முரசொலி தலையங்கம் (07-12-2023)
பழனிசாமிக்கு யார் புரிய வைப்பது?
எப்போதும், சேலத்திலேயே பதுங்கி இருக்கும் பழனிசாமி இப்போது மெதுவாக வெளியில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். புயல் வருவதற்கு முன்பே சேலத்தில் உட்கார்ந்து கொண்டு, ‘சென்னை மிதக்கிறது’ என்று புளுகிக் கொண்டு இருந்தவர் பழனிசாமி. ஐம்பதாண்டுகள் இல்லாத வகையில் 48 செ.மீட்டர் வரைக்கும் ஒரே நாளில் மழை பெய்ததால் சென்னையில் சில பகுதிகளில் இன்னமும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்று மணி நேரத்தில் பெய்தது என்று சொல்லத் தக்க வகையில் மழை பெய்துள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான மழை வெள்ள வாய்க்கால் தடுப்புப் பணிகளை தி.மு.க. அரசு செய்து வருவதால்தான் இந்தளவாவது பாதிப்பு குறைவாக இருக்கிறது. பழனிசாமி ஆட்சிக் காலமாக இருந்தால் அவ்வளவு தான் மொத்த சென்னையும் மூழ்கி இருக்கும்.
2015 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 29.4 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 34.5 சென்டிமீட்டர் மழையும் 24 மணி நேர கால அளவில் பதிவானது. ஆனால் இப்போது – கடந்த 4 ஆம் தேதியன்று பெருங்குடியில் மட்டும் 44 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 43 சென்டிமீட்டர் மழையும் 36 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டை விட இப்போது பெய்த மழை மிக மிக அதிகம் ஆகும். 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், இன்று அதைவிட அதிகமான மழை பெய்திருக்கக்கூடிய நேரத்தில் 17 பேர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதுவும் ஏற்பட்டிருக்கக்கூடாது. 2015 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மரணம் அதிகம் ஆனதற்கு என்ன காரணம் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கி இருந்தார்கள். எத்தகைய செயற்கை வெள்ளத்தை அ.தி.மு.க. அரசு உருவாக்கியது என்பதைச் சொல்லி இருந்தார்கள். உடனே பழனிசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.
“நான் கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன். செயற்கை, இயற்கை வெள்ளம் என்று நான் கேள்விப்பட்டதே கிடையாது” என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. கிராமத்தில் இருந்து வந்த இவர்தான் மூன்று வேளாண் சட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு பட்டவர்த்தனமாக பச்சைத் துரோகங்களைச் செய்தவர் என்பதை இந்த நாடு அறியும்.
“2015-ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திட்டமிடப்படாமல், அடையாறு வரும்பொழுது, 1 இலட்சம் கன அடி அளவிற்கு பெருமளவு நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அது ஒரு செயற்கை வெள்ளம். இது இயற்கையாக ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ளம். அதையும், இதையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். இதில் என்ன தவறு கண்டார் பழனிசாமி?
அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தின் ஒரே ஒரு உதாரணம்... 02.12.2015 அன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையே மிதந்தது. 174 பேர் இறந்தார்கள், 2 ஆயிரத்து 711 கால்நடைகள் இறந்தன. ஒரு தனியார் மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்த அறைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 14 நோயாளிகள் இறந்தார்கள். சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவலத்தையும் அப்போது நாடு பார்த்தது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவையே அதிகாரிகளால் இரண்டு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சென்னை மிதந்ததற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு செயல்பட வில்லை. அதனால்தான் மக்களே தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.
2015 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது அமைச்சரவையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. அவர்கள் அனைவரையும் எழுப்பி தகவல் சொல்ல அதிகாரிகளால் முடியவில்லை. மழை, வெள்ளம் அதிகம் ஆகிறது என்று தெரிய வந்ததும் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை படிப்படியாகத் திறந்துவிட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் படிப்படியாகத் திறக்கவில்லை. ‘முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தகவல் சொல்லிவிட்டோம். அவரிடம் இருந்து தகவல் இல்லை’ என்று அதிகாரிகள் காத்திருந்தார்கள். செம்பரம்பாக்கம் உடையப் போகிறது என்பதை உணர்ந்த பிறகு மொத்தத்தையும் திறந்து விட்டார்கள். ஊரே இதனால்தான் மிதந்தது. இதனைத்தான் செயற்கை வெள்ளம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பழனிசாமி, உண்மையில் கிராமத்தில் இருந்து வந்திருந்தால் அது புரிந்திருக்கும்.
இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார் பழனிசாமி. “4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வடிகால் பணிகள் கூட நான் முதலமைச்சராக இருந்தபோது ஆசிய வளர்ச்சி வங்கி மூலமாக நிதியைப் பெற்று அந்த பணி தொடங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. இந்த திட்டத்தைக் கொண்டு வரவில்லை. நான்தான் கொண்டு வந்தேன்” என்று சொல்லி இருக்கிறார். இவரது ஆட்சியில் கிழித்தது என்ன என்பதை அ.தி.மு.க. ஆட்சிக் காலக் கோப்புகளைப் பார்த்தாலே நன்கு தெரியும்.
இவரது ஆட்சியில் திட்டமிட்டதாக அறிவித்தார்கள். அறிவிப்பை செயல்படுத்துவதைப் போல பாசாங்கு செய்தார்கள். கணக்குக் காட்டினார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் மொத்தமாக பணம் கொள்ளையடித்தார்கள். மழைநீர் வடிகால் பணிகள் நடக்கவே இல்லை. அ.தி.மு.க. ஆட்சியின் 2016–21 காலக்கட்டத்தில் சென்னையின் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக மட்டும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.7,744 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிவிப்புகள் வெளியானது. ஆனால் எதையும் ஒழுங்காகச் செய்யவில்லை.
2016-17 நிதிநிலை அறிக்கையில் ரூ.445.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள்.
2018–19 நிதி நிலை அறிக்கையில் 2,055.67 கோடி ரூபாய் என்றும், 1,243.15 கோடி ரூபாய் என்றும் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள்.
2020–21 நிதிநிலை அறிக்கையில் 3000 கோடி ரூபாய் என்று அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்தார்கள். இவை எதையும் பழனிசாமி ஆட்சி செயல்படுத்தவில்லை.
இதனை பழனிசாமி மறந்திருக்கலாம். மக்கள் மறக்க மாட்டார்கள். அரசாங்க, சட்டசபை ஆவணங்களில் அவை இருக்கிறது. யாராலும் மறக்க முடியாது. ஒரே ஒரு நாள் சேலத்தில் இருந்து வந்து, மீடியாக்களிடம் வாய்க்கு வந்ததை உளறிவிட்டு ஓடும் பழனிசாமிக்கு இதெல்லாம் புரியுமா?