ஜம்மு - காஷ்மீர் மீண்டும் மாநிலம் ஆகட்டும் என்பதே ஜனநாயக சக்திகளின் ஒரே எண்ணம். அதனை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்!
வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள வருமாறு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 14 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முடமாக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியலை மீட்டெடுக்கும் கூட்டமாக அது அமைய வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான கூட்டம் இது என்று டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவையும், லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூரையும் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அழைத்துப் பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. பேரவைத் தேர்தலோடு சேர்த்து இந்த சந்திப்பு முடிச்சுப் போடப்படுகிறது.
பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற விவாதம் ஜம்மு - காஷ்மீர் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மெஹபூபா முஃப்திக்கு அவரின் ஜனநாயக மக்கள் கட்சி வழங்கி உள்ளது. இக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சையது சுஹைல் புகாரி அளித்துள்ள பேட்டியில், “குப்கர் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போகிறது. அதில் தான் பிரதமரின் அழைப்பை ஏற்பதா இல்லையா என முடிவெடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த யூனியன் பிரதேச அரசியல் கட்சிகளுடன் பிரதமர் நடத்தும் முதல் கூட்டம் இது என்பதால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. உன்னிப்பாக கவனிக்க வேண்டியும் உள்ளது.
இக்கூட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது கருத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளது. “ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் ஆகிவிடும்.
மாநிலத் தகுதியை வழங்கிய பிறகு தேர்தல் நடத்தினால்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஒன்றிய அரசின் ஆட்சி அங்கு நேரடியாக நடப்பதற்குப் பதிலாக அங்குள்ள விவகாரங்களை அந்த மாநில மக்களே சுயமாகக் கையாளும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி 2019 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் இருக்கிறது. லடாக்யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையே கிடையாது. இரண்டு பிரதேசங்களையும் இரண்டு தனித்தனி துணை நிலை ஆளுநர்கள் ஆள்கிறார்கள். அதாவது ஒன்றிய அரசே ஆள்கிறது. இது ஜனநாயகம் ஆகாது.
1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு - காஷ்மீர் தன்னிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்குப் பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தைச் சேர்க்க ஒப்புக் கொண்டார். அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது.
1951ஆம் ஆண்டில், ஜம்மு - காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு தகுதி அமலுக்கு வந்தது. அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரது பேச்சுவார்த்தைக்கு பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. இந்த சிறப்புத் தகுதியைத்தான் 2019 ஆகஸ்ட் 5 ஆம் நாள் பறித்தது பா.ஜ.க. அரசு.
இந்த நடவடிக்கைக்காக ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணையதள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இன்னும் அங்கு முழு இயல்பு நிலை திரும்பவில்லை. இயல்பு நிலையைத் திருப்ப முயற்சிப்பதாகக் காட்டிக் கொள்கிறார் மோடி. 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக ஆனபோது, அமைதியான வழியில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றார். 2017 ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ராணுவம் மற்றும் காவல் படைகள் குவிக்கப்பட்டதே தவிர அமைதி திரும்பவில்லை. 2019 ஆம் ஆண்டு பிரதமர் காட்டியதும் அமைதியான வழியாக இல்லை. அம்மாநில அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துக்களைக் கேட்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டது. இம்முறை கருத்துக் கேட்கும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார் பிரதமர். அதே நேரத்தில் ஜம்மு - காஷ்மீரை மீண்டும் மாநிலத் தகுதிக்கு உயர்த்தாமல் அமைதியை உருவாக்கவும் முடியாது.
“ராணுவத்தைத் தவிர, காஷ்மீரின் தெருக்கள் வாழ்விழந்து போயின'' என்று எழுதப்பட்ட ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும். “போலீஸ் மற்றும் ராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கண்களை இழந்தவர்களுக்கென காஷ்மீர் மருத்துவமனைகளில் கண் சிகிச்சை சிறப்புப் பிரிவு உள்ளது'' என்று சொல்லப்படும் மாநிலத்தில் நம்பிக்கை ஒளி பிறக்க வேண்டும். இவை நடக்க வேண்டுமானால் ஜம்மு-காஷ்மீர், முதலில் மாநிலம் ஆகவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.