முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.6, 2021) தலையங்கம் வருமாறு:
தமிழ்நாட்டு அரசுத் துறைப் பணியிடங்களில் நுழைபவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழாணையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக துறைதோறும் தமிழ் என்பது உயரத்தைப் தொடப்போகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருந்த மகத்தான வாக்குறுதிகளில் ஒன்று இது. தமிழுக்கும் அதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் செய்யப்பட்டுள்ள மகத்தான தொண்டு இது. தமிழினத்துக்குச் செய்யப்பட்ட மாபெரும் கடமை இது.
“தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடம் தகுதித் தேர்வாக கட்டாயம் ஆக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அறிவித்தார். இதனை வெறும் அறிவிப்பாக விட்டுவிடவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு முகமைகளால் அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளிலும், தமிழ் மொழித் தாளினைத் தகுதித் தேர்வாக ஆக்கிவிட்டது தமிழ்நாடு அரசு.
தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தப்படுகிறது.
கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி கட்டாயப்படுத்தப்படுகிறது.
தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதரப் போட்டித் தேர்வுத் தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகளில் ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
தமிழ் மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். 150 மதிப் பெண்களுக்கு நடத்தப்படும்.
இந்த ஆணை வெளியிடப்படும் நாள் முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித்தாள் கட்டாயம் ஆக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் தனித் தனியாக வெளியிடப்படும்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரையிலான அறிவிக்கையை நிதித் துறையில் உள்ளடக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மாநிலக் கழகத்தால் வெளியிடப்படும்.
- இப்படித் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழாக ஒரு ஆட்சி செயல் படுவதற்கு உதாரணம் இது. தமிழின ஆட்சியாகச் செயல்படுவதற்கு எடுத்துக் காட்டு இது.
தமிழ் ஆர்வலர்கள் இதுவரை என்ன சொல்லி வந்தார்கள்? தமிழ்நாட்டுப் பணியிடங்களில் தமிழ் தெரியாதவர்கள் வந்துவிட்டார்கள் என்று சொல்லி வந்தார்கள். அது ஒரே ஒரு அரசாணை மூலமாகத் துடைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அடிமை அ.தி.மு.க. ஆட்சி, தமிழைத் தள்ளிவைத்ததன் காரணமாக தமிழே தெரியாதவர்கள் தமிழ்நாட்டுப் பணியிடங்களில் உள்ளே நுழையும் கொள்ளைப்புறக் கதவு திறந்து விடப்பட்டது. ஒன்றிய அரசுப் பணிகளில் கூட தமிழே தெரியாதவர்கள், தமிழ்த் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உள்ளே நுழைந்த கொடுமையும் அரங்கேறியது. இத்தகைய துயரக் காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் தொடக்கம்தான் இந்த அரசாணை.
“இந்தத் தெளிவான அரசாணை மூலம், தமிழ் தெரியாத எவரும் அரசுப் பணிகளில் இடம்பெற முடியாது என்கின்ற நிலையை ஏற்படுத்துவது மட்டுமல்ல; இந்த வகையிலே தேர்வாகும் அரசுப் பணியாளர்கள் தமிழின்
அருமையறிந்தவர்களாகவும் - அரசின் தமிழ் வளர்ச்சிக் கொள்கைகளை விளங்கிக்கொள்ளுபவர்களாகவும் இருந்திட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் வழியில் ஆட்சியின் பலன்களை அளிக்க உதவும்”
- என்று, மொழி நிகர்மை பரப்பியக்கியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன் சொல்லி இருப்பதுதான், இந்த அரசாணையின் முழுமையான முதன்மையான நோக்கம்.
இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராசனும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
“அரசுப் பணிகளில் அமரக் கூடியவர்களுக்கு, தமிழக மக்கள் அணுகக் கூடிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு தமிழ்ப்புலமை இல்லை என்றால் அந்தப் பொறுப்பு அவர்களுக்குப் பொருந்தாது. அந்த வகையில் தான் தமிழ்மொழித் தேர்ச்சி கட்டாயம் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேறு மாநிலத்தைச்
சேர்ந்தவர்களை பணியிடங்களில் சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு தமிழே
தெரியவில்லை. அதை மாற்றுவதற்கு தான் இந்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது” என்று சொல்லி இருக்கிறார்.
“தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்
முதலமைச்சாய் வருதல் வேண்டும்!
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில்வாராது தடுத்தல் வேண்டும்!”
- என்றார் தமிழியக்கம் கண்ட பாவேந்தர் பாரதிதாசன்.
தமிழாய்ந்த தமிழன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்ததால் மட்டுமல்ல, தமிழ்ப்பகைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு அகற்றியதால் தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெரும் பயன் இது!