பழனிசாமி அப்போது முதலமைச்சராக இருந்தார். டெல்லி போனார். "உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?' என்று நிருபர்கள் அவரிடம் கேட்டார்கள். "யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை" என்றார் பழனிசாமி. அத்தகைய யோக்கியவான்தான் பழனிசாமி. அத்தகைய வெட்கமில்லாத பதிலைச் சொன்னவர், தன் மீது வழக்குப் பாய்ந்ததும் விழுந்தடித்துக் கொண்டு உச்சநீதிமன்றம் போனார். தடை வாங்கினார்.
உச்சநீதி மன்றத்தில் தடை வாங்கிவிட்ட காரணத்தால் மகாயோக்கியரைப் போல ஊருக்குள் வலம் வந்தார். இதோ, உச்சநீதிமன்றம் அந்தத் தடைகளை விலக்கிக் கொண்டு அவர் மீதான ஊழல் வழக்குகளை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது. பழனிசாமி இனி தப்ப முடியாது!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி கஜானாவை பழனிசாமி, பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேர் பிரித்து வைத்துக் கொண்டார்கள். நிதிகள் அனைத்தும் இவர்கள் ஐவருக்குள் புழங்குவதைப் போல பார்த்துக் கொண்டார்கள். பொதுப்பணி, நெடுஞ்சாலையைத் தானே வைத்துக் கொண்டார் பழனிசாமி. அதனை யாருக்கும் தரவில்லை அவர். இந்தத் துறையை வைத்துக் கொண்டு தன் ஆவர்த்தனம் செய்தார் பழனிசாமி.
பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் ஊழல் வழக்காக அது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இதுகுறித்து பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார்.
இப்போதல்ல 2018 ஆம் ஆண்டே வழக்குத் தாக்கல் செய்தார். ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி பாளையம் ஆகிய நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது ரூ.713 கோடியாக உள்ள நிலையில் அந்தத் திட்டத்திற்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஒப்பந்தம் பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி, செங்கோட்டை, கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். பாலாஜி டோல்வேஸ் நிறுவனத்தில் சேகர்ரெட்டி, நாகராஜன், சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத் துறையின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் எஸ்.பி.கே. அன்ட் கோ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 5 வருடங்களுக்கான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அன்ட் கோ விற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதி மன்ற விசாரணையின் போது ஆர்.எஸ்.பாரதி ஆதாரங்களுடன் தெரிவித்தார்.
தனது உறவினர்களுக்கே பெரும்பாலான ஒப்பந்தங்களைக் கொடுத்தார் என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. இதன் மூலம் பழனிச்சாமி, தனது நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ்.பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது. அந்த வழக்கு அப்படியே கிடந்தது. ஆட்சி மாறியது, காட்சியும் மாறியது. தமிழக அரசு தரப்பில் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இவ்வழக்கு கடந்த நான்கு ஆண்டு காலமாக உச்சநீதி மன்றத்தின் விசாரணைக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கின் விசாரணை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விரைந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை உயர்நீதி மன்றமே விசாரிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பழனிசாமிக்கு இன்னமும் கூஜா தூக்கும் ஊடகங்கள், ' சி.பி.ஐ. விசாரணை ரத்து' என்று மகிழ்ச்சி அடைகின்றன. சி.பி.ஐ. விசாரணைதான் வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தரப்பு வலியுறுத்தவில்லை.
'சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும், யார் விசாரிக்கிறார்கள் என்பது பிரச்சினை அல்ல' என்று வாதிட்டார்கள். பழனிசாமி மீதான வழக்கையே உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தால் மட்டும்தான் பழனிசாமியின் கூஜா ஊடகங்கள் மகிழ்ச்சி அடைய முடியும். மாறாக, நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த விசாரணையின் கட்டுக்களை அவிழ்த்து விட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
முன்பு இதனை விசாரித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட நீதியரசர் ஜெகதீஸ் சந்திரா அவர்கள், "இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசுத் தரப்பு வாதமும் அதே நிலையில்தான் உள்ளது. மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகள் கூறப்படும்போது, குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும்.
ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதுபோல் செயல்படவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்புதான். அரசிய லமைப்பில் கூறப்பட்டுள்ளபடி நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றம் செய்வது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். அதிக அதிகாரம் கொண்டுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும்போது அது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்கள். இதே நோக்கத்துடன்தான் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்துக்கே வந்துள்ளது. பழனிசாமி தப்ப முடியாது!