ஒரு காலத்தில் சசிகலாவுடன் அதர்ம யுத்தம் நடத்தி தோற்றுப் போய் - இப்போது பழனிசாமியுடன் அதே அதர்ம யுத்தத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஏதோ எல்லாம் தெரிந்தவரைப் போல ‘நீட்’ வரலாற்றை வாசிக்கிறார். யாருடைய காலையும் தவிர வேறு எதையும் நிமிர்ந்து பார்க்காத பன்னீர்செல்வம், ‘நீட் தேர்வு எப்போது வந்தது?' என்ற அடிப்படைக் கேள்வியையே தவறாக எழுதிக் கொண்டு இருக்கிறார்.
‘நீட்’ முதல் தேர்வு 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க. மாநிலத்தை ஆண்டது அ.தி.மு.க. இப்போது சொல்லுங்கள் யார் காரணம்? இவர்கள் இருவர்தான் காரணம்.
இத்தகைய தேர்வு தேவை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் 2010 ஆம் ஆண்டு சொன்னபோது - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதே உச்சநீதிமன்றம் இந்தத் தேர்வுக்கு தடை போட்டுவிட்டது. அதனால் இந்த தேர்வு வரவில்லை.
2014 ஆம் ஆண்டோடு இந்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் கட்சி நகர்ந்தது. அதுவரை இந்த தகுதித் தேர்வு வரவில்லை. தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டுடன் கழக ஆட்சி நிறைவுற்றது. அதுவரை இந்தத் தகுதித்தேர்வு வரவில்லை. இரண்டு ஆட்சிகள் முடிவுற்ற காலத்திலும் இத்தகைய தேர்வு அதிகாரப்பூர்வமாக ஆகவில்லை. அப்படியானால் காங்கிரசும், கழகமும் இதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும்?
இந்திய மருத்துவக் கவுன்சில் இப்படி ஒரு தேர்வை நடத்த 2010 ஆம் ஆண்டு திட்டமிட்ட போதே தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கு முன் ‘நீட்’ தேர்வை தி.மு.க. எதிர்க்கவில்லை என்கிறார் பன்னீர். அவருக்கு ஞாபகம் இல்லையாம்!
பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், அன்றைய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கும் முதல்வர் கலைஞர் அவர்கள் 15.8.2010 அன்று கடிதம் எழுதினார்கள். இது போன்ற தேர்வு முறைகளை நாங்கள் ஏற்க முடியாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்கள்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான மாநில அரசின் முடிவின் காரணமாக, சமூக நீதிக் கொள்கை மற்றும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் அடையும் நன்மைகள் அதிகம்” என்று சொல்லி அதனை பட்டியலிட்டிருந்தார் முதல்வர் கலைஞர்.
27.8.2010 அன்று அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்கள், முதல்வர் கலைஞருக்கு பதில் கடிதம் அனுப்பினார். “மருத்துவப் படிப்பில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது அகில இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்த நடவடிக்கையாகும். எனினும் இக்கருத்தின் மீது மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் விரிவாக ஆலோசனை செய்து அவர்களின் அக்கறையையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என ஒன்றிய அரசு கருதுகிறது.
எனவே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தனது கடிதத்தில் வெளிப்படுத்திய அக்கறையை மனதில் கொண்டு அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசித்தபிறகே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
4.1.2011 அன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் அவர்களுக்கு முதல்வர் கலைஞர் மீண்டும் கடிதம் எழுதினார். முன்மொழியப்பட்ட மருத்துவக் கல்லூரி முதுகலைப் படிப்புகளின் சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை எங்கள் அரசு கடுமையாக எதிர்க்கும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக தி.மு.க. அரசு இணைத்துக் கொண்டது. மருத்துவக் கல்வி நுழைவில் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் நாங்கள் சேர்ப்போம் என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு உறுதி அளித்தது.
இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடுத்தது. 6.1.2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இத்தகைய கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஐதராபாத்தில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் (11, 12, சனவரி 2011) அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டது. அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று அன்றைய காங்கிரசு அரசு 13.1.2011 அன்று அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியது.
மீண்டும் 2012 ஆம் ஆண்டு இது போன்ற பேச்சுகள் கிளம்பியது. இது போன்ற நுழைவுத் தேர்வு முறை கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். ஒன்றிய அரசுக்கும் கடிதம் அனுப்பினார்கள். மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லும் 15 சதவிகித இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள். 29.9.2012 அன்று இந்த அறிக்கைகள் வெளியானது.
நுழைவுத் தேர்வை எந்த வடிவிலும் ஏற்க மாட்டோம் என்று ‘முரசொலி'யில் எழுதினார் கலைஞர் அவர்கள். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியும் தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். ‘நீட்’ தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சிலர் விமர்சித்தார்கள்.
ஜூலை 23 அன்று முரசொலியில் ‘நுழைவுத் தேர்வு தீர்ப்பு - தேவையா எதிர்ப்பு' என்ற தலைப்பில் கடிதம் எழுதினார் தலைவர் கலைஞர் அவர்கள். ‘நீட்’ தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் சென்ற சங்கல்ப் என்ற தனியார் பயிற்சி வகுப்பு நீக்க வாதாடியது. 11.4.2016 அன்று தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். இதன்பிறகு 24.5.2016 அன்று ‘நீட்’ தேர்வை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
இதுதான் ‘நீட்’ வரலாறு. 2010 முதல் எந்த விதமான நுழைவுத் தேர்வும் கூடாது என்று வாதிட்டு வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 2016க்கு முன் அவர்கள் எதிர்த்தார்களா என்பது தனக்கு ஞாபகமில்லை என்கிறார் பன்னீர்செல்வம். அவருக்கு இப்போது ஜெயலலிதாவையே ஞாபகம் இருக்காது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவரை ஒருவர் போயஸ்கார்டன் வீட்டில் சட்டையைப் பிடித்தாரே அதுவாவது ஞாபகம் இருக்கிறதா? கொடநாடு பங்களாவில் மூன்று நாட்கள் வாக்குமூலம் கொடுத்தாரே அதுவாவது ஞாபகம் இருக்கிறதா?