மகாத்மா காந்தி பெயரினால் ஆன திட்டத்திலுமா பொய் சொல்வது? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய தொகையைக் கொடுத்து விட்டோம், அதன்பிறகும் தரவில்லை என்று முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சொல்லி இருக்கிறார்.
கடந்த 1 ஆம் தேதியன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி இருந்தார். ஏற்கனவே அமைச்சர் பெரியகருப்பன், டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்திய விவகாரம்தான் இது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து எடுத்துரைத்து, உடனடியாக நிலுவைத் தொகையினை மாநிலத்திற்கு விடுவிக்கக்கோரி அதில் சொல்லி இருந்தார் முதலமைச்சர்.
“கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2021-2022 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ் நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், 1-11-2021 அன்றுள்ளவாறு 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது” என்பதைச் சொல்லி இருந்தார் முதலமைச்சர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப் புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்றும், தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், பல ஆயிரக் கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் சொல்லி இருந்தார். இந்த நிதியை முறையாக வழங்காவிட்டால் இது கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தார். பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தினை வழங்கிட ஏதுவாக, உடனடியாக நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். முதலமைச்சரின் கடிதத்துக்குப் பிறகுதான் 1336 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. நாங்கள் முழுமையாக நிதியை வழங்கிவிட்டோம் என்று எந்த அடிப்படையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சொல்கிறார் என்று தெரியவில்லை.
செப்டம்பர் மாதம் வரை இந்த நிதியாண்டில் 3524 கோடிரூபாய் வந்துள்ளது. அதன்பிறகு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. எட்டு நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் 15.9.2021 முதல் 5.10.2021 வரை ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஊதியமும் வரவில்லை. அதனால்தான் 1 ஆம் தேதி முதலமைச்சர் கடிதம் எழுதினார்கள்.
கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று தமிழக அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள், டெல்லி சென்று ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்தார். நவம்பர் 1 வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால்தான் முதலமைச்சர் கடிதம் எழுதினார். கடிதத்தை பார்த்ததும்தான் 2 ஆம் தேதி பணத்தை ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு. தீபாவளி பண்டிகை வருவதால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக கூடுதல் அழுத்தம் தரப்பட்டது. நிதியை முன்கூட்டியே விடுவித்துவிட்டோம் என்பது அமைச்சர் பேசும் பேச்சாக இல்லை!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் முருகன் சொல்லி இருக்கிறார். 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு செய்தது அவர்களது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. ஆட்சியில். அப்போது இதைப் பற்றி எல்லாம் முருகன் வாயைத் திறந்தாரா? அந்த முறைகேட்டுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முருகன் தயாராக இருக்கிறாரா? 2017 முதல் ஊழல் நடந்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் சொல்கிறார். 2017 முதல் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க.தான்!
விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் பெரியசாமி இதற்கு விரிவான பதிலைக் கொடுத்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் ஒன்றிய அரசு கொடுக் காமல் நிறுத்தி, வைத்திருந்த கூலிப் பாக்கிக்காகத்தான் ரூ.1331 கோடி நிதி விடுவித்துள்ளது. முதலமைச்சர் தலையீட்டால் நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களின் ஊதியப் (கூலி) பாக்கி, அவர்களது வங்கிக் கணக்கிற்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார் பெரியசாமி.
மெய்களின் மூலமாகக் கட்சியை வளர்க்கப் பாருங்கள். பொய்களை நம்பி நடத்தினால் இருப்பதும் போய்விடும்!