முரசொலி தலையங்கம்

“தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திய களங்கத்தை யார் துடைப்பது?” : EPS - OPS கும்பலுக்கு பதிலடி கொடுத்த முரசொலி!

முன்னாள் அமைச்சர் தங்கமணி அமைச்சராக இருந்த காலத்தில் எல்லாக் களங்கத்தையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தி விட்டு இறங்கியவர்கள்தான் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பல்.

“தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திய களங்கத்தை யார் துடைப்பது?” : EPS - OPS கும்பலுக்கு பதிலடி கொடுத்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏற்கனவே நிலக்கரி பூசப்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர் தங்கமணி. தனது வீட்டில் இலஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்டு நடத்தி உள்ளதை அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாக தங்கமணி சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அமைச்சராக இருந்த காலத்தில் எல்லாக் களங்கத்தையும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தி விட்டு இறங்கியவர்கள்தான் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பல். அவர்கள் களங்கப்படுத்துகிறார்கள் என்று புலம்புவது எல்லாம் மிகப்பெரிய நாடகத்தின் சோகக் காட்சிகள் என்றுதான் சொல்லவேண்டும்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அவருக்குத் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 12 மணி நேரம் சோதனை நடத்தி 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாதுகாப்புப் பெட்டக சாவிகளை கைப்பற்றியுள்ளனர்.

தங்கமணி, 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வரு மானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை. நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் அருகே உள்ள தங்கமணியின் வீட்டில் சோதனையை தொடங்கினர். சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் எழும்பூர், தியாகராயர் நகர், செனாய் நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்தது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தங்கமணியின் மகன், மருமகன் வீடு, தங்கமணியின் சம்பந்தி உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.

இந்த சோதனையின் போது 2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 45 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 130 கிராம் தங்க நகைகளும், 40 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் வராத 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை தங்க மணி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்கமணியின் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் உறுதி செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சமாகப் பெற்ற பலகோடி ரூபாய் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும், போலி நிறுவனங்களிலும் தங்கமணி முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தனை குற்றச்சாட்டுகளும் ஏதோ பொதுவெளியில் யாரோ சொன்னது அல்ல. எழுத்துப் பூர்வமாக இலஞ்ச ஒழிப்புப் போலீசார் சொல்லி இருக்கிறார்கள்.

தங்கமணி அமைச்சராகப் பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.1,01,86,017ஆக இருந்த நிலையில், அவர் பதவி முடிவுக்கு வந்தபோது சொத்து மதிப்பு ரூ.8,47,66,318ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கமணி, சாந்தி, தரணிதரன் ஆகிய மூவரும் சட்டப்பூர்வமாக சம்பாதித்த தொகை ரூ. 5,24,86,617ஆக உள்ளது. இவர்களது சேமிப்புகள், செலவுகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, தங்கமணி ரூ.4,85,72,019ஐ தனது வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கமணியும், அவரது மகனும் தங்களது வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சம்பாதித்த சொத்துகளை தமிழ்நாட்டிலும், வெளி மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் முதலீடு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சம்பாதித்த சொத்துகளை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதியப்பட்ட 9 பக்க எஃப்.ஐ.ஆர். நகல் வெளியாகியுள்ளது.

இவை அனைத்துக்கும் வரி வரியாக தங்கமணி பதில் சொல்லி இருக்கவேண்டும். மாறாக, அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை அழிக்கச் சதி என்றும், பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் வலிமை பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில் ரெய்டு நடத்தப்பட்டதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி என்னை பழிவாங்க முயற்சிக்கிறார் என்றும் ஏதேதோ கற்பனைகளை தங்கமணி உதிர்த்திருக்கிறார். வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இவை பதில் வாதங்கள் ஆகாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் திசை திருப்பவே ரெய்டு நடத்துவதாக பழனிசாமி சொல்லி இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றும். அது பொதுமக்களுக்கு நன்கு தெரியும். பழனிசாமி குறுக்கே வரத் தேவையில்லை.

பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும், தங்கமணியும், வேலுமணியும், விஜயபாஸ்கரும் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திய களங்கத்தை யார் துடைப்பது?

banner

Related Stories

Related Stories