முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜனவரி 19, 2021) தலையங்கம் வருமாறு:
இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஊர்தியை மறுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்திய விடுதலை வேள்விக்காக விறகு சுமந்த மருது சகோதரர்களும், இராணி வேலுநாச்சி யாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், மகாகவிபாரதியாரும்தான் அதில் இடம் பெற்றிருந்தார்களே தவிர, விடுதலைப் போராட்டத்துக்கு தொடர்பில்லாத யாரும் இடம் பெறவில்லை.இதை பிரதமர் மோடியின்கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மொழி என்றால் இந்தி மட்டும்தான் என்று நினைக்கக் கூடிய குறுமதியாளர்கள் டெல்லியின் ஆட்சிப் பீடத்தில் அதிகமாகி விட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது.ஏதோ தேசத்துக்காகத் தாங்கள்தான் போராடியதைப் போன்ற மாயத்தோற்றத்தை வடக்கு எப்போதும் உருவாக்கும். அதனினும் மோசமாக, தெற்கு எப்போதும் போராடவில்லை என்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கும். வரலாற்றின் அரிச்சுவடியை உணர்ந்த யாரும் இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
வடக்கு சுருண்டு கிடந்தபோதே சுதந்திரத் துக்காகப் போராடியது தெற்கு. வடக்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது எல்லாம், வரி கட்ட மறுத்தது எல்லாம் 1920க்குப் பின்னால்தான். ஆனால் ‘ஒரு நெல் மணியைக் கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது' என்று 1755 ஆம் ஆண்டு சொன்னவன் பூலித்தேவன். அதனால் நெல்கட்டாஞ்செவல் என்ற ஊரினையே பெயர் மாற்ற வைத்தவர்.
சிவகங்கைக்கு அருகிலுள்ள பனையூரைச் சேர்ந்த கான்சாகிப் மருத நாயகத்தின் வரலாறு, வரலாற்றின் இரத்த வரிகளால் எழுதப்பட்டது. அவனை தூக்கிலிட்ட ஆண்டு 1764. அதற்கு 44 ஆண்டுகள் கழித்து கயத்தாறு மரத்தில் தூக்கிலிடப்பட்டவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். ‘தானம் கேள் தருகிறேன், வரி என்று கேட்டால் தர மாட்டேன்’ என்று சொன்ன மாவீரன்தான் கட்டபொம்மன். வீரபாண்டியனின் மொத்தப்படைக்கும் தலைமை வகித்தார் சுந்தரலிங்கம். வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை தீக்கிரையாக்கிய தீரன் சுந்தரலிங்கம்.
முத்துவடுகநாதரின் மனைவிதான் வீரமங்கை வேலுநாச்சி. காளையார் கோவில் தாக்குதலில் கணவர் கொல்லப்பட்டார். காளையார்கோவில் சூறையாடப்பட்டது. சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி, தன்னைப் போன்ற சுதந்திர தாகம் கொண்டவர்கள் அனைவரையும் அணிசேர்த்துசுதந்திரப் படை அணி கட்டியவர் வேலுநாச்சி. படைகளை வெவ்வேறு முனைகளுக்குப் பிரித்து வியூகம் அமைத்த வீரமங்கை அவர். பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்குப் பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் நாச்சி.
சின்னமருதுவும், பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்னால் வலரியால் வாகை சூடியவர்கள். ‘சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை’ என்று சொல்லி மறைந்து இன்றும் வரலாற்றில் பெரும் மலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை.
1857 சிப்பாய் கலகத்தை முதலாவது இந்திய சுதந்திரப் போர் என்று அவர்கள் சொல் கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில் அதுவும் தமிழகத்தில் நடந்தவைதான் இவை. இந்த 1857 ஆம் ஆண்டுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக வேலூரில்நடந்தது தான் முதலாவது சிப்பாய் புரட்சி ஆகும். 1806 ஆம் ஆண்டு வேலூர்கோட்டையில் எழுந்த அதிர்ச்சிதான் பிரிட்டிஷாரை முதன்முதலாக வேர்க்க வைத்தது. ஆங்கிலச் சிப்பாய்கள் தூங்கிக் கொண்டு இருந்த இடத்தை இந்தியச் சிப்பாய்கள் முற்றுகையிட்டார்கள்.
இதில் 200க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலக் கொடிஇறக்கப்பட்டு, திப்புசுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த எழுச்சிபின்னர் அடக்கப்பட்டதுதான் என்றாலும், அந்த எழுச்சி தான் இந்தியா முழுமைக்கும் கிளர்ச்சியை உருவாக்கியது. இனி இவர்களை இப்படியே ஆள முடியாது என்ற எண்ணத்தை பிரிட்டிஷாருக்கு உருவாக்கியது. சலுகைகளின் மூலமாக தங்களதுஅதிகாரத்தை தக்க வைக்க நினைத்தது பிரிட்டிஷ் அரசு.
இவற்றுக்குப் பிறகு தான் 1857 சிப்பாய் புரட்சி வடக்கில் நடக்கிறது. அதன்பிறகுதான் மங்கள் பாண்டே வருகிறார். எனவே, எல்லாக் காலத்திலும் தெற்குதான் வழிகாட்டி வருகிறது. அன்று முதல் இன்று வரை தெற்குதான் நல்லவை அனைத்துக்கும் முன்னோடும் பிள்ளையாக இருந்து வருகிறது. இந்தப் பொறாமையின் வெளிப்பாடாகத்தான் தமிழக ஊர்திகளை புறக்கணித்திருக்கிறார்கள்.
வேலுநாச்சியார் பற்றியும் பாரதியைப் பற்றியும் பிரதமர் மோடி பேசி வருவது எத்தகைய வாய் வார்த்தை மட்டுமே என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. இதனைத்தான் மிகச் சரியாக தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். “வேலுநாச்சியார் வீரத்தை வணங்கி கடந்த 3 ஆம் தேதி ட்விட் செய்தார்மோடி அவர்கள். நேற்று வ.உ.சி., வேலுநாச்சியார் திருவுருவம் இடம் பெற்ற குடியரசு தின அணிவகுப்புக் கான தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. இடைப்பட்ட நாட்களில் இந்திய சுதந்திரவரலாற்றை மாற்றியது யார்?’’ என்று கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
உண்மையான தியாகிகளை மறைப்பதன் மூலமாக தங்களைத் தியாகிகளாக உயர்த்திக் கொள்ளும் தந்திரம் இது. இந்தி பேசும் மாநிலத்தவர் மட்டுமே சுதந்திரத்துக்காக போராடியவர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி, தென்னக மக்களை சுதந்திரத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களாகவும் தேச விரோதிகளாகவும் கட்டமைக்க நினைக்கிறார்கள். தென்னகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர்கள் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை.
“இங்கே காந்தியின் பேரால், நேருவின் பேரால், திலகரின் பேரால் தெருவுக்குப் பெயர் இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் வ.உ.சி.க்கோ, பாரதிக்கோ தெருப்பெயர் இருக்கிறதா?’’என்று கேட்டார் பேரறிஞர்அண்ணா. நாம் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய அனைவரையும்தேசத் தலைவர்களாகத்தான் பார்க்கிறோம். ஆனால் அவர்கள், அவர்களுக்குள்வடக்கா, தெற்கா என்று பார்க்கிறார்கள் என்றால் எல்லைக் கோடு என்பதை மூளையில் போட்டு வைத்துள்ளார்கள். இதுதான் கெடுதலை எண்ணம் ஆகும்.