முரசொலி தலையங்கம்

அதிமுக ஆட்சியின் கொடூர முகத்திற்கு உதாரணம் வாச்சாத்தி ; ஜெயலலிதா ஆட்சி காலத்தின் அநியாயம் : முரசொலி!

அ.தி.மு.க.வின் ஆட்சியின் கொடூரத்தன்மைக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது வாச்சாத்தி!

அதிமுக ஆட்சியின் கொடூர முகத்திற்கு உதாரணம் வாச்சாத்தி ; ஜெயலலிதா ஆட்சி காலத்தின் அநியாயம் : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (02-10-2023)

வாச்சாத்தி – அ.தி.மு.க.வின் கொடூரம்!

அ.தி.மு.க.வின் ஆட்சியின் கொடூரத்தன்மைக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது வாச்சாத்தி!

குற்றவாளிகள் 215 பேருக்கும் தண்டனையை உறுதி செய்துள்ளது உயர்நீதிமன்றம். இதன் மூலம் ஜெயலலிதா ஆட்சி காலத்தின் அநியாயம், அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஆரூர் - பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம். சந்தன மரக் கடத்தலை தடுக்கப் போகிறோம் என்று சொல்லி அதிமுக ஆட்சியில் மிகக் கொடூரம் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி அரங்கேறியது.அந்தக் கிராமமே சிதைக்கப்பட்டது. ஒரு சிறுமி உள்பட 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஜூன் 22 அன்று பழங்குடியின மக்கள் சேர்ந்து அரூர் காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். ஆனால் அன்றைய போலீஸ் அதனை வாங்கவில்லை. பழங்குடியினர் அமைப்பும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல், சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. வனத்துறையை சேர்ந்த 155 பேர், காவல்துறையை சேர்ந்த 108 பேர், வருவாய்த்துறையினர் 6 பேர் என 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு 2011 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டது. 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5பேருக்கு 7ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-–3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதன் மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நீதியரசர் வேல்முருகன், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் கொடூர முகத்திற்கு உதாரணம் வாச்சாத்தி ; ஜெயலலிதா ஆட்சி காலத்தின் அநியாயம் : முரசொலி!

இந்த குற்றச்சம்பவம், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்தது. தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் பி.சண்முகம், வாச்சாத்தி கிராமத்துக்கு வந்து பார்வையிட்ட பிறகு தான் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைய அதிமுக ஆட்சியின் நிர்வாகம் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று சமாளித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் அ.நல்லசிவன், இந்தப் பிரச்னையை நீதி விசாரணை நடத்தக் கோரி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்த அப்போதைய வனத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிகாரிகளைப் பாதுகாத்து அறிக்கை வெளியிட்டார்.

சில அரசியல் கட்சிகள் இதனை பெரிது படுத்துவதாக அ.தி.மு.க. ஆட்சியின் மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுத்தார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முழுமையாக அ.தி.மு.க. ஆட்சி மறுத்தது.வீடுகளை அவர்களே இடித்துக் கொண்டதாகவும் அ.தி.மு.க. ஆட்சி சொன்னது.தாங்கள் விசாரணை ஆணையம் அமைத்திருப்பதாக அறிவித்தார்கள். அந்த ஆணையம் வாச்சாத்திக்கு செல்லவே இல்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அன்றைய செயலாளர், வாச்சாத்தியில் வசிப்பவர்கள் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு பலியானதாகக் கூறப்படுவதை மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அன்றைய அ.தி.மு.க. ஆட்சி எப்படி நடந்து கொண்டது என்பது குறித்து, 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் ( 30.9.2023) கட்டுரையாளர் பி.வி.ஶ்ரீவித்யா விரிவாக எழுதி இருக்கிறார்.

“அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செங்கோட்டையன், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் ‘அணிவகுப்பை’ சீர்குலைப்பதற்காகவே அரூர் அரசு பங்களாவில் அவர் தங்கி இருந்ததாக பழங்குடியின செயற்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டுகிறார். ஊத்தங்கரை மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் அடையாள அணிவகுப்பு நடைபெற இருந்தது . ஆனால் அதை நடத்துவதற்கு பாதுகாப்பு தேவை என உயர்நீதிமன்றத்திற்கு மாஜிஸ்திரேட் கடிதம் எழுதிவிட்டு அங்கு செல்லவில்லை. பின்னர், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க ஒவ்வொரு 10 மீட்டருக்கும் ஒரு போலீஸ்காரர் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு சேலம் சிறையில் அந்த அணிவகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. 18 இளம் பெண்கள் தங்களை துன்புறுத்தியவர்களை அடையாளம் காட்டினர். அந்த அணிவகுப்பின் போது பல்வேறு விதமாக வேஷ்டி, சட்டை மற்றும் துண்டுகள் எல்லாம் உடுத்தி அந்த பெண்களை குழப்பும் வகையில் செயல்பட்டு வந்தனர். வெயில் அதிகமாக இருக்கிறது என கூறி வெயிலில் நிற்க மறுத்தனர். அதில் இருந்து தப்பிப்பதற்காக செங்க்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ சிங்காரம் உதவியோடு பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த அணிவகுப்பு மூன்று முறை நடத்தப்பட்டது. மீண்டும் மீண்டும் அந்த பெண்கள் அவர்களை தீர்மானகரமாக அடையாளம் காட்டிக்கொண்டே இருந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர் நல்லசிவம், வாச்சாத்திக்கு சென்று, நடந்த கொடுமைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் அப்போது, 'வாச்சாத்தி மலையடிவார கிராமம் என்பது கூட தெரியாமல், நல்லசிவம் வயதான தன் கால்களை வைத்துக்கொண்டு எப்படி மலை கிராமத்திற்கு சென்று பார்த்தார்' என செங்கோட்டையன் கிண்டலாக பேசியுள்ளார்" என்று எழுதி இருக்கிறது. 'தி.இந்து' ஆங்கில நாளிதழ்.

அதிமுக ஆட்சியின் கொடூர முகத்திற்கு உதாரணம் வாச்சாத்தி ; ஜெயலலிதா ஆட்சி காலத்தின் அநியாயம் : முரசொலி!

அதனால் தான், அன்றைய அதிமுக ஆட்சிக்கான கண்டனத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டாத அப்போதைய அரசு, தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாச்சாத்தி பகுதியில் சில பெரும் புள்ளிகள் சந்தன கடத்தலில் ஈடுபட்ட நிலையில், அப்பாவி கிராம மக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வனத்துறை எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கூட, மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட வன அதிகாரியோ, காவல் கண்காணிப்பாளரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில், அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய அரசு, பழங்குடியின பெண்களை பாதுகாக்க அக்கறை காட்டவில்லை எனவும், மாறாக தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முற்பட்டதாகவும் கடும் கண்டனத்தை நீதிபதி வேல்முருகன் பதிவுசெய்துள்ளார்.

அம்மா ஆட்சியின் எத்தனையோ அவலங்களுக்கு 'வாச்சாத்தியும்' கொடூரமான அடையாளமாக வரலாற்றில் பதிவாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories