சில நாட்களுக்கு முன்னாள் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்துள்ளார்கள். இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையே.

“ஆணவக்காரர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும்...” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த முரசொலி !

இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடாகி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி மீதான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரால் மாபெரும் முறைகேடுகளில் இறங்கி உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது பா.ஜ.க. 'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படையுங்கள்' என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு கடுமையான உத்தரவைப் போட்ட பிறகும் அவர்களைச் செயல்பட விடாமல் தடுத்து வந்தது பா.ஜ.க. அரசு. இறுதி வரை உச்சநீதிமன்றம் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்த நிலையில் அனைத்து விபரங்களையும் பாரத் ஸ்டேட் வங்கி வழங்கிவிட்டது. இந்த விபரங்கள் முழுமையாக வெளியானால் பா.ஜ.க.வின் முகத்திரை கிழியும் என்பதால் அதைத் திசை திருப்புவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள்.

பா.ஜ.க.வின் யோக்கியதையை ஆம் ஆத்மி கட்சி அம்பலப்படுத்தி இருக்கிறது. "மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. "மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குனரிடம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்தல் நன்கொடை பத்திரத்தைப் பெற்றுள்ளது. ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் வழங்கிய பின்னர் அரவிந்தோ ஃபார்மா இயக்குனர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து அமலாக்கத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும்” - என்று - ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதைப் பற்றி இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வாய் திறக்கவில்லை.

தனக்கு எதிராக 'இந்தியா' என்ற வலிமையான கூட்டணியை எதிர்க் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலை கொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பா.ஜ.க. தலைமை. இது போன்ற கைதுகள், அரட்டல், மிரட்டல்கள் அனைத்தும் 'இந்தியா' கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர பலவீனப்படுத்தவில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணப்பதைப் போல, தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம்.

“ஆணவக்காரர்களின் ஆட்டம் விரைவில் அடங்கும்...” - ஒன்றிய பாஜக அரசை விமர்சித்த முரசொலி !

சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து மார்ச் 31 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணி சார்பாக டெல்லியில் போராட்டம் நடைபெற இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பாட்டில் வைக்கவும் இக்கட்சிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் கைது, நடுநிலையாளர்களை மட்டுமல்ல; பா.ஜ.க. ஆதரவாளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. 'ஐயோ! இதனால் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதே' என்று பா.ஜ.க. ஆதரவாளர்களும் பதறத் தொடங்கி இருக்கிறார்கள்.

தேர்தலை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள முடியாமல் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளின் மூலமாக எதிர்கொள்வது கோழைத்தனம் ஆகும். இவை அரசியலில் இருபக்கமும் பாயும் ஆயுதங்கள் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதன் மூலமாக 'இந்தியா' கூட்டணித் தலைவர்களை மிரட்டிப் பார்க்க நினைத்தால் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஏமாந்து போவார்கள். நாடு முழுவதும் நடக்கும் அனைத்து அசைவுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை.

banner

Related Stories

Related Stories