முரசொலி தலையங்கம்

சிலரின் முதுகு சொறிய அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்கும் ஆளுநர்.. முரசொலி காட்டம்!

சனாதனத்துக்கு புதிய பொழிப்புரை சொல்லிக் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். அது அவரது கூட்டத்துக்கு முதுகு சொறியப் பயன்படலாம்.

சிலரின் முதுகு சொறிய அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்கும் ஆளுநர்.. முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-06-2023)

ஆளுநர் ஆட்டம் அடங்கட்டும்! - 1

நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?’ என்று ஒரு பழமொழி உண்டு. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர், தன்னை ஏதோ அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மன்னரைப் போல நினைத்துக் கொள்கிறார்!

ஆளுநர் என்ன வேலையைப் பார்க்க வேண்டுமோ அதைப் பார்க்காமல், அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டு இருக்கிறார். பட்டமளிப்பு விழாக்களை முறையாக நடத்தாமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெற முடியாமல் இருக்கிறார்கள். அதைப் பற்றிய எந்தக் கவலையும் ஆளுநருக்கு இல்லை.

பட்டமளிப்பு விழாக்களை இவர் நடத்தாமல் இருப்பதன் மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி படிக்கவும் விண்ணப்பிக்கவும் தாமதம் ஆகிறது. வெளிநாடுகளில் தமிழ்நாட்டு மாணவ – மாணவியர் வேலை வாய்ப்பைப் பெற முடியவில்லை. பணிகளை நிரந்தரம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. ஆய்வுப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கான ஊதிய உயர்வு தள்ளிப் போகிறது.விசா கிடைப்பது தள்ளிப் போகிறது. 12 பல்கலைக் கழகங்களுக்கு முறையான பட்டமளிப்பு விழாக்களை நடத்தாமல் தினந்தோறும் யாரையோ கூட்டி வைத்துக்கொண்டு வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி. இவரது செயல்படாத தன்மை காரணமாக 9.25 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிலரின் முதுகு சொறிய அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்கும் ஆளுநர்.. முரசொலி காட்டம்!

‘அரசுப் பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநரே முழுப்பொறுப்பு’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பகிரங்கரமாக குற்றம் சாட்டி இருந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்களை வைத்துத்தான் பட்ட மளிப்பு விழாக்கள் நடைபெறும், ஆனால் இப்போதைய ஆளுநர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து வருகிறார், அவர்களிடம் தேதி வாங்க காத்திருப்பதால்தான் இந்த தாமதம் என்றும் அமைச்சர் பொன்முடி சொல்லி இருந்தார். ஆளுநரின் இந்தச் செயல்பாட்டை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் இயக்கங்களின் மாணவர் அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன.

தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்தும் காலதாமதம் செய்தும் வருகிறார் ஆளுநர் என்று மாணவர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசியல் அமைப்புச் சட்டங்களின் விதிகளுக்குப் புறம்பாகவும் ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. துணைவேந்தர்களை நியமிக்காமல் இழுத்தடித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை முடக்குவது ஆகும். இதனால் தான் தமிழ்நாடு பல்கலைக் கழக வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன் வடிவுகள் கொண்டு வரப்பட்டன. அதற்கும் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

இவை எல்லாம் அவர் பார்க்க வேண்டிய வேலைகள். அதைப் பார்க்கவில்லை. ஆனால் சனாதனத்துக்கு புதிய பொழிப்புரை சொல்லிக் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். அது அவரது கூட்டத்துக்கு முதுகு சொறியப் பயன்படலாம்.

ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. காலாவதியானது சனாதனம். அது போல ஆளுநரின் உரையும் காலாவதி ஆகும். ஆனால் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிட்டு அடுத்த குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் ஆளுநர். அமைச்சர்களை நியமிப்பது - நீக்குவது ஆகியவை முதலமைச்சரின் அதிகாரம் ஆகும். யாரையும் அவர் நியமிக்கலாம். நீக்கலாம். அதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி நியமிக்க - நீக்க என்ன காரணம் என்பதை முதலமைச்சர் அவர்கள் சொல்லத் தேவையில்லை. அது அவரது விருப்பம் சார்ந்த தேர்வு ஆகும். விருப்பம் சார்ந்த நிராகரிப்பும் ஆகும். ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்கியாக வேண்டும், அவர் மீது வழக்கு இருக்கிறது என்று கடிதம் அனுப்புகிறார் ஆளுநர். ‘வழக்கு இருப்பதற்காக நீக்க வேண்டுமானால் ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்கு இருக்கிறது. அவர்கள் எப்படி தொடருகிறார்கள்?’ என்பது முதலமைச்சர் எழுப்பும் கேள்வி ஆகும். அதற்கு எந்தப் பதிலும் இல்லை ஆளுநரிடம் இருந்து.

சிலரின் முதுகு சொறிய அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்கும் ஆளுநர்.. முரசொலி காட்டம்!

செந்தில்பாலாஜி வகித்த துறைகள் இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து தரப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்கிறார் ஆளுநர். இந்த கோரிக்கையில் இருந்த வார்த்தையை வைத்து நிராகரிக்கிறார். இரண்டு அமைச்சர்களுக்கு துறையை பிரித்துத் தருவது முதலமைச்சரின் விருப்புரிமை ஆகும். இதில் தலையிட ஆளுநருக்கு என்ன அதிகாரம்? முதலமைச்சர் சொன்ன வார்த்தை சரியில்லை, முதலமைச்சர் அனுப்பிய லெட்டர் பேட் கலர் சரியில்லை என்பது மாதிரி சொல்வதெல்லாம் ஒரு காரணமா?

குஜராத் மாநில ஆளுநருக்கு எதிராக ஒரு காலத்தில் போர்க்கொடி தூக்கியவர்தான் இன்றைய பிரதமர் மோடி அவர்கள். அவர் அப்போது குஜராத் முதமைச்சராக இருந்தார். ‘’உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் குஜராத் மாநில பெண் ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். பெண்களுக்கு எதிரியாகப் பெண் ஆளுநரே இருக்கிறார். ஒரு பெண்மணி குஜராத்தின் ஆளுநராக இருந்தும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது நமது துரதிருஷ்டமே’’ - என்று 2013 ஏப்ரல் 8-ம் தேதி .டெல்லியில் நடந்த இந்தியத் தொழிலக சம்மேளனத்தின் (FICCI) கூட்டத்தில் பேசினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி.

2009-ம் ஆண்டு குஜராத் மாநில ஆளுநராகக் கமலா பெனிவால் நியமிக்கப்பட்டதில் இருந்து 2014 வரையில் அன்றைய குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு பிரச்சினையும் மோதலும் இருந்து கொண்டே இருந்தது. இதேபோல் இன்னொரு பிரச்சினையிலும் மோதல் வெடித்தது.

- தொடரும்.

banner

Related Stories

Related Stories