முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.9 2022) தலையங்கம் வருமாறு:
உக்ரைன் நாட்டுப் போரால் நாடு திரும்பிய தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மக்கள் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு முதலமைச்சரால்தான் இந்தளவுக்கு துரிதமாக நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று பாராட்டுகிறார்கள்.
“தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, கடல் கடந்து தமிழர்கள் எங்கு சென்றி ருந்தாலும் அவர்களையும் காக்கும் அரசாக தி.மு.க. அரசு செயல்படும்'' என்பதை முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அவை அனைத்தும் வாய் வார்த்தையாக அல்ல. செயலாகவும் காட்டி வருகிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம்தான் உக்ரைன் மாணவர்கள் மீட்பாகும்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய நாடு போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர், பெரிய நாடுகளின் உக்கிரத்தைக் காட்டும் போராக இருக்கிறது. இந்த போரின் காரணமாக, உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் ஒரு பகுதியினர், இந்தியா வில் இருந்து படிக்கச் சென்றவர்களாவர். இதில் குறிப்பாக தமிழக மாணவர்கள் அதிகம். மிக மோசமான ‘நீட்' தேர்வால் தமிழகத்தில் இருந்து தப்பியோடி, உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் இவர்கள். அவர்களை ‘போர்' அங்கிருந்து விரட்டுகிறது. அத்தகைய ஆபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், போர் தொடங்கியதுமே துரிதமான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் கொண்டகுழுவை முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அமைத்தார்கள். இந்தக் குழு டெல்லியிலேயே தங்கி தனது பணிகளைச் செய்து வருகிறது. தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனும் இவர்களோடு இணைந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்தக் குழுவினர், ஒன்றிய வெளியுற வுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தார்கள்.
உக்ரைன் நாட்டில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் உடனடியாக இந்தியாஅழைத்து வரப்பட வேண்டும் என்று இக்குழுவினர் கோரிக்கை வைத்தார்கள். அதிகமான விமானங்களை அனுப்பி வைக்கிறோம், இரண்டு நாளைக்குள் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறோம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார். அதன்பிறகுதான் கூடுதலான விமானங்களை அனுப்பி வைத்தது ஒன்றிய அரசு.
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த துரிதமான நடவடிக்கைகளின் காரணமாக, உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் இதுவரை 1,350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பி விட்டார்கள். டெல்லிக்கு வந்த மாணவர்களை, தமிழக மீட்புக் குழுவினர் சந்தித்தார்கள். அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியையும் இக்குழுவினர் செய்தார்கள்.
டெல்லி வந்த மாணவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களுக் குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. 136 மாணவர்கள் தனிவிமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். சில மாணவர்கள் தங்களின் வளர்ப்பு உயிரினங்களுடன் வந்ததால் அவர்கள் ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
“இன்னும் வர வேண்டிய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் வந்து விடுவார்கள். உக்ரைனில் இருந்து மாணவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பும் வரை மீட்புக் குழுவினர் டெல்லியில் முகாமிட்டுக் கண் காணிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா கூறியிருக்கிறார். இது முதலமைச்சரின் முழுமையான அக்கறையைக் காட்டுகிறது.
‘நீட்’ தேர்வின் காரணமாகத்தான் இவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை உணர்ந்து ‘நீட்’தேர்வை இனியாவது ரத்து செய்யவேண்டும்' என்றும் முதலமைச்சர் அறிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள இன்னொரு கடிதம், மாணவர்களின் கல்வியின் மீது அவர் வைத்துள்ள அக்கறையைக் காட்டு வதாக அமைந்துள்ளது.
உக்ரைன் போரின் காரணமாக படிப்பை பாதியில் விட்டு விட்டுத் திரும்பிய மாணவர்களின் படிப்பை தொடர்வது குறித்து அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “தற்போதைய சூழல், அம்மாணவர்களின் படிப்பை சீர்குலைத் துள்ளது. அவர்களின் எதிர்காலம் அச்சுறுத்த லாக உள்ளது. தற்போது நிலவும் சூழலில் இந்த மாணவர்கள் உக்ரைனில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவதும் படிப்பைத் தொடர்வதும் நடைமுறையில் சாத்தியமில்லை. போர் நிறுத்தப்பட்ட பின்னரும் இயல்பு நிலை திரும்பும்வரை இந்த நிச்சயமற்ற தன்மை நிலவும். படிப்பு தடைப்பட்ட மாணவர்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பைத் தொடர உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
“இது தொடர்பாக இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தமிழகஅரசு இடை விடாத ஆதரவை அளிக்கும்” என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். இது மிகமிக முக்கியமான வேண்டுகோள் ஆகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றும் நடவடிக்கையாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு மதுரை வரும் வழியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மாணவர்களில் சிலரை முதலமைச்சர் சந்தித் துள்ளார். உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்ப அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசு ஏற்றதற்கு அந்த மாணவர்கள் நன்றி தெரிவித் துள்ளார்கள். பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
“உங்களின் தேவைக்காக எப்போதும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அவர்களிடம் சொல்லித் திரும்பி இருக்கிறார் முதலமைச்சர்.
இது மக்களின் அரசு, அனைத்து மக்களின் அரசு என்பதை திரும்பத் திரும்பத் தனது செயலால் உணர்த்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!