அரசியல்

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!

சமூகநீதியைக் குழிபறிக்கும் ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்! ஒன்றுபடுவீர்! என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உச்ச மட்ட அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள் 79 விழுக்காடு நீதிபதி பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கு முடிவு காணப்படவேண்டும் என்றும், சமூகநீதிக்கு எதிரான மோடி தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்ட இந்திய அளவில் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றும் - இதில் தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

"நீதித்துறையை முழுக்க முழுக்க காவிமயமாக்கிட துடியாய்த் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸின் அரசியல் அங்கமான பா.ஜ.க. ஒன்றிய அரசு! நிர்வாகம் (Excutive) - நாடாளுமன்றம், சட்டமன்றம் - என்ற பிரிவுகள், நீதித்துறை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் முதலிய மூன்று பிரிவுகளை நமது அரசமைப்புச் சட்டக் கர்த்தாக்கள் அதில் உருவாக்கி வைத்திருப்பதற்குக் காரணமே ஆட்சிப் பகிர்வு மாத்திரம் அல்ல. இம்மூன்றும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவும்தான் நீதிமன்றங்களின் கடமை

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!
துரை .வேலுமணி

இதில் நீதித் துறை (Judiciary) என்பது, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள முக்கிய கடமையைச் செய்யவேண்டியதும் குடிமக்களின் கடைசி நம்பிக்கையுமாகும். மற்ற இரண்டு துறைகளின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தி, ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பும், கடமையும் கொண்ட துறையுமாகும்.ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்று கருதப்படும் இவற்றைத் தாண்டி நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுவது ஊடகங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதலியன!

இந்த மூன்று துறைகளையும் கண்காணிக்கும் ‘இறுதி அதிகாரம்‘ - ‘இறையாண்மை’, அதனை உருவாக்கி ‘தமக்குத் தாமே’ வழங்கிக் கொண்டிருக்கும் நாட்டு குடிமக்களிடமே (‘’We the People....’’) உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக (இரு முறை - ‘‘ரோடுரோலர் மெஜாரிட்டி’’ அமைந்த பின்பு) நடைபெறும் ஆட்சி, நாடாளுமன்றம் ஏதோ பெயரளவில் நடந்து, விரிவான விவாதங்களுக்கே இடம் தராது, அரசமைப்புச் சட்டத் திருத்தம் உள்பட பலவும் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்படும் விசித்திரம்தான் சாட்சியாக உள்ளது!

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!

தானடித்த மூப்பாக செயல்படும் மோடி அரசு ஆட்சி, அதிகாரத்தால் ‘தானடித்த மூப்பாகவே’ முடிவுகளை எடுத்தல், அதிகார வர்க்கத்தில்கூட வெளியே தனியார்களை அழைத்து வந்து, அதிகாரிகளாக இடைச்சொருகி அதிகாரத்தைப் பறித்திடும் அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு முரணான நிலை! தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் எப்படி சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் நடக்கிறது என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. அதற்கு சரியான பதிலே கிடையாது! எதிர்க்கட்சியினை அழிக்க ஏவி விடப்படும் ‘அஸ்திவாரங்களாகவே’ வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.அய்.,’ போன்ற சுதந்திரமாக இயங்கவேண்டியவை சாய்ந்த தராசாகும் கொடுமை!

ஆளுநர்களைப் பயன்படுத்திபோட்டி அரசாங்கம் நடக்கிறது எந்த மாநிலங்களில் எல்லாம் தங்களால் தேர்தல் வெற்றிகளைப் பெற்று, மக்களின் உண்மை ஆதரவினைப் பெற முடியவில்லையோ அந்த எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்கள் (கவர்னர்கள்)மூலம் தடுப்பணைகளைக் கட்டுவது, போட்டி அரசாங்கத்தை நடக்க வைத்து, மக்களாட்சியின் மாண்புகளைக் குலைத்திடும் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடைபெறுகிறது.

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!

இதில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் தேங்கியுள்ள வழக்குகளோ கொஞ்ச நஞ்சமல்ல. நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளை ஏற்காமல், தாங்கள் விரும்புகின்றவர்களை நியமனம் செய்ய, உச்சநீதிமன்ற கொலீஜிய நீதிபதிகளில், குறிப்பிட்டவர் ஓய்வுபெறும் வரையில், காத்திருந்து, கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மறுப்பது, தமது அரசு வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) தேங்கியிருக்கும் பல லட்சம் வழக்குகளை விசாரிக்க இப்படி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் - கிடப்பில் போடுவதுபற்றி நீதிபதிகள் பகிரங்கமாக நீதிமன்றத்தில் கடுமையான குரலில் தெரிவித்தப் பின், மூன்று நாள்களில் ஒப்புதல் வரும் என்று கூறியது என்ன ஆனது? நீர்மேல் எழுத்தாகியது!

