ஒரே நாசம் - ஒரே மோசம்!
பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ‘ஒரே’தான்! எதற்கெடுத்தாலும் ‘ஒரே’ சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு!
ஒரே மதம்
ஒரே மொழி
ஒரே உணவு
ஒரே கலாச்சாரம்
ஒரே தேர்வு
ஒரே தேர்தல்
ஒரே வரி
ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது ‘ஒரே’ மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது.
‘நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்’ என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்?
பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? ஐந்து ஆண்டுகள் கழித்து, நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை, பா.ஜ.க.வின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா?
குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலையே இரண்டு கட்டங்களாகத்தான் நடத்தினார்கள். ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. ஒருமாநில சட்டமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத நாட்டில்தான் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் - நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தப் போகிறார்களாம்!
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறதே? அதனையும் நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே? பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறதே? இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா?
இவர்களுக்கு தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது என்ற அறிவே இல்லை. தேர்தல் என்பது மக்களுக்காக நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படவில்லை. மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளைச் செலுத்துவதன் மூலமாக - அதன் அடையாளங்களாக உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறார்கள்.
மக்களின் ஒற்றை வாக்குதான் அரசை வழிநடத்துகிறது என்பதைவிட, அந்த ஒற்றை வாக்கின் அடித்தளத்தில் ஆட்சியானது நிற்கிறது. இதுதான் தேர்தல் ஆகும். தேர்தலை ‘மக்களாட்சி’யின் மகத்துவமாகப் பார்க்காமல், ‘செலவாக’ப் பார்க்கும் எண்ணமே தவறானது ஆகும். அதனால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது, நடைமுறை சாத்தியமற்றது’ என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த முதலமைச்சரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்தில் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த கடிதத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நடைமுறை சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பரிந்துரைக்கக்கூடாது’ என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
6, 7, 9, 11, 12, 15 - ஆகிய நாடாளுமன்ற மக்களவையானது முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். மக்களவையாக இருந்தாலும், சட்டமன்றப் பேரவையாக இருந்தாலும் அதன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள். அதனை முன்கூட்டியே கலைக்க முடியாது என்பதையும் முதலமைச்சர் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அரசியல் சட்டமானது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும். சட்டப்பிரிவு 172 மற்றும் பிரிவு 83 ஆகியவை நாடாளுமன்றத்தின் கால அளவைக் குறிக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு இது விரோதமானது. இவை மக்களாட்சித் தத்துவத்துக்கு விரோதமானதாக அமையும். தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமானது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்றதும் அல்ல. ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக் காலமானது அதிகரிக்கப்பட வேண்டும், அல்லது குறைக்கப்பட வேண்டும். இதன் மூலமாக மாநிலங்களில் குழப்பமே ஏற்படும்.
இரண்டு தேர்தல்களின் தன்மையும் வேறுவேறு. தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவது நாடாளுமன்றத் தேர்தல். மாநில நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டியது சட்டமன்றத் தேர்தல். இரண்டையும் குழப்பிக் கொள்ள முடியாது. எல்லாம் தேர்வு தானே என்று அறிவியல் தேர்வையும், கணக்கையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்ல முடியுமா? நேரமும், பணமும் மிச்சம் ஆகுமே?!
“ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், சீட்டு வழங்கும் இயந்திரங்களிலும் பற்றாக்குறை ஏற்படும்” என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ஒரு முறை கூறினார். இந்தியா முழுமைக்குமான பாதுகாப்பு என்பதே சாத்தியமில்லை. பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து படைவீரர்கள் இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வெளிமாநிலம் செல்கிறார்கள். அதனால்தான் இரண்டு மூன்று கட்டங்களாக மாநிலத் தேர்தலே நடத்தப்படுகிறது. இவை எதுவும் தெரியாமல் செய்யப்படும் உளறல்தான் ‘ஒரே தேர்தல்’ ஆகும்.
ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூட துப்பு இல்லாத பழனிசாமிதான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம், சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும்!