முரசொலி தலையங்கம் (29-01-2024)
எய்ம்ஸ் என்னாச்சு?
ஜனவரி 27 – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள். பொதுவாக மருத்துவமனையைக் கட்டித் திறந்தால் திறந்த நாளைக் கொண்டாடுவார்கள். பா.ஜ.க.வின் எய்ம்ஸ்க்கு என்ன பெருமை என்றால் பல ஆண்டுகளாக அடிக்கல் நாட்டும் நாளையே கொண்டாட வைத்துக் கொண்டு இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திரமோடி வைத்தார். 2020,2021,2022,2023 ஆகிய ஆண்டுகள் முடிந்து விட்டது. 2024 ஆம் ஆண்டும் தொடங்கிவிட்டது. அவரது ஐந்தாண்டு ஆட்சியும் முடியப் போகிறது. அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. எய்ம்ஸ் தான் வந்த பாடில்லை.
நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில், ‘எய்ம்ஸ் என்னாச்சு?’ என்பதே மிகப்பெரிய பேசு பொருளாக ஆகி இருந்தது. சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகள் வலிமையானவை.
* மதுரையில் 2019 ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 வருஷம் ஆச்சு. எய்ம்ஸ் என்னாச்சு?
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி 15 மாதங்களில் திறப்புவிழா கண்டது கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டுகள் ஆச்சு. எய்ம்ஸ் என்னாச்சு?
* இமாசலப் பிரதேசம் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் மதிப்பில் 2017 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு 2022 அக்டோபர் 5 ஆம் தேதி திறந்தும் வைத்து விட்டார். ஆனால் மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல் காடாகவே காட்சியளிக்கிறது.
* மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டுக்கு இன்னும் நிறைய திட்டங்களை வழங்குவோம்’ என்றார். ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கே வழியில்லாத கையில்தான் நிறைய வடைகளைச் சுட்டார்.
* ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 95 சதவிகித பணிகள் முடிவடைந்துவிட்டன’ என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திக் ண்டே இருந்தார்கள். கடைசி வரை எய்ம்ஸ் வரவே இல்லை.
* ஐந்தாண்டுகளில் ஒரு செங்கலைக் கூட மோடி அரசு எடுத்து வைக்கவில்லை.
* 2015 -– நிதிநிலை அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்ட பஞ்சாப் பதிண்டா எய்ம்ஸ் மருத்துவமனை 2019 ஆம் ஆண்டே செயல்பட ஆரம்பித்துவிட்டது. மதுரையிலோ இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவே இல்லை.
– இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் வலம் வருவோர் கேட்ட கேள்விகள் ஆகும். இதற்கெல்லாம் பா.ஜ.க. வாய்கள், பதில் சொல்லாது. சொல்ல முடியாது.
அடிக்கல் நாட்டியதுதான் 2019. அதனை வைத்துத்தான் ஐந்து ஆண்டுகளைக் ‘கொண்டாடிக்’ கொண்டு இருக்கிறோம். உண்மையில் பத்து ஆண்டு விழாவைத்தான் கொண்டாட வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் நிறுவுவதற்கான பா.ஜ.க.வின் ஏமாற்று நாடகங்கள் 2014 ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதே தொடங்கிவிட்டது.
'தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யுங்கள்' என்று முதன்முதலாக 19.6.2014 அன்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. இரண்டு இடங்களைத் தேர்வு செய்து 31.0.2014 அன்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது.
28.2.2015 அன்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி, 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்' என்று சொன்னார்.2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நான்கு மாத காலக்கெடுவை நீதிமன்றம் விதித்தது.
2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என்று தேதியே குறித்தார்கள். அடிக்கல் நாட்டப்பட வில்லை. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர். எனவே, எய்ம்ஸ் ஏமாற்றும் சுழியை 2015 ஆம் ஆண்டே போட்டுவிட்டது பா.ஜ.க.
மாநில அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ஆயிரத்து 977 கோடி ரூபாயாக அதிகரித்த நிலையில், ஓராண்டு கழித்து ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெறும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 82 சதவீதம் நிதியான ஆயிரத்து 627 கோடி ரூபாய் ஜப்பானின் ஜைய்கா நிறுவனத்திடம் இருந்து கடன் பெறப்படும். எஞ்சிய 18 சதவிகிதம் மட்டுமே ஒன்றிய அரசு வழங்கும் என கூறப்பட்டது. மற்ற மாநிலங்களில் அமைக்கும் மருத்துவமனைகள் எல்லாம் பா.ஜ.க. அரசின் நிதியில் இருந்து அமைக்கப்படுமாம். தமிழ்நாட்டில் அமையும் எய்ம்ஸ்க்கு மட்டும் ஜப்பான் நிதியை எதிர்பார்ப்பார்களாம். தமிழ்நாடு என்ன ஜப்பானில் இருக்கிறதா? இதற்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை?
மக்கள் எழுப்பும் கேள்வி இதுதான்...
* மதுரைக்கு அருகே கீழடி அருங்காட்சியகம்
* கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்
*கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் –- ஆகிய மூன்றையும் மூன்று ஆண்டுகளுக்குள் மதுரைக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கொண்டு வராத பிரதமர் நரேந்திரமோடிதான் வாக்குக் கேட்டு வரப்போகிறார்.
எய்ம்ஸ் என்றால் ‘ஏமாற்றுதல்’ என்ற பொருளை இப்போது தருகிறது. அதைத்தான் தமிழ்நாட்டு மக்களுக்கும் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்குவார்கள்.