உச்சநீதிமன்றத்தையும் - உயர்நீதிமன்றங்களையும் காவி மயமாக்குவதா?அதைவிடக் கொடுமை, நீதிபதி நியமனங்களில் எங்களுக்கும் பங்கு வேண்டும் - எங்கள் பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்று ஒன்றிய சட்ட அமைச்சர் பகிரங்கமாகவே கேட்கிறார்! அதில்கூட நீதிபதி நியமனத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு மாநில அரசு பிரதிநிதியாம்! என்னே பிரிவினை விசித்திரம்? வேடிக்கையாக இல்லையா? உச்சநீதிமன்ற நியமன உரிமை, மாநில அரசுக்குக் கிடையாதா?அதாவது உச்சநீதிமன்றத்தையும், உயர்நீதிமன்றத்தையும் காவி மயமாக்கிட (Saffronisation) இது வழிவகுக்காதா?

"ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்" -தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை!

முந்தைய நெருக்கடி நிலை காலத்தில் ‘Committed Judges’ குறிப்பிட்ட கொள்கை உடைய நீதிபதிகளையே நியமிப்பதை எதிர்த்து நாடே திரண்டபோது ஓங்கிக் குரல் எழுப்பியவர்களே, இன்று தங்களது கொள்கையைப் புகுத்திட, பணி மூப்பினை - வரிசை - சீனியாரிட்டிபற்றிக்கூட கவலைப்படாது, கீழே உள்ளவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாகக் கொண்டுவர முயற்சிக்கலாமா? 79 சதவிகித நீதிபதிகள் உயர்ஜாதியினருக்கே என்னும் கொடுமை! சமூகநீதி அறவே குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. எஸ்.டி., 1.5 சதவிகிதம், எஸ்.சி., 2.5 சதவிகிதம், 79 சதவிகிதம் உயர்ஜாதி என்ற பச்சை சமூக அநீதி நடைபெற்றது - பல ஆர்.எஸ்.எஸ். உணர்வாளர்களையே உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக முன்பே தேர்வு செய்து, பச்சையாக தங்களது பழைய உணர்வுகளை செயல் வடிவத்தில் - தீர்ப்புகளாக வடித்தெடுக்கும்போக்கு மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி, நீதித் துறையின் மாண்பும், நம்பிக்கையும் காணாமற் போகச் செய்யும் வேதனையே நீடிக்கிறது!

முன்பு இலைமறை, காய் மறையாக இருந்த நிலையை மாற்றி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்று ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணித்து - நாட்டின் பன்முகத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் வேலை விரைந்து நடக்கிறது. அதற்கு ஒரு முத்திரை குத்தவே 2024 பொதுத் தேர்தலில் எல்லாவித அஸ்திரங்களையும் ஏவுவதற்கு வேகமாக - கார்ப்பரேட் பெருமுதலாளிகள் பண பலத்துடனும், பத்திரிகை பலத்துடனும் முழு மூச்சாய் தயாராகின்றனர்.

தலைவர்கள் ஒன்றுபடவேண்டும்! வேண்டும்!! அதனால், பொதுமக்களும், சித்தாந்த அறிவாளி நோபல்பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் போன்றவர்களும் பொங்கி எழுந்து, ‘‘இந்த ஆர்.எஸ்.எஸ்., மோடி அரசு நாட்டில் அச்சத்தை விதைக்கும் அரசாக அரசாக உள்ளது. மாநிலக் கட்சிகள் தங்களது தன்முனைப்பைத் தள்ளி வைத்து, தேசம் காப்பாற்றப்பட ஒன்றுபடவேண்டும். குறிப்பாக தி.மு.க.வுக்குப் பெரும்பங்கு உள்ளது’’ என்று கூறியிருப்பது மணிவாசகம் அல்லவா? தலைவர்களே நல்ல சமயம் நழுவவிடாதீர்கள்! ஒன்றுபடுங்கள்! ஒன்றுபடுங்கள்!! ஒன்றுபடுங்கள்!!!

banner

Related Stories

Related Stories