முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.11 2022) தலையங்கம் வருமாறு:
32 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனை பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்பது மிகமிக முக்கியமானது ஆகும். சட்டம், மனித உரிமைகள் என்பதைத் தாண்டி ஒரு மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருக்கிறார்கள். இதில் பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி இருந்தார். தன்னை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பிணையில் விடுவிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார். இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு விசாரித்தது.
பேரறிவாளனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவரை பிணையில் விடுவித்துவிட்டது. இப்படி விடுவிப்பதற்கு முன்னதாக நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வைத்தவாதம், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதாக அமைந்திருந்தது. இவர்களின் தண்டனையைக் குறைக்கலாம் என்று தமிழக அமைச்சரவைக் கூட்ட முடிவை ஏற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டு ஆளுநர் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அதில் முடிவெடுக்காமல் தாமதித்த ஆளுநர், அந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி குழப்பத்துக்கு வித்திட்டார். இதுதான் இத்தனை ஆண்டு காலதாமதத்துக்குக் காரணம் ஆகும்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் மரண தண்டனையை 18.2.2014 அன்று உச்சநீதிமன்றம்தான் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அவர்களை விடுதலை செய்யும் முடிவை உரிய அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை அமர்வே அன்றைய தினம் உத்தரவிடவும் செய்தது. அங்கேயே மாநில அரசின் முடிவுதான் முக்கியமானதாக உறுதி செய்யப்பட்டது. ‘உரிய அரசு விடுவிக்கலாம்' என்றால், ‘அந்த உரிய அரசு எது' என்று உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. உரிய அரசு என்றால் அது மாநில அரசுதான் என்று 2.12.2015 அன்று உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. மாநில அரசு முடிவெடுத்துவிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
18.4.2018 அன்று ஏழுபேர் விடுதலை குறித்து ஒப்புதல் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியது. இது தொடர்பாக 6.9.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் போனாலும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 161 இன் படி மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டார்கள். இதன்பிறகுதான் அ.தி.மு.க. அமைச்சரவை 9.9.2018 அன்று கூடி ஏழுபேரை விடுதலை செய்ய முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அப்போதும் ஆளுநர் முடிவெடுக்காமல் வைத்திருந்தார்.
21.1.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்கள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, ‘குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும்' என்று ஆளுநரும் கடிதம் அனுப்பினார். இது 2021 பிப்ரவரி மாத நிலவரம் ஆகும்.
ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களிடம் உள்ள கடிதத்துக்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்டார் முதலமைச்சர். பதில் வரவில்லை. இதற்கிடையில் பேரறிவாளன் வழக்கு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ‘மாநில அரசின் எல்லைக்கு உட்பட்டதுதான் இந்த விவகாரம்' என அழுத்தமாக குறிப்பிடப்பட்டது.
இதே வாதத்தை அழுத்தமாக நேற்றைய தினம் தமிழக அரசின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வைத்தார். “பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது. இந்திய தண்டனைச் சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ் வருகிறது.
எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன பிரிவு 161 படி அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது. அவர் புதிய முடிவு எடுக்கத் தேவை இல்லை. அரசு முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தேவை இல்லை” என்று கூறினார் தமிழக அரசின் வழக்கறிஞர்.
இதனையே தனது மையக் கேள்வியாக உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்களும் எழுப்பினார்கள். “இது அமைச்சரவையின் முடிவு. அதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் சுதந்திரமான இடம் உள்ளதா? ஏன் மத்திய அரசுக்கு அனுப்பினார்? அவர் மாநில அரசின் பிரதிநிதியா ஆளுநருக்கு சில விலக்குகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது. இந்த வழக்கில் ஆளுநருக்கு சுதந்திரமான விருப்புரிமை ஏதேனும் உள்ளதா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வரராவ்.
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறிய அனைத்து வாதங்களையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்துள்ளது உச்சநீதிமன்றம்