நிர்மலா சீதாராமனுக்கு நிதானம் தேவை !
ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலில் தேவை நிதானம்தான். நிதியைக்கூட அப்புறமாகத் தேடிக் கொள்ளலாம். அவர் முதலில் நிதானத்துக்கு வந்தால்தான் ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதி நிலைமை தெரியுமே தவிர, நிதானம் இல்லாமல் -ஆத்திரம் அடைந்தவராகக் காணப்பட்டால் உண்மை நிலையை உணர முடியாது.
எதிர்க்கட்சிகள்-, குறிப்பாக; தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக பேசாமல் இருக்க முடியுமா?
‘வலுவான நிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது’ என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதற்கு என்ன காரணம் சொல்கிறார் என்றால், ஜி.எஸ்.டி. வரி வசூல் சிறப்பாக இருக்கிறது என்கிறார். மக்கள் ஒழுங்காக வரி கட்டுகிறார்கள் என்றால், மக்கள் உங்களைச் சகித்துக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தமேதவிர – இந்தியப் பொருளாதாரம் சீராக இருக்கிறது என்று அர்த்தம் அல்ல.
‘நீட்’ தேர்வை அதிகம் பேர் எழுதுகிறார்கள் என்பதற்காக - அனைவரும் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா என்ன?
இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை என்பது வேறு; மக்கள் வரி கட்டுகிறார்கள் என்பது வேறு. தமிழ்நாட்டில் அதிகம் ஜி.எஸ்.டி. தொகை வசூலித்து விட்டார்களாம். இதன்மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள்? தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் அனைவரும் ஜி.எஸ்.டி. தொகையை ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருளா?
சில நாட்களுக்கு முன்னால் தமிழகத்தில் உள்ள அரிசி ஆலை அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் மீதான 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அறிவிப்புக்கு எதிராகத்தான் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
‘’ஒன்றிய அரசு சாமானிய மக்களைப் பாதிக்கும் விதத்தில் உணவுப் பொருள்கள் மீது ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி இருக்கிறது. இதனால் அரிசி விலை 3 முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும். இதனால் பொதுமக்களும் பாதிப்படைவார்கள், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்” என்று அரிசி ஆலை அதிபர்கள் சொன்னார்கள்.
இது தமிழ்நாட்டில் மட்டும் நடந்த ஸ்டிரைக் அல்ல; ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு, கேரளாவில் மட்டுமல்ல; பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, உ.பி.போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது.
“பேக்” செய்யப்பட்ட தயிர், கோதுமை மாவு, பிற தானியங்கள், தேன், பப்பாளி, உணவு தானியங்கள் போன்ற அனைத்து உணவுப் பொருள்களின் மீதும் வரியை உயர்த்திவிட்டார் நிர்மலா சீதாராமன். ‘ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்?’ என்று கனிமொழி கருணாநிதியைப் பார்த்துக் கேட்கும் நிர்மலாதான், நிதானம் இல்லாமல் இப்படி வரிகளை உயர்த்தினார்.
நாடு முழுவதும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அரிசி விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
(தமிழ்நாடு அதிகளவில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலம் என்பதால் இங்கு அதிகரிக்கவில்லை. இங்கே சீரான ரேசன் முறையும், இலவச அரிசியும் கிடைக்கிறது. பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தி அதிகமாகி உள்ளது. அதனால் விலை உயரவில்லை.) அரிசியை அதிகளவு பிற மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கும் மாநிலங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை நிர்மலா சீதாராமன் நிதானமாக அறிய வேண்டும்.
இதைக் கேட்டால், இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு என்கிறார் நிர்மலா சீதாராமன். அவரை நிதி அமைச்சராக ஏன் நியமித்தார்கள் என்பதற்கான விடை, இந்தப் பதில் மூலமாகத் தான் கிடைக்கிறது. தான் சொல்வதைக் கூச்சமில்லாமல் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்று நினைத்துத்தான் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘இந்தியாவில் இறுதிச் சடங்கு, உடல் அடக்கம், உடல் தகனம் போன்ற சவக்கிடங்குச் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் அவர் சொல்லி இருக்கிறார். பழைய சுடுகாட்டுக்கு வரி இல்லையாம். செத்துப் போனவர்கள் ‘புண்ணியம்’ செய்தவர்கள். புதிய சுடுகாட்டுக்கு வரி உண்டு. வாழ்பவர்கள் ‘பாவம்’ செய்தவர்கள்! அவர்கள் அகராதியில் இதுதானே சரியானது?
‘உங்கள் தமிழ்நாட்டில்’ என்று சொல்லும் அளவுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதானம் தவறி இருக்கிறார். ‘எங்கள்’ தமிழ்நாட்டைப் பார்த்தால் உங்களுக்கு எதற்காக எரிகிறது? ‘தமிழ் பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல’ என்பது இதன் மூலம் புரிகிறதா?
தமிழ்நாட்டில் என்ன நடந்துள்ளது இந்த ஓராண்டு காலத்தில் என்பதே பாவம் அந்த நிதி அமைச்சருக்குத் தெரியவில்லை. “பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறீர்கள்” என்றால், ‘தமிழ்நாட்டில் ஏன் குறைக்கவில்லை என்கிறார் அவர். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தோமே, இது தெரியாதா அவருக்கு?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் ஒன்றிய அரசு வரிக் குறைப்பு செய்தது. அதற்கு நான்கு மாதம் முன்பே ஆகஸ்ட் மாதம் 3 ரூபாயைக் குறைத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒன்றிய அரசின் வரிக் குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியும் 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசன். இதன்படி பார்த்தால் தி.மு.க. ஆட்சியில் லிட்டருக்கு 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் நாம் சொன்னது “5 ரூபாய் குறைப்போம்” என்பதுதான். அதனைச் செயல்படுத்தியாகி விட்டது.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் எளிமையாகச் சொன்னார்: ‘பெட்ரோல் விலையை யார் குறைக்க வேண்டும்? யார் ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்க வேண்டும்’ என்றார். நிர்மலா சீதாராமன் தான் குறைக்க வேண்டும்.
உங்களை நோக்கி வரும் கேள்விக்கு, நேரடியாகப் பதில் சொல்லிப் பழகுங்கள். பதிலை, அடுத்தவர் மீதான பழியாக மாற்றாதீர்கள். இதுதான் நிதான இழப்பின் முதல் கட்டம் ஆகும். நாடாளுமன்றம் என்பது விவாதக் களம். கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்க இது கோரஸ் கூடம் அல்ல.