ஆளுநர் வெளியேற வேண்டாமா?
உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையையும், தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதன் மூலம் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஆகிறார். இதனை பேரவைத் தலைவரும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவரை மீண்டும் அமைச்சராக ஆக்குவதற்கு முதலமைச்சர் அவர்கள் விரும்புகிறார்கள். இதனை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எழுதிக் கேட்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகத் தெளிவாக இருப்பதால் உடனடியாக முதலமைச்சரின் எண்ணத்தை ஏற்றுக் கொண்டு க.பொன்முடி அவர்களுக்கு மீண்டும் பதவியேற்பு உறுதிமொழி நிகழ்வை ஆளுநர் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ரவி அவ்வளவு நல்லவரும் அல்ல, சட்டம் அறிந்தவரோ, யார் பேச்சைக் கேட்பவராகவோ இல்லை.
திருக்குறளையும் வள்ளலாரையும் வைகுண்டரையும் அரைகுறையாகப் படித்ததைப் போல சட்டத்தையும் அரைகுறையாகப் படித்தவரை ஆளுநராக வைத்திருந்தால் என்ன நடக்கும்? இப்படித்தான் இருக்கும். தன்னுடைய ஞானப்பிரதாபத்தைக் காட்டுவதைப் போல ஒரு அறிக்கையை ஊடகங்களில் கசிய விட்டுவிட்டு, பின்னர் அதனை அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
யாரை அமைச்சராக வைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்புரிமை சார்ந்தது. அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், தான் நினைப்பதை எல்லாம் செய்வதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக ரவி நினைத்துக் கொள்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட கவர்னர் ஜெனரல்களுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி சொல்வதைக் கேட்டுச் செய்ய வேண்டியது தான் அந்தக் காலத்து கவர்னர் ஜெனரல்களின் அதிகாரம் ஆகும்.
இன்றைய குடியாட்சி காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. தலைமை அமைச்சரான பிரதமருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உண்டு. குடியரசுத் தலைவருக்கு அல்ல. அதே போல மாநிலங்களில் முதலமைச்சர்களுக்குதான் அனைத்து அதிகாரமும் உண்டு. ஆளுநர்களுக்கு அல்ல. சில சடங்குகளைச் செய்வதற்காக இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவ்வளவுதான். இதுவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் மிச்ச சொச்சங்களே. மேலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகள் ஆளுநர்கள் அதிகாரமற்றவர்கள் என்பதை விளக்கி இருக்கின்றன.
கடந்த மூன்றாண்டு காலத்திலும் இதே போன்ற எத்தனையோ தீர்ப்புகளில் ஆளுநர்களுக்கு அறிவுரை சொல்லி மூலையில் உட்கார வைத்துள்ளன உச்சநீதிமன்றங்கள்.
மாண்புமிகு அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஆகும். “உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பொன்முடியின் தண்டனையையும் தீர்ப்பையும் நிறுத்தி வைக்கிறது என்றால் இடைக்காலமாக ரத்து செய்யப்படுகிறது என்று பொருள். இப்படி உத்தரவிட்ட நிலையில் தண்டனையை ரத்து செய்யவில்லை என்று ஆளுநர் எப்படிச் சொல்கிறார்? இப்படிச் சொல்லும் அவசியம் ஏன் ஏற்பட்டது. அவருக்கு ஆலோசனை சொல்பவர்கள் முறையாக ஆலோசனை சொல்வதில்லை என்று தோன்றுகிறது. தமிழ்நாடு ஆளுநர் அங்கு உட்கார்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறார். அவரது செயல்பாடுகள் தீவிரமாக பார்க்க வேண்டியதாக உள்ளன. அது பற்றி மேலும் இந்த நீதிமன்றத்தில் சப்தமாக நாங்கள் சொல்ல விரும்பவில்லை” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு சாட்டையால் அடித்தது.
“ஓர் அமைச்சர் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். ஆனால் அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் காப்பாண்மைத் தலைவர். மாநில அரசுக்கு அறிவுரை கூறும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உண்டு. ஒருவரை அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் விருப்பம் தெரிவிக்கும் போது அதை ஆளுநர் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்” என்று தெள்ளத் தெளிவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சொன்னது.
இதற்குப் பிறகும் பிரச்சினையை புரிந்து கொண்டு ஆளுநர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உச்சநீதிமன்றத்துக்கு இல்லாததால், ஆளுநருக்கு கெடுவும் விதித்தார்கள் நீதியரசர்கள். “பொன்முடி விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் ஆளுநர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுமாறு ஆளுநருக்கு உத்தரவிட நேரிடும்” என்று நீதிபதிகள் எச்சரிக்கையே செய்தார்கள். இவை அனைத்தும் மார்ச் 21 ஆம் தேதி காலையில் நடந்த விவாதங்கள் ஆகும். உடனடியாக 22 ஆம் தேதி காலையில் பதவியேற்பு விழாவை ஆளுநர் நடத்தி இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தையே மீறும் வகையில் தாமதம் செய்துள்ளார் ஆளுநர்.
22 ஆம் தேதி உச்சநீதிமன்றம், ஆளுநரை கண்டிப்பதோடு நிறுத்தாமல் அவர் எதற்காக பதவியில் இருக்க வேண்டும் என்று கேட்டுவிடக் கூடாது அல்லவா? அதனால் 22 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு மாண்புமிகு அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு பதவியேற்பு விழாவை நடத்தி முடித்துவிட்டார் ஆளுநர்.
ஆளுநர் இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி பதவியேற்பை செய்து கொடுத்துவிட்டார். மனச்சாட்சிப்படி அவர் எப்போது வெளியேறப் போகிறார்?
- முரசொலி தலையங்கம்
25.03.2024