முரசொலி தலையங்கம் (30-01-2024)
விஷம் வழிந்தோட வேண்டாம்; அன்புநதியில் நனைவோம்!
அண்ணல் காந்தியடிகளை கோட்சே சுட்டுக் கொன்ற நாள் தான் சனவரி 30. அண்ணல் காந்தியின் வரலாற்றைச் சொல்பவர்கள், அவர் கொலை செய்யப்பட்டு இறந்தார் என்பதையும் சொல்ல வேண்டும்.
அதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். எதிர்காலத்தில் மதவெறி பரவாமல் தடுக்கும் வழியாகவும் அது இருக்க முடியும்.
அண்ணல் காந்தி கொலை செய்யப்பட்ட அந்த நாளில் அவர் விரும்பிய மத நல்லிணக்க உறுதிமொழியை நாடு முழுவதும் அனைவரும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தி.மு.க. தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை மிகச் சரியாக விளக்கி இருக்கிறார்.
* அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்த காந்தி, ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார்.
* 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை.
* தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார்.
* இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள்.
* நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்.
* வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். – என்பதை அதிகமாக வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
அன்பைப் போதிக்கிறது மதம் என்று சொல்லிக் கொண்டே வம்பை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள் வகுப்புவாத சக்திகள். இக்காலத்தில் மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்துக்கு ஆதரவான முகமாக அண்ணல் காந்தியடிகளைத்தான் தூக்கிப் பிடித்தாக வேண்டும். அவர் நாத்திகர் அல்ல. ஆன்மிகவாதிகளின் அடையாளமாக தனது வாழ்க்கையை வரித்துக் கொண்டவர் அவர்.
நானும் ஓர் சனாதன ஹிந்து என்று உரிமை பாராட்டி வருகிறேன் என்று சொல்லிக் கொண்டவர்தான் காந்தியார். ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அவர், வேதகாலத்தில் இருந்த வருணாசிரம தர்மத்தில் தனக்கு பெரிய நம்பிக்கை உண்டு என்றும் சொல்லிக் கொண்டார். இத்தோடு அவர் நிறுத்தி இருந்தால் அவரை வகுப்புவாதிகள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
“வேதங்களுக்கு மட்டுமே தனித்து ஈசுவரத் தன்மை உண்டு என்று நான் கருதுவதில்லை. வேதங்களுக்கு எவ்வளவு ஈசுவரத்தன்மை உண்டோ அவ்வளவு ஈசுவரத் தன்மை கிறிஸ்துவ வேதமாகிய பைபிளுக்கும், முகமதியர் வேதமாகிய குர் ஆனுக்கும், பாரசீகரின் வேதமாகிய ஜெண்டவஸ் தாவுக்கும் உண்டு என்று கருதுபவன் நான்” என்றவர் அவர்.
“இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று இந்துக்கள் கருதினால் அவர்கள் கனவு காண்பவர்கள் ஆவார்கள். இந்தியாவைத் தங்கள் தாய் நாடாக்கிக் கொண்ட இந்துக்களுக்கும், முகமதியர்களுக்கும், பார்சிகளும், கிறிஸ்தவர்களும் சகோதரர்கள் ஆவார்கள்” என்றவர் அவர். முகமதியர்களை கீதை படிக்கச் சொன்னார். இந்துக்களை குரான் படிக்கச் சொன்னார். ‘போலிக்குருமார்களின் போதனையைக் கேட்காதீர்கள்’ என்று வேண்டிக் கொண்டார். எந்த சமூகமும், தனது நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என்றார்.
“சூத்திரர்கள் வேதங்களைக் கற்கக் கூடாது என்ற தடையை நான் ஆதரிக்க முடியாது. நாம் அந்நியருக்கு அடிமையாக இருந்து வரும் வரையில் நாம் எல்லோருமே உண்மையில் தற்போது சூத்திரர்கள்தான்” என்று சொன்னவர் காந்தி.
இரு தேசியங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று சாவர்க்கர் சொன்னபோது, ‘இரு தேசிய இனங்கள் எனும் கொள்கை பொய். இந்திய இந்துக்களும், முசுலீம்களும் வேறுவேறு இனமல்ல’ என்றவர் காந்தி.
‘மதவாத எண்ணம் தோன்றினால் நாடு விஷம் வழிந்தோடும் தேசம் ஆகிவிடும். ஆனால் நான் கனவு காணும் நாடு அன்புநதிகள் வழிந்தோடும் நாடாகும்’ என்றவர் காந்தி. இன்று அவர் தேவைப்படுகிறார். அவரது கருத்துகள் தேவைப்படுகின்றன. அவர் நினைகூரப்பட வேண்டும். அவரது நினைவு நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்!
மனித நேயம் காப்போம்! மதவெறியை விலக்குவோம்! வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்! நமக்குள் உள்ள பிளவுகளை விலக்குவோம்! மதவெறி சக்திகளை வேரறுப்போம்! பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம்! பிறப்பொக்கும் என்பதே, நமது அறமாகும்! யாவரும் கேளிர் என்பதே, நமது பண்பாகும்! அமைதியான இந்தியா வேண்டும்! வகுப்புவாத இந்தியா வேண்டாம்! அனைவர்க்குமான இந்தியாவை உருவாக்குவோம்! ஒற்றுமை இந்தியா வேண்டும்!