முரசொலி தலையங்கம்

“மேகதாது அணையை தடுப்பது என்பது அரசியல் அல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை” : முரசொலி தாக்கு!

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. அத்தகைய அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும்.

“மேகதாது அணையை தடுப்பது என்பது அரசியல் அல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை” : முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேகதாது அணையைக் கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசு ஒதுக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. தடுக்கப்பட வேண்டியது. ஒரு மாநிலம் நல்ல நோக்கத்துக்காக அணை கட்டுமானால் அதனை நாம் குறைசொல்லப் போவது இல்லை. அது அவர்களது விருப்பம் சார்ந்தது. ஆனால் இன்னொரு மாநிலத்தின் நன்மையைத் தடுக்கும் நோக்கத்தோடு ஒரு அணைகட்டப்படுமானால் அதைத் தடுக்க வேண்டியது அனைவரது கடமையாகும்.

மேகதாது அணை என்பது கர்நாடக மாநிலம் தனது மக்களின் நன்மைக்காக மட்டும் கட்டவில்லை. தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் நன்மையைத் தடுக்கும் நோக்கத்துடன் கட்டப்படுவதால் அதனை நாம் தடுக்க வேண்டி உள்ளது. கண்டிக்க வேண்டியதாக உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. அத்தகைய அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். எனவே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. அதில் உறுதியாக இருக்கிறோம் - என்று தமிழ்நாடு அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என்று மாண்புமிகு பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்கும் போதும் சொன்னார்கள். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், ஒன்றிய அமைச்சரைச் சந்தித்தும் சொன்னார்கள். அனைத்துக் கட்சிக்கூட்டம் போட்டு இதனையே தீர்மானமாகவும் நிறைவேற்றி இருக்கிறோம். அந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிக்குழு டெல்லி சென்றும் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது கண்டனத் துக்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய முயற்சி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சி மைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களும் எவ்விதமான அனுமதி களையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம்” - என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் எழுப்பி உள்ள குரல் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தமான குரல் ஆகும்.

தமிழ்நாடு இப்படி ஒட்டுமொத்தமாக எதிர்ப்புத் தெரிவிப்பதை உணர்ந்த ஒன்றிய அரசு, மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம், அனுமதி வழங்க மாட்டோம் என்று சொல்லி இருந்தது. இது தமிழக அரசுக்கு, அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடம் இருந்து இத்தகைய வாக்குறுதிகள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதி களை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.

கர்நாடக அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணைக் கட்டும் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. “இது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முரணானது” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைக் கண்டித்து தமிழக சட்டமன்றக்கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் துரை முருகன் கூறி இருக்கிறார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் எதிரானது ஆகும். தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட கர்நாடகாவால் முடியாது. ஒரு மாநிலத்தில் ஓடும் நதியை ஒரு மாநிலம் மட்டுமே சொந்தம் கொண்டாடவும் முடியாது. மேகதாது பற்றி விவாதிக்கவே காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அனுமதி தரவில்லை. அப்படி இருக்கும் போது, அவர்களால் எப்படி அணை கட்ட முடியும்?

கடந்த ஐம்பது ஆண்டுகளாக முற்றுப் பெறாத பிரச்சினையாக இது இருக்கிறது. 1968 ஆம் ஆண்டு கர்நாடக அரசு அணைக் கட்டத் தொடங்கிய போது அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சரான கலைஞர் அவர்கள்தான் முதன் முதலாக கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கர்நாடக அரசு ஒத்துழைக்காத நிலையில் 1970 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தவர் முதல்வர் கலைஞர். இதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971 ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். ஹேமாவதி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க. அரசு.

அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காவிரி உரிமை மீட்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. 1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, முதல்வர் கலைஞர் முயற்சியால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்காலத் தீர்ப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 1997 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமையக் காரணமாக இருந்தவரும் முதல்வர் கலைஞர். காவிரி இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் என்று தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத் துக்கும் போனோம். காவிரி மன்றத்தையும் நாடினோம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னோம். கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி என்பது காவிரி உரிமையை நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ஜூலை 10, செப்டம்பர் 20 ஆகிய இரண்டு நாட்களும் விசாரணை நடந்தது. இங்குதான் பழனிசாமி அரசின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டது. சரியான வாதங்களை வைத்து தமிழக அரசு வாதாடவில்லை.

அதிகாரம் பொருந்திய ஆணையத்தை அமைக்க முந்தைய அ.தி.மு.க. அரசு வலியுறுத்தாமல், ஒன்றிய அமைச்சகத்தின் கிளை அமைப்பாக ஆணையத்தை அமைக்க தலையாட்டியதன் விளைவுதான் கர்நாடக அரசு இவ்வளவு தூரம் நடப்பதற்குக் காரணம் ஆகும். அதிகாரம் பொருந்திய அமைப்பு இருந்தால், அவர்களே கர்நாடகாவை தட்டிக்கேட்பார்கள். அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. தன் கையே தனக்குதவி என்பதைப் போல தமிழகமே சேர்ந்து எதிர்ப்பைக் காட்டி மேகதாது அணையைத் தடுத்தாக வேண்டும்.

‘மேகதாதுவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ என்று பா.ஜ.க. அண்ணாமலை பாடம் நடத்தி இருக்கிறார். ‘நான் கன்னடன் தான்’ என்று சொன்ன அவரது வாயில் இருந்து இதுதானே வரும்! மேகதாதுவை தடுப்பது என்பது அரசியல் அல்ல, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை!

banner

Related Stories

Related Stories