வதந்திக்குப் பின்னால் இருக்கும் சதி !
அகில இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து - தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றார்கள். இதில் முலாயம் சிங் அவர்களின் மகன் அகிலேஷூம், லாலு பிரசாத் அவர்களின் மகன் தேஜஸ்வீயும் இடம் பெற்று இருந்ததை பா.ஜ.க.வினரால் பொறுக்க முடியவில்லை. ஒருவர் உத்தரப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இன்னொருவர் பீகாரை பிரதிநிதித்துவப்படுத்துபவர்.
இவர்கள் இருவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தது மட்டுமல்ல, அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணிச் சேர்க்கையாகவும் அது அமைந்திருந்தது. ‘’பா.ஜ.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறைகூவல் இந்தியா முழுமைக்கும் ஒலிக்க இந்தக் கூட்டமானது அடித்தளம் அமைத்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அகிலேஷூம், தேஜஸ்வீயும் முதலமைச்சரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்கள். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான அவரது முயற்சிகள் அனைத்தையும் வரவேற்பதாக உ.பி.யின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சொன்னார். பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய தேஜஸ்வீ பேசும் போது, ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது’ என்று சொன்னார். பீகார் மக்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.
மார்ச் - 1 அன்றுதான் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களின் பிறந்தநாள் என்றும் சொல்லி, ‘எங்கள் முதலமைச்சர் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சொன்னார்’ என்றார் தேஜஸ்வீ. இவற்றை பா.ஜ.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கச் செய்த சதிச்செயல் தான், ‘தமிழ்நாட்டில் வடமாநிலத்தைக் கொல்கிறார்கள்’ என்ற வதந்தியாகும்.
இந்த வதந்தி பரப்பப்பட்டதன் உள்நோக்கம் என்பது, அகில இந்திய ரீதியாக ஒரு அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் தான். பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் என்பது இந்தியா முழுமைக்கும் ஓரணியாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான்.
தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் முதன்முதலாகச் செய்தி பரப்பியவர் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ். இவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் செய்திக்கு மிகப்பெரிய சதிப் பின்னணி இருக்கிறது என்பதை பிரசாந்த் உமாராவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு பயன்படுத்திய புகைப்படமே காட்டிக் கொடுத்துவிட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ அவர்களும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் போட்டு இந்த செய்தியை போட்டுள்ளார் பிரசாந்த் உமாராவ். அதுவும் இப்போது எடுக்கப்பட்ட புகைப்பட மல்ல. கடந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவில்தான் தேஜஸ்வீக்கு நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். அந்தப் படத்தைத் தேடிப்பிடித்து போட்டு, இந்திக்காரர்களைக் கொல்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டதில் தான் இவர்களது அரசியல் உள்நோக்கம் அம்பலப்பட்டு நிற்கிறது.
‘தைனிக் ஜாக்ரண்’ என்ற நாளிதழ் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வருகிறது. அதில், ‘தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளிகளை கொல்வது நடந்து கொண்டு உள்ளது’ என்றும், ‘மார்ச் 20க்கு முன்பாக இந்திக்காரர்கள் வெளியேற வேண்டுமென தமிழ்க்காரர்கள் சொல்கிறார்கள்’ என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்திக்கான ஆதாரமாக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.
‘இந்திக்காரர்கள் இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று முதலமைச்சர் சொன்னதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. எங்கே, எப்போது, இப்படிச் சொன்னார் முதலமைச்சர்? ஆதாரம் இருக்கிறதா? இந்த செய்திக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பதன் ஆதாரம், அந்த செய்தியிலேயே இருக்கிறது. ‘எத்தனை இந்தி தொழிலாளிகள் இருக்கிறீர்களோ சீக்கிரம் நம்முடைய மாநிலத்திற்கு திரும்பி வந்துவிடுங்கள். உ.பி.யில் உங்களுக்கு வேலை நிச்சயமாகக் கிடைக்கும்’ என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொன்னதாக அந்தப் பத்திரிக்கை எழுதி இருக்கிறது. உ.பி.முதலமைச்சர் அப்படிச் சொன்னதாக அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. ஆனால் இவர்கள் அப்படிச் சொன்னதாகச் சொல்லி பரபரப்பை உற்பத்தி செய்கிறார்கள்.
இதேபோல் பீகாரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், வேறு ஒரு மாநிலத்தில் இரண்டு பேர் இந்தியில் சண்டை போட்டுக் கொள்வதை எடுத்துப் போட்டு தமிழ்நாட்டில் நடப்பதாக செய்தி பரப்பினார்.
இவர்கள் யாருக்கும் தெரியாது, வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதுகாப்பாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று. கொரோனா காலத்தில் வடமாநிலங்களில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு தொழிலாளிகள் நடந்து போன காட்சியை நாம் பார்த்தோம்.
ஆனால் அவர்களுக்காக தனியாக முகாம் அமைத்த மாநிலம் தமிழ்நாடு. குடும்ப அட்டை இல்லாத, வேலைகள் இல்லாத 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. முதல் அலையின் போதும் தரப்பட்டது. இரண்டாவது அலையின் போதும் தரப்பட்டது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தரப்பட்டது. இவர்கள் தங்க வைக்கப்பட்ட முகாமுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். தாயுள்ளத்தோடு தமிழ்நாடு நடந்து கொள்கிறது. இந்த தாயுள்ளம் எந்த மாநில பா.ஜ.க.வுக்கும் புரியாது.
கொரோனா காலத்தில் என்ன நடந்தது உ.பி.யில்?
உத்தரப்பிரதேசம் ஷாம்லியில் உள்ள காந்தலா சமூக சுகாதார மையத்தில் சரோஜ், அனார்கலி, சத்தியாவதி ஆகிய வயதான மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதில் ஒரு பெண்ணுக்கு திடீரென உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இதுதான் உ.பி. பா.ஜ.க. ஆட்சி.
உத்திரப்பிரதேச அரசின் அலட்சியம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரபிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள் டெங்குக்காக இறந்துவிடுவர் எனவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. இதுதான் உ.பி. பா.ஜ.க. ஆட்சி.
தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாக, அமைதியாக வாழ்கிறார்கள். அந்த அமைதியைக் குலைக்கும் காரியத்தை எவர் செய்தாலும் அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.