அமித்ஷாக்கள் அறிக! - 4
தமிழ்நாட்டுக்கு ஏராளமான நிதியை வழங்கி விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இது தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், '' உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பா.ஜ.க.ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போதுகூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அதற்கு பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும் - பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி!" என்று சுட்டிக்காட்டி உள்ளதுதான் மாபெரும் உண்மையாகும்.
இவர்களது திட்ட ஒதுக்கீடுகள் அனைத்தும் எப்படி இருந்துள்ளது என்பதை பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். 26.2.2022 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பிரதமர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும் போது, ''தமிழ்நாடு பலவகையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே. எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் அளிக்கக் கூடிய பங்குக்கு ஏற்ப நிதி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்தளவுக்கு தரப்படுகிறதா என்பதை உள்துறை அமைச்சர்தான் விளக்க வேண்டும்.
ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால் அந்த ஒன்றிய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும்பொழுது, அதே காலகட்டத்தில் உத்தரபிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி உள்ள தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், '' ஏதாவது ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்தால்கூட ஆந்திரா, கர்நாடகா பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டதே தவிர, தமிழ்நாட்டிற்கு என்று பிரத்தியேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத்தையும் அளிக்கவில்லை" என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார். இதற்கு உள்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?
ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும் போது நடக்கும் சில காரியங்களையும் பிரதமர் முன்னிலையில் அப்போது முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
''ஒன்றிய அரசு தனது நிதிப்பங்கை தொடக்கத்தில் அதிகமாக அளித்தாலும், காலப்போக்கில் தனது பங்கினைக் குறைத்து, மாநில அரசு செலவிட வேண்டிய நிதிப் பங்கை உயர்த்தும் நிலையைப் பார்க்கிறோம். ஒன்றிய – மாநில அரசுகளின் பங்களிப்போடு, பயனாளிகளின் பங்கையும் முன்னிறுத்தி, பல திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் அந்தத் தொகையை பயனாளிகள் செலுத்த முடியாதபோது, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிற மாநில அரசுகள்தான் பயனாளிகளின் பங்களிப்பையும், சேர்த்து செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரிக்கிறது" என்று சுட்டிக் காட்டினார் முதலமைச்சர் அவர்கள். அதாவது பல்லாயிரம் கோடி என்று நிதிநிலை அறிக்கையில் சொல்வது, திட்டம் நடைமுறைக்கு வரும் போது இறுதியாக பணத்தைக் குறைத்துவிடுவது. இது ஒருவகையான தந்திரம் ஆகும். இதனைத்தான் செய்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சரால் மறுக்க முடியுமா?
8.4.2023 அன்று பல்லாவரத்தில் நடந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ''சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்கினை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசில் நிலுவையில் உள்ளது" என்றார்.
* சென்னை மாநகரத்திற்குப் பேரிடர் மேலாண்மைக்காக நிதி ஆணையம் பரிந்துரைத்த 500 கோடி ரூபாய் நிதியை இரண்டு ஆண்டுகளாக கொடுக்காத ஆட்சி.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
* தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்திற்கான கோரிக்கையைக் கிடப்பில் கிடக்கிறது.
* ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறார்கள்.
* கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப் பட்ட நிதி 18 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 2023 - 24 ஒரு நிதியாண்டில் மட்டும் உத்தர பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 17,500 கோடி ரூபாய்.
* சென்னை - மதுரவாயல் உயர்மட்டச் சாலை, சென்னை - தாம்பரம் உயர்மட்டச் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிப்படுத்துதல்,
சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழித்தடமாக மேம்படுத்துதல் - போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. இதுதான் தமிழ்நாட்டின் உண்மையான நிலைமை. இதனை முதலில் வாங்கிப் பார்த்து விட்டு உள்துறை அமைச்சர் பேசுவதே சரியானதாக அமைய முடியும்.
'அரசியல் எதிரிகளின் வரலாற்றைப் படியுங்கள்' என்று சொந்தக் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார் உள்துறை அமைச்சர். படியுங்கள். அத்தோடு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களையும் படியுங்கள்!