வள்ளலார் சமஸ்கிருதம் போற்றினாரா?
தங்களுக்கெனச் சொந்தமாகச் சொல்லிக் கொள்ள தத்துவ மேதைகளும் வழிகாட்டிகளும் தலைவர்களும் இல்லாத காரணத்தால் பெருமைக்குரியவர்கள் அனைவரையும் தங்களவர்களாக கபளீகரம் செய்து கொள்வது பா.ஜ.க.வின் இழிசெயல்களில் ஒன்றாகும். அப்படித்தான் திருவள்ளுவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - அண்ணல் அம்பேத்கர் - மாவீரன் பகத்சிங் ஆகியோரை தங்களது வசதிக்கு ஏற்ப திரித்து தங்களவராகக் காட்டி வருகிறார்கள். இந்த வரிசையில் அருட்திரு வள்ளலாரும் அவர்கள் கையில் சிக்கி விட்டார்.
மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ‘சாதி - சமய வேறுபாடின்றி சன்மார்க்க நெறியில் வாழ்வதுதான் இகத்தில் பரத்தைப் பெறுவதாகும்’ என்று சொன்ன வள்ளலார் வழியைப் பற்றிப் பேசலாமா? சாதி மத வேறுபாடின்றி உலகோர் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை அடைதல்தான் வள்ளலாரின் நோக்கம் ஆகும். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசினார். ஒளிவடிவில் வழிபடுவதையே வலியுறுத்தினார். செல்வர் - வறியர் பேதம் கூடாது என்றார். ஆண் - பெண் ஆகிய சமத்துவத்தை உறுதிசெய்தார். கணவன் இறந்தால் தாலியை நீக்குவதையே கண்டித்தார். இப்படி அவரது சீர்திருத்தங்கள் பலப்பல. பெண்ணை ‘மனுநூல்’ இழிவாகச் சொன்னது. அதனை மறுத்து உரிமைப் பெண்ணாக அடையாளப் படுத்தியவர் வள்ளல் பெருமான்.
சடங்குகளையும் - சாத்திர சம்பிரதாயங்களையும் வெறுத்தார். இவை பொய் என்றும், சழக்கு என்றும் கண்டித்தார்.
* வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை’ - என்று பாடியவர் அவர்.
* இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு;
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு;... (ஆறாம் திருமுறை 33 : 10) - என்று பாடியவர் அவர்.
* “சதுர்மறை ஆகம சாத்திர மெல்லாஞ்
சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ’ (ஆறாம் திருமுறை 143 : 4) - என்று பாடியவர் அவர். இதனை பிரதமருக்கு கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.
‘தமிழ் - சமஸ்கிருதம் - ஆங்கிலத்தில் இளைஞர்கள் சரளமாகப் பேச வேண்டும் என்று வள்ளலார் விரும்பினார். அதுதான் எங்களின் தேசியக் கொள்கை’ என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர். மும்மொழிப் பாடசாலையை வள்ளலார் உருவாக்கினார் என்பதை வைத்து இப்படிப் பேசி இருக்கிறார் பிரதமர். சமஸ்கிருதத்தை வள்ளல் பெருமான் ஏற்றுப் போற்றியதைப் போன்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. வைதிக கருத்துகளை மட்டுமல்ல, வைதிக மொழியாம் சமஸ்கிருதத்தையும் கடுமையாக விமர்சித்தவர் வள்ளலார் அவர்கள்.
“இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கு மணிதற்கும் மிகவுமிலே சுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்!” என்றவர் அவர்.
சங்கராச்சாரியார் அவர்கள், “சமசுகிருதமே மாத்ரு பாஷை’ (இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி) என்று கூற, சட்டென்று நொடிப்பொழுதில் வள்ளலார், “சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மையெனில், அதற்கு ‘எமது தமிழே பித்ரு பாஷை’ (இந்திய மொழிகளிக்கெல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி தந்தார்.
“ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல் - பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில் முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்.” என்று தமிழைப் போற்றியவர் வள்ளலார்.
தமிழ் இன்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழி என்றும், தமிழ் மொழியே அதி சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்கும் என்றும் சொன்னவர் வள்ளலார். சமஸ்கிருதத்துக்கு பல்லாயிரம் கோடியும் தமிழ் வளர்ச்சிக்கு சில பத்துக் கோடியும் ஒதுக்கி விட்டு வள்ளலார் வழியில் நடப்பதாக மோடி சொல்வது மோசடி வழி அல்லவா?
‘வள்ளலார் காட்டிய வழியில் மத்திய அரசு செயல்படுகிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி சொல்லியதைப் படித்த பிறகு நெஞ்சு அடைக்கிறது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில் கொரோனா காலத்தில் வாடினாராம் பிரதமர். அவரே சொல்லிக் கொள்கிறார்.
லட்சக்கணக்கான மக்களை பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்த கொடூரக் காலத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். வடமாநில மக்கள் பட்ட துன்பத்தைத்தான் நாம் பார்த்தோம். நடந்தே போய் மயங்கிச் செத்தது 13 வயதான ஜம்லோ என்ற இளம்பிஞ்சு. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நடந்து போயே இறந்தார்கள். ரயில் வருவது தெரியாமல் ரயில் பாதையில் போய் மரணம் அடைந்தார்கள் மக்கள். இவர்களுக்காக உ.பி.யில் பேருந்துகள் ஏற்பாடு செய்தார் பிரியங்கா காந்தி. அதையும் தடுத்தார் அங்கிருந்த முதலமைச்சர் ஆதித்யநாத். இவர்களது பாதை எது என்பது தான் நமக்குத் தெரியுமே!