முரசொலி தலையங்கம்

காஷ்மீரை போல பிற மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை நீக்கத் தைரியம் இருக்கிறதா? -மோடிக்கு முரசொலி கேள்வி !

''இந்த நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது" என்று கொந்தளித்து இருக்கும் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலளித்துள்ளது.

காஷ்மீரை போல பிற மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை நீக்கத் தைரியம் இருக்கிறதா? -மோடிக்கு முரசொலி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (01-07-2023)

நீக்குவதற்கு தைரியம் இருக்கிறதா? ............

''இந்த நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது" என்று கொந்தளித்து இருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. இதுவே இவருக்கு இப்போதுதான் தெரியுமா? இவர் அரசியலுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? எத்தனை ஆண்டுகள் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார்? பிரதமர் பதவியில் ஒன்பது ஆண்டுகள் இருந்துவிட்டாரே? அவருக்கு இப்போதுதான் தெரிகிறதா, இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருப்பது?!

இந்த நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் அல்ல; விதவிதமான சட்டங்கள் இருக்கின்றன. ஏனென்றால், இது பல்வேறு இனம் –- மொழி- – சமய -– மக்கள் வாழும் நாடு. பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களும், பண்பாட்டு விழுமியங்களும் கொண்ட நாடு இது. இங்கு சில சிறப்புக் கவனங்கள் சிலவற்றுக்குச் செய்து ஆகத்தான் வேண்டும். அந்த வகையில் சில சட்டங்கள் இருக்கின்றன. இது சிறப்பாக ஆட்சி நடத்துவதற்கு அவருக்குத் தடையாக இருக்கிறதா? நாட்டின் வளர்ச்சிக்கும் - – பொருளாதார வளர்ச்சிக்கும் இங்கே இருக்கும் திருமணச் சட்டம் தடையாக இருக்கிறதா? 'ஆடத் தெரியாதவர், தெரு கோணலாக இருக்கிறது' என்றாராம். அது போல இருக்கிறது பிரதமரின் கூற்று.

‘சட்டம் அனைவருக்கும் பொது’ என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்தியாக வேண்டும். ஏனென்றால், பல்வேறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சிறப்புரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது. ஏதோ காஷ்மீருக்கு மட்டும் கொடுத்ததைப் போல, அதனை மட்டும் திரும்பப் பெற்றது பா.ஜ.க. அரசு. காஷ்மீரைப் போலவே சிறப்புரிமை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இருக்கிறது. ‘காஷ்மீருக்கு தனிச் சட்டமா’ என்று கேட்டு, நீக்கியவர்களுக்கு, மற்ற மாநிலச் சிறப்புச் சட்டங்கள் மீது கை வைக்கத் தைரியம் இல்லை. இப்போது, 'இரண்டு சட்டமா இந்த நாட்டில்?' என்று கேட்கும் பிரதமருக்கும் கிடையாது!

காஷ்மீரை போல பிற மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை நீக்கத் தைரியம் இருக்கிறதா? -மோடிக்கு முரசொலி கேள்வி !

இந்திய அரசியலமைப்பின் 371 ஆவது பிரிவின் கீழ் பல்வேறு இந்திய யூனியன் மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் xxi மற்றும் xxii பாகங்களில் காணக்கூடிய இந்திய அரசியலமைப்பின் பிரிவு 371 ஆவது பிரிவானது, நாட்டுக்குள் சில மாநிலங்களுக்கு பல தற்காலிகம், இடைநிலை மற்றும் விதிவிலக்கான விதிகளை வழங்குகிறது. இச்சட்டமானது குஜராத், மகாராஷ்டிரா, நாகாலாந்து, மிசோரம், அசாம், ஆந்திரப்பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 371 A முதல் 371 J வரையிலான பிரிவுகளாக அமைந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது என்றால்... 'இந்த மாநிலங்களின் வளர்ச்சியடையாத பகுதிகளில் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் பொருளாதார மற்றும் பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பது, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்ப்பது, அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பது' என்றே சொல்லப்படுகிறது. அதாவது அந்தந்த மாநிலங்களுக்காக சிறப்பாக உருவாக்கப் பட்ட சட்டப்பிரிவுகள் இவை.

காஷ்மீரை போல பிற மாநிலங்களின் சிறப்பு சட்டங்களை நீக்கத் தைரியம் இருக்கிறதா? -மோடிக்கு முரசொலி கேள்வி !

* 371வது பிரிவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விதர்பா, மராத்வாடா, கட்ச் உள்ளிட்ட மராத்திய மொழி பேசும் பகுதிகளில் சமச்சீரற்ற வளர்ச்சியை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

* 371 ஏ –- நாகாலாந்து தொடர்பான சிறப்பு விதிகள் செய்து தரப்பட்டுள்ளது. நாகர்களின் மதம் அல்லது சமூக நடைமுறைகள், பாரம்பர்யங்கள், மரபுகள் ஆகியவற்றை வைத்து சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகங்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.

* 371 பி -– அசாம் மாநிலத்துக்கு சிறப்புரிமை தரப்பட்டுள்ளது. அது பழங்குடியின பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.

* 371 சி -– மணிப்பூருக்கான ஏற்பாடுகள் இப்பிரிவில் உள்ளது.

* 371 டி- – ஆந்திரா, தெலுங்கானா குறித்த பிரிவுகள் இவை. உள்ளூர் மக்களின் கல்வி, வேலை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இது உருவாக்கித் தரப்பட்டது.

* 371 எஃப் –- சிக்கிம் மாநிலத்துக்கான ஏற்பாடுகள்.

* 371 ஜி –- மிசோரம் மாநிலத்துக்கான ஏற்பாடுகள் ஆகும். மிசோரம் மக்களின் மதம் மற்றும் சமூக நடைமுறைகள் தொடர்பாக மிசோரம் மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்டம் அந்த மாநிலத்துக்குப் பொருந்தாது என்று இந்தப் பிரிவு உரிமை வழங்குகிறது. சிவில் மற்றும் குற்றவியல் நிர்வாகம் ஆனது மிசோ மரபுச் சட்டத்தின் முடிவுகளை உள்ளடக்கியே இருக்கிறது.

371 எச் – - அருணாசலப் பிரதேசத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் அடங்கிய பிரிவு இது.

* 371 ஐ - – கோவாவுக்கான ஏற்பாடு.

* 371 ஜே – கர்நாடகாவுக்கான ஏற்பாடு. பின்தங்கிய பகுதிகளை வளர்க்க உரிமை வழங்குகிறது.

- இவை எல்லாம் மாநிலங்களுக்கான தனியாகச் செய்யப்பட்ட சிறப்புச் சட்டங்கள் ஆகும். இதில் கை வைக்கத் தைரியம் உண்டா? 'இரண்டு சட்டங்கள் இருப்பதைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லும் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாதா?

காஷ்மீர் சிறப்பு தகுதிச் சட்டமான 370 நீக்கப்பட்ட போது, இது போல் மற்ற மாநிலங்களுக்கு உள்ள சிறப்பு தகுதிச் சட்டங்களையும் நீக்கி விடுவார்களோ என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நாகாலாந்து ஆளுநராக இருந்தவர், இப்போது இங்கு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி. 'நாகாலாந்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது' என்று அப்போது உறுதி அளித்தார்.

நாகாலாந்தில், மணிப்பூரில் உள்ள சட்டங்களை நீக்குவதற்குத் தைரியம் இருக்கிறதா?

banner

Related Stories

Related Stories