முரசொலி தலையங்கம் (02-12-2023)
அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம் !
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேரொளியாம் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னை கிண்டியில் மணிமண்டபம் அமைத்து அதனத் திறந்து வைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“தமிழ்நாட்டு அரசியலில் -தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.
வள்ளுவர் - அவ்வை – கபிலர் – வள்ளலார் – வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அளவில் சென்னையில் அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று அறிவித்தார் முதலமைச்சர் அவர்கள். அயோத்திதாசப் பண்டிதர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு அது நேற்றைய தினம் (1.12.2023) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரியர் எதிர்ப்பு – பார்ப்பனர் மறுப்பு - சாதி பேதம் - பெண்ணுரிமை – தமிழ்ப் பற்று – இடஒதுக்கீடு – பெளத்தம் – தமிழ்ப் பண்பாடு - ஆகியவை குறித்து காலனியாதிக்கக் காலத்திலேயே எழுதியும்- கோரிக்கை வைத்தும் - இதழ் நடத்தியும் போராடி வந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள். அதனால்தான் தனது முன்னோடியாக அயோத்திதாசப் பண்டிதரை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாக இருப்பவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி.அப்பாத்துரையாரும்தான்” என்று பெங்களூரில் பேசியவர் தந்தை பெரியார். அயோத்திதாசருக்குப் பிறகு ‘தமிழன்’ இதழை நடத்தியவர் தான் அப்பாத்துரையார். அவருக்கும் பெரியாருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. பெங்களூருக்கு பெரியாரை அழைத்து மாநாடுகளில் பேச வைத்துள்ளார் அப்பாத்துரையார்.
‘தமிழன்’ இதழை 1907 முதல் 1914 வரை நடத்தினார் அயோத்திதாசப் பண்டிதர். அவருக்குப் பிறகு 1926 ஆம் ஆண்டு மீண்டும் அந்த இதழ் வெளியானது. அதனை வரவேற்று தனது ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதி இருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் செய்திகளை அதிகம் வெளியிடும் இதழாக பிற்காலத் ‘தமிழன்’ இதழ் அமைந்தது. எனவே திராவிட இயக்க எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக அயோத்திதாசரைக் குறிப்பிட்டு எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ‘உண்மை’, ‘விடுதலை’ ஆகிய இரண்டு இதழ்களிலும் அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், 1993 ஆம் ஆண்டு ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலை எழுதினார். இதில் அயோத்திதாசர் வரலாறு முழுமையாகச் சொல்லப்பட்டது. பெரியாரிய ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை -வ.கீதா ஆகிய இருவரும் இணைந்து Towards a non - brahmin millennium : From Iyothee Thase to periyar என்ற நூலை 1998 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1999 ஆம் ஆண்டுதான் ஞான.அலாசியஸ் தொகுத்த அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் புத்தகம் வெளியானது. இதன் பிறகு அவர் அதிகம் பேசப்பட்டார்.
அறிவுச்சூழலில் அதிகம் பேசப்படத் தொடங்கிய அயோத்திதாசப் பண்டிதருக்கான அரசு அங்கீகாரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது.
« 1999 ஆம் ஆண்டு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த தலித் எழில்மலை அவர்கள், தாம்பரத்தில் சித்த மருத்துவ நிலையம் அமைக்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் இடம் கேட்டார். ‘நீங்கள் இடம் கொடுத்தால் அயோத்திதாசர் பெயரால் அந்த மருத்துவ நிலையத்தை அமைக்க முடியும்’ என்று அமைச்சர் தலித் எழில்மலை சொன்னார். அந்தப் பெயருக்காகவே இடம் தருவதாகச் சொல்லி 12 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் முதலமைச்சர் கலைஞர். 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் அதனைத் திறந்து வைத்தார்.
« மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அயோத்திதாசரின் தபால் தலை வெளியிடும் முயற்சிகளுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்டார். 21.10.2005 அன்று சென்னையில் அயோத்திதாசர் தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது. தலைவர் கலைஞர் பங்கெடுத்தார். ‘தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி’ என்று அயோத்திதாசரை அழைத்தார் கலைஞர்.
« 2007–08 நிதி நிலை அறிக்கையில், அயோத்திதாசரின் ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும் என தி.மு.க. அரசு அறிவித்தது.
« அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்ட ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை தி.மு.க. அரசு 8.7.2008 அன்று சென்னையில் நடத்தியது. மாண்புமிகு அமைச்சர்கள் இனமானப் பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி, தமிழரசி ஆகியோர் பங்கெடுத்த இந்த விழாவில் – சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்களான யசோதா, ரவிக்குமார் மற்றும் பேராசிரியர் பெரியார் தாசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
«2008-09 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு.
« இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதருக்கு சென்னையில் அவர் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துள்ளார்.
« ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
- இப்படி அயோத்திதாசப் பண்டிதரின் புகழைப் பரப்புவதில் திராவிட இயக்கமும், தி.மு.க. அரசும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருந்துள்ளதை திறந்த மனத்தோடு இருப்பவர்கள் நன்கு உணரலாம். தொண்டையில் ‘முள்’ அடைத்திருந்தால் உணர முடியாது.