முரசொலி தலையங்கம் (03-07-2023)
ஆளுநரின் அதிகார அத்துமீறல்கள்! - 1
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அவர்கள், ஒரு அறிக்கையை வெளியிட்டார். 'சட்டரீதியாக இதனைச் சந்திப்போம்' என்று முதலமைச்சர் சொன்ன மூன்று மணி நேரத்துக்குள் அவரே அதனை திரும்பப் பெற்றுவிட்டார்! 'திரும்பப் பெற வில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று சில உளறுவாயர்கள் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். 'நிறுத்தி வைத்தாலே. நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்” என்று வியாக்கியானம் சொன்னவர்தான் ஆளுநர். எனவே அவர் இப்போது நிறுத்தி வைத்திருப்பதே. மொத்தமாக திரும்பப் பெற்றதாகவே பொருள்.
இவை முழுக்க முழுக்க ஆளுநர் ரவியின் அதிகார அத்துமீறல் ஆகும். இது நிர்வாக ஒழுக்கமீறல் ஆகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும் - அந்த அமைச்சரை நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறுயாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரை தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றோ அர்த்தம் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக் கும் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் என்பவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. சும்மா இருப்பவர்களை திருப்திப்படுத்த ஒன்றிய அரசாங்கம் தருகின்ற டம்மி மரியாதை ஆகும். ராஜா வேஷம் போட்டவர் ராஜாவாக நினைத்துக் கொள்வது மாதிரி - ஆளுநர் ரவி தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அமைச்சரவையின் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு உதவி செய்ய வேண்டிய ஆளுநர் - தான் ஒழுங்காக பார்க்க வேண்டிய வேலை எதையும் பார்க்காமல் - இப்படி ஆகாத காரியங்களில் மூக்கை நுழைத்து மூக்கறு படுவது அவருக்கு வழக்கமாக இருக்கிறது.
செந்தில் பாலாஜி விவகாரத்தைக் கூட அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். ஆனால், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை எத்தனை நாட்கள் ஊறுகாய்ப்பானையில் போட்டு ஊற வைப்பது போல கிண்டி மாளிகையில் போட்டு மூடி வைத்திருந்தார் ஆர்.என்.ரவி. அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மி நடத்தும் கம்பெனிகளை அவர் அழைத்துப் பேசியது சமூக ஊடகங்களில் வெளியா னது. மகா யோக்கியர் இதுவரை அதற்கு ஏதாவது பதில் அளித்துள்ளாரா என்றால் இல்லை. தினந்தோறும் யாருக்காவது அறிவுரை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததால் இடைப்பட்ட காலத்தில் 40 பேர் தற் கொலை செய்து கொண்டார்கள். இது ஆளுநரின் பிடிவாதத்துக்கு கிடைத்த பலிகள் ஆகும். இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது யார்? நீட் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?
13 க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இதுவரை அனுமதி தராமல் அவரது மேஜையில் கிடக்கிறது. அதில் கையெழுத்துப் போட வேண்டியது தான் அவரது வேலைகள் ஆகும். அந்த வேலையைப் பார்க்காமல், வேதாந்தம் பேசிக் கொண்டு இருக்கிறார். சனாதனம் பற்றி பேசுவதுதான் அவருக்கு விருப்பமானதாக இருந்தால் - சனாதன வகுப்புகளை எடுக்கப் போகலாமே? எதற்காக கவர்னராக இருந்து கொண்டு கழுத்தறுக்கிறார்?!
தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் திருக்குறளை கேவலப்படுத்துவது - தமிழைப் பழிப்பது - வள்ளலாருக்கு தவறான பொருள் சொல்வது என்று தமிழ்நாட்டை கொச்சைப்படுத்துவதையே தொழிலாக வைத்துள்ளார். தமிழ்நாடு என்று சொல்லாதே - தமிழகம் என்று சொல் என்றார். இவருக்கு என்ன வந்தது? தமிழ்நாடு என்று சொன்னால் இவருக்கு வலிக்கிறதா? வலிக்கிறது என்றால் எதற்காக தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்? வேறு மாநிலத்துக்குப் போக வேண்டியதுதானே?
தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மற்ற மாநில விழாக்களை நடத்து வதன் மூலமாகத் தான் ஏதோ இந்தியாவின் ஜனாதிபதியைப் போல நினைத்துக் கொள்கிறார்.
வளர்ந்த தமிழ்நாட்டுக்கு முதலீடு வராது என்று சொல்வதும் - குழந் தைத் திருமணத்தை ஆதரித்துப் பேசுவதும் - தன் மனைவியே சிறுமி யாக இருந்த போது திருமணம் செய்து கொண்டவர்தான் என்பதும் - ஆளுநர் என்ற பதவி வகிக்க இவர் லாயக்கு இல்லாதவர் என்பதையே காட்டுகிறது. மனப்பக்குவமோ - அறிவுத்திறனோ - சமூகச் சிந்தனையோ இல்லாதவர் என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய ஒரு மனிதரை தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே தமிழ் நாட்டு மக்களின் கோரிக்கை ஆகும்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்ற ஆளுநரின் பத்திரிக்கைச் செய்தியானது, பொதுமேடைகளில் ஆளுநர் உதிர்த்து வரும் எத்தனையோ அபத்தச் செய்கைகளில் இதுவும் ஒன்றா கவே கருத வேண்டி உள்ளது. இது ஏதோ அரசியல் ரீதியான நிலைப்பாடு அல்ல, சட்டரீதியான நிலைப்பாடும் இதுதான் என்பதை இந்தியாவே ஒப்புக் கொண்டுள்ளது.
ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கடிதம் எழுதினார்களோ, அதையே இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர்களும் வழிமொழிந்துள்ளார்கள். இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடுகளும் தலையங்கமாகத் தீட்டி இருக்கின்றன.
- தொடரும்