முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜனவரி 20, 2021) தலையங்கம் வருமாறு:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அதற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒரு அரசாணையில் சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு, அதிகாரத்திலும் சம அளவிலான பங்கு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடே, மனிதர்களுக்குள் ரத்த பேதம் இல்லை. மனிதர்களுக்குள் பால் பேதம் இல்லை என்பதுதான். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்புக்கும் பெண் உரிமைக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட்டார்கள். அவரது அடியொற்றிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது, அதற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறது.
நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பொறுப்புகளில் 11 பதவி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.மொத்தம் உள்ள இடங்கள் 21 என்றால், அதில் 11 இடங்கள் பெண் களுக்குத் தரப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களில் 50 சதவிகித இடங்கள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பங்கீடு மிகச் சரியாகச் செய்யப்பட்டுள்ளது.
9 மாநகராட்சி மேயர் பதவியானது பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்டியலினப் பெண்களுக்கு 2 மேயர் பதவிகள் தரப் பட்டுள்ளது. பட்டியலின ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரு இடம் தரப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் பார்த்தால் தாம்பரம், சென்னை ஆகிய இரண்டு மாநகராட்சிகளும் பட்டியலின பெண் வகுப்புக்குத் தரப்பட்டுள்ளது. ஆவடிமாநகராட்சி பட்டியலினத்தில் ஆண், பெண் ஆகிய இருவருக்கும் பொதுவானது.
கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக 1971 ஆம் ஆண்டுதி.மு.க. ஆட்சியில் காமாட்சி ஜெயராமன் என்ற பெண் மேயராக இருந் துள்ளார். ஐம்பது ஆண்டுகள் கழித்து ஒரு பெண், அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மேயராக ஆகிடவுள்ளார். என்றெல்லாம் வரும் செய்திகள்திராவிட இயக்கத்தின் அதிகாரப் பரவலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம், 1927ஆம் ஆண்டுநடந்த, சென்னை மாகாண பார்ப்பனரல்லாத இளைஞர் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
1928 ஆம் ஆண்டு சென்னையில் சீர்திருத்தக்காரர்கள் மாநாடு என்ற ஒரு மாநாடு தந்தை பெரியார் தலைமையில் நடந்துள்ளது. “குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் ஆண்களைப் போல சம உரிமை அளிக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநாடு பெரிய அளவில் நடந்தது. இந்த மாநாட்டில்தான் “பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும் வாரிசு பாத்தியதையும் கொடுக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை நிறைவேற்றிக்காட்டும் ஆட்சியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்திருந்தது. 7.5.1989 ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக
* பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம்.
* பணியிடங்களில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு.
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு.
*பெண்களை தன் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது.
*ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது.
*ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரைநியமித்த அரசு தி.மு.க. அரசு.
*கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு.
* மகளிருக்குப் பேருந்துகளில்கட்டணமில்லாப் பயணம். இத்தகைய சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியாக, ஐம்பது சதவிகித அதிகார மிக்க இடங்கள் பெண்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு கல்வி அளித்தல், வேலைவாய்ப்பு அளித்தல் ஆகியவற்றைச் சரியாகச் செய்யும் போது, அதிகாரம் அளிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.ஆம், அத்தகைய அதிகாரமளித்தல்தான் இப்போது நடக்கிறது. அதிகாரக் கட்டமைப்புகளில் முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களை அமர்த்துவதுதான் அதிகாரம் அளித்தல் ஆகும். முடிவுகள் எடுக்கும் இடத்தில் பால் பேதம் காரணமாக ஒரு பெண் புறக்கணிக்கப்பட்ட தன்மையை அதிகாரம் அளித்தல் என்பது முற்றிலுமாக தடை செய்கிறது. அனைத்துக்கும் தகுதி வாய்ந்தவர் தான் பெண், என்பதை சமூகத்துக்கு உணர்த்துகிறது. பாலின பேதத்தை அகற்றுகிறது. காலம் காலமாக ஆணின் பார்வையில் பார்க்கப்பட்டஅனைத்தும், ஒரு பெண்ணின் பார்வையில் பார்க்கப்படுகிறது. பிரச்சினைகள் அனைத்தும் மாற்றுத் தன்மையுடன் உற்று நோக்கப்படுகிறது.
ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைவதையும் - அரசியல் அதிகாரம் பெறுவதையும் - ஒரு அளவீடாகக் காட்டுகிறார்கள். பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைந்த ஒரு பெண்கூட, சுதந்திரமாக இல்லாமல் இருக்கும் சூழலும் குடும்பங்களில் உண்டு. அதுபோன்ற தன்மை அதிகாரம் பெறும் போது அவ்வளவாக இல்லை. அனைத்துத் தடைகளையும் உடைத்து பெண், தானே எழுந்து நிற்கவே செய்கிறார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிவகை காட்டியுள்ள பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது, காலப்போக்கில் பெண்களின் அரசியல் சுதந்திரத்துக்கு அடித்தளம் அமைப்பதாக அமைந்துள்ளது.
சமூகநீதி ஆட்சி - திராவிட மாடல் ஆட்சியின் அளவீடாக இத்தகைய அறிவிப்புகள் அமைந்துள்ளன.