"ஆலயங்களில் அவசரம் கூடாது" என்ற தலைப்பில் ‘ஆனந்த விகடன்' வார இதழில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. ஆலயங்களில் அவசரமாக எதுவும் இந்து சமய அறநிலையத் துறையால் நடக்கவில்லை. ‘ஆனந்த விகடன்'தான் உண்மைகள் எதையும் சரிவர உணராமல் தலையங்கத்தை அவசர அவசரமாகத் தீட்டியுள்ளது.
ஒரு தலையங்கம் தீட்டுவதற்கு முன்னால், உண்மையில் அது என்ன மாதிரியான பிரச்னை என்ற குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் அந்தத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. ‘கோயில் நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்குத் தடை விதித்திருக்கிறது' என்று தொடங்குகிறது அந்தத் தலையங்கம்.
முதலில் கோயில் நகைகளை தமிழக அரசு உருக்கப்போவது இல்லை. கோயிலுக்கு பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளைத் தான் உருக்கப்போகிறார்கள். கோயில் நகைகள் என்பது ஆலயங்களில் காலம் காலமாக இருக்கும் நகைகள், கடவுளர்க்கு அணிவிக்கப்பட்டு வரும் நகைகள். இவற்றை உருக்கவில்லை. இவர்கள் சொல்வதைப் போல, சென்னை உயர்நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. ‘அறங்காவலர்களை நியமித்த பிறகு முடிவெடுங்கள்' என்றுதான் சொல்லி இருக்கிறது நீதிமன்றம். இதுவும் இறுதித் தீர்ப்பு அல்ல. இடைக்கால உத்தரவே! வழக்கு இன்னும் முடியவில்லை! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அந்த உத்தரவாதம் கூட, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரால் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியே. அதைத்தான் நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஆரம்பகட்ட அறிவிப்பே மிகமிகத் தெளிவானது. "கோயில்களில் பாரம்பர்யமாக வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நகைகளை அரசு எதுவும் செய்யாது. கடந்த பத்து ஆண்டுகளாக உண்டியலிலும் காணிக்கையாகவும் கோயில்களுக்குச் செலுத்தப்பட்ட நகைகள் குறித்து முறையாகக் கணக்கெடுப்பு நடக்கவில்லை. இவற்றைக் கணக்கெடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் நகைகள் மட்டுமே உருக்கப்படும்" என்று சொன்னார் அமைச்சர் சேகர்பாபு. இதனைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூவர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். அத்தகைய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள். இதே முறைப்படி காணிக்கை நகைகள் உருக்கப்பட்டு சுமார் 600 கிலோ நகைகள் வைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இது புதிய பழக்க வழக்கத்தை தி.மு.க. அரசு உருவாக்குகிறது என்று சொல்ல முடியாது. 2011 வரைக்கும் இது நடைமுறையில் இருந்தது. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் இப்படிச் செய்யாமல் அப்படியே போட்டுவிட்டார்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இப்படி நகைகளை மூட்டை கட்டிப்போட்டு விட்டிருக்கிறீர்களே என்று எவரும் வழக்குப் போடவில்லை. தலையங்கம் தீட்டவில்லை. இப்போது முறைப்படுத்தி பாதுகாக்கப்படும் போது மட்டும் வருகிறார்கள். கோவில்களுக்கு காணிக்கையாக பணமும் வருகிறது. நகையும் வருகிறது. பணம் எண்ணப்பட்டு வங்கிகளில் வைப்பு ஆகிறது. அதேபோல் தான் நகைகளும் வைப்பு ஆவதில் என்ன தவறு இருக்க முடியும்?
‘கோவில் காணிக்கை நகைகளை வைப்பாக ஆக்கக் கூடாது' என்பவர்கள், ‘பணத்தையும் வைப்பாக ஆக்கக் கூடாது, கட்டிப் போட்டு வைக்க வேண்டும்' என்பார்களா? நகைகளைப் பிரிக்க நீதிமன்றம் தடை போடவுமில்லை. உருக்கக் கூடாது என்று சொல்லவுமில்லை. அறங்காவலர்களை நியமித்த பிறகு முடிவெடுங்கள் என்றே சொல்லி இருக்கிறார்கள் நீதிபதிகள். இவ்வளவு தெளிவான வழக்கையும் தீர்ப்பையுமே ‘ஆனந்த விகடன்' திசை திருப்புகிறது. தி.மு.க. அரசுக்கு தவறான முத்திரை ஏற்படும் அளவுக்கு களங்கம் கற்பிக்கிறது. தி.மு.க. அரசு அமைந்து ஆறு மாதம்தான் ஆகி இருக்கிறது. அறங்காவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் எந்தப் பணியும் தொடங்கும். அதையும் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், ‘ஆரம்பம் முதலே இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை' என்று ஆ.வி., தலையங்கம் தீட்டுகிறது. இத்தகைய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமைச் செயலகத்தில் வைத்து வெளிப்படையாகத்தான் தொடங்கி வைத்தார். இது ஒன்றும் நாட்டுக்கு அறிவிக்காமல் ரகசியமாக நடக்கும் கமுக்கத் திட்டம் அல்லவே! செப்டம்பர் 9 இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரால் செப்டம்பர் 22 அன்று அறிவிப்பு தரப்பட்டுள்ளது. அக்டோபர் 13, முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அக்டோபர் 27 இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அறங்காவலர்களை நியமிப்பதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு விட்டது.
தினமும் அமைச்சர்சேகர் பாபு அளிக்கும் பேட்டிகளில் இவை கட்டாயம் சொல்லப்படுகிறது. என்ன வெளிப்படைத் தன்மை இல்லை? முதல் கட்டமாக 47 முதுநிலைக் கோவில்களில் மட்டுமே நகை கணக்கிடும் பணி நடக்கும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காட்சிகளாகப் பதிவு செய்யப்படுகிறது. யாராவது சந்தேகம் கிளப்பினால், அவர்கள் அனுமதி பெற்று இதனைப் பார்வையிடலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதில் என்ன வெளிப்படைத்தன்மை இல்லை?
முன்பெல்லாம் இவை ரகசியமாக நடக்கும். இப்போது எல்லாவற்றையும் ‘வெளிப்படையாக' அறிவிப்பதால்தான் இத்தகைய குறுக்குக் கேள்விகளை எழுப்புகிறார்கள். பத்து ஆண்டுகளாகச் செய்யாததை, ஐந்தே மாதத்தில் இந்த அரசு செய்கிறதே என்ற ஆத்திரம் பலருக்கும் கண்ணை மறைக்கிறது!இவர்களது கோபம் எல்லாம், காணிக்கை நகைகளை உருக்குவதாலா, அல்லது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லிவிட்டார்களே என்பதாலா என்பதை அவர்களது மனச்சாட்சியே அறியும்!