பாட்னா பயமா ?
முரசொலி தலையங்கம் (17.6.2023)
Don’t Create Atmosphere of Fear - என்பது அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சொன்ன அறிவுரை ஆகும். அதாவது ‘அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ என்பது ஆகும். அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே அந்த அமலாக்கத்துறை பா.ஜ.க.வால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான் இந்தியா முழுமைக்கும் நாம் காணும் காட்சிகள் ஆகும். பத்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புகாரை வைத்து – இப்போது விசாரணைக்கு வந்து - ஒரே நாளில் 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்து - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையை எதற்காக உருவாக்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது? அமைச்சராக இருக்கிறவர் ஓடிப் போகப் போகிறாரா? லலித் மோடி – நீரவ் மோடிகளைப் போல ஓடிப் போகப் போகிறாரா? வருமானவரித் துறையை வைத்து பத்து நாட்களாக கரூரில் சோதனை நடத்துவதும் - அடுத்து அமலாக்கத்துறை வருவதும் - 18 மணி நேரம் சித்திரவதை செய்வதும் -மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரை தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் அனுப்பி வைப்பதும் - இதய நோயால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக சிறைக்குக் கொண்டுபோகத் துடிப்பதும் –- வழக்கு விசாரணைகள் போலத் தெரியவில்லை. அச்சம் ஏற்படுத்த நினைக்கும் வழிமுறைகளாகவே உள்ளன. இதனைத்தான் உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறைக்கு உணர்த்தியது.
இதுவரை அமலாக்கத்துறை யார் மீதெல்லாம் பாய்ந்துள்ளது? காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பிஜூ ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சி.பி.எம், டி.ஆர்.எஸ்.- – ஆகிய கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர் மீதுதான் பாய்ந்துள்ளது. 2004–-14 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 112 ரெய்டுகள் நடந்துள்ளன என்றால், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் 3 ஆயிரத்து பத்து ரெய்டுகள் நடந்துள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துவதைப் போல ரெய்டுகள் நடத்தி இருக்கிறார்கள். இதற்குத்தான் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
அதுவும் பட்டவர்த்தனமாக – ஒளிவுமறைவு இல்லாமல் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவரும் தற்போதைய துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் - ஆம் ஆத்மியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயின், மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் - இவர்களை திட்டமிட்டு கைது செய்து அடைத்தார்கள். “எங்களுக்கு எதிராக இருக்காதே - அல்லது எங்களோடு சேர்ந்து விடு” என்பதுதான் இந்த கைதுக்கான ஒற்றைக் காரணம் ஆகும்.ரெய்டிலும் கைது நடவடிக்கையிலும் சிக்கி - பா.ஜ.க.வில் தஞ்சம் புகுந்து - இப்போது புனிதர்களாக ஆகிவிட்ட பலபேரின் பட்டியலை சசிதரூர் வெளியிட்டு இருக்கிறார்.
« 300 கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே, பா.ஜ.க.வில் சேர்ந்ததும் விசாரணை நிறுத்தப்படுகிறது.
« நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்.
« லஞ்ச வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்.
« அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர் பிரதாப் சர்னாய் மீதான வழக்கு மூடப்பட்டது.
« லஞ்ச வழக்கில் லோக் ஆயுக்தாவால் வழக்குப் பதியப்பட்ட எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்டார். -– இதுதான் பா.ஜ.க.வின் கறை படிந்த விசாரணை வரலாறுகள் ஆகும்.
‘‘பா.ஜனதாவில் இணைந்து விட்டால் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்காது” என்று வெளிப்படையாகவே சொன்னார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
சாரதா நிதி நிறுவன முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை சி.பி.ஐ. விசாரித்தது. விசாரிக்க வந்தவர்களையே கைது செய்தார் மேற்கு வங்க முதலமைச்சர். சாரதா நிதி நிறுவன சர்ச்சையில் சிக்கிய ஒருவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து கொண்டார். அவரைக் காப்பாற்றி விட்டது பா.ஜ.க. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘நீங்கள் பா.ஜனதாவில் இணைந்து விட்டால், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை முகமைகளிடம் இருந்து பா.ஜனதா கட்சி பாதுகாக்கும். இதற்காகத்தான் இவை போன்ற அமைப்புகளை வைத்துள்ளார்கள்” என்றார்.
“பா.ஜனதா நேர்மையற்ற வழியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது. சி.பி.ஐ. தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயக விரோதமானது. அரசியலமைப்பு மாண்பிற்கு எதிரானது” என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அப்போது சொன்னார். இதுதான் இந்தியா முழுமைக்கும் நாம் பார்க்கும் காட்சிகளாக இருக்கிறது. பா.ஜ.க. நேர்மையின் சிகரங்கள் என்றால், பழனிசாமி கும்பலோடு கைகோர்த்து நிற்பார்களா? பழனிசாமி தயவில் கட்சி நடத்திக் கொண்டு ஊழலைப் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசலாமா? அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் –- அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி வந்துவிடுமா? பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளின் அணிச்சேர்க்கையானது வருகிற சூன் 23ஆம் நாள் பாட்னாவில் நடக்க இருக்கிறது. அதில் திராவிட முன்னேற்றக் கழகம் முக்கியப் பங்காற்ற இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க.வை அசைத்துப் பார்க்க நினைக்கிறது பா.ஜ.க. அதற்கு செந்தில்பாலாஜி வழக்கு ஒரு துருப்புச் சீட்டு. அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பா.ஜ.க. இருப்பதையே இது காட்டுகிறது